சிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம் செய்ய மத்திய அரசு உறுதி: பார்லிமென்டில் அனைத்து கட்சியினரும் காரசார பேச்சு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2014

சிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம் செய்ய மத்திய அரசு உறுதி: பார்லிமென்டில் அனைத்து கட்சியினரும் காரசார பேச்சு.


சிவில் சர்வீசஸ் தகுதி தேர்வு முறையை மாற்ற வேண்டும்; தேர்வுக்கான தேதியை வெளியிட்டு, யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பை, உடனடியாக திரும்ப பெற வேண்டும்' எனக் கோரி, காங்கிரஸ் உட்பட, அனைத்து எதிர்க்கட்சிகளும், ராஜ்யசபாவில் நேற்று கடும் அமளியில் இறங்கின. இதனால், ராஜ்யசபா இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய ஆட்சிப்பணிகள் என அழைக்கப்படும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., நிறுவனம் நடத்தி வருகிறது. இதற்கான தேர்வு, ஆகஸ்ட் 24ல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வை கடந்த ஆண்டு எழுதிய மாணவர்கள், சிசாட் - 2கேள்வி தாள், மிகவும் கடினமாக இருப்பதாகவும், ஆங்கில புலமை உள்ளவர்களால் தான் அந்தத் தேர்வில் வெற்றி பெற முடியும் என்றும் கருதினர்.அதனால், கடந்த சில மாதங்களாகவே, இந்த தேர்வு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என, அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசின் அமைச்சர்கள் மற்றும் இப்போதைய பா.ஜ., கூட்டணி அரசின்அமைச்சர்களையும் சந்தித்து வருகின்றனர்.எனினும், அந்த தேர்வு முறையில் மாற்றம் செய்வது குறித்து, அரசு, எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளதால், மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விவகாரம், நேற்று பார்லிமென்ட்டில் பெரிய அளவில் எதிரொலித்தது. லோக்சபாவில், கேள்வி நேரம் ஆரம்பித்தபோது, சில உறுப்பினர்கள் பிரச்னையை எழுப்பினர். எனினும், பெரிய அளவில் விவாதங்கள் நடைபெறவில்லை.ஆனால், ராஜ்யசபாவில் இந்த விவகாரத்தை, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., திரிணமுல், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கிளப்பின. கோஷங்கள் எழுப்பியும், ஆர்ப்பாட்டம் செய்தும், அக்கட்சிகள், இந்த விவகாரத்தை எழுப்பின.இதனால், இரண்டு முறை சபை ஒத்திவைக்கப்பட்டு, 'ஜீரோ' நேரத்தின் போது, சபை மீண்டும் கூடியது.விவாதத்திற்கு பதிலளித்து, மத்திய பணியாளர், பென்ஷன் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை அமைச்சர், ஜிதேந்திர சிங் பேசியதாவது:முக்கியமான பிரச்னைஇது. இது குறித்து விவாதிக்க, முந்தைய அரசால், ஏற்கனவே மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு, அறிக்கை அளிப்பதற்குள், தேர்தல் வந்துவிட்டது.இப்போது எங்களின் புதிய அரசு வந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அந்தக் குழு அறிக்கை அளித்து விடும். அதன் பின், இவ்விஷயத்தில் அரசு முக்கிய முடிவை எடுக்கும்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன், பேச்சுவார்த்தை நடக்கிறது. மொழியின் பெயரால், மாணவர்கள் யாரும் பாதிக்கப்பட அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.மாணவர்கள் வன்முறை:டில்லியில் நேற்று முன்தினம் முதலே, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் மாணவர்கள்போராட்டம் நடத்தினர். முதலில் சாதாரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பின் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதனால் வன்முறை ஏற்பட்டது. போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. வன்முறையில் ஈடுபட்ட தேர்வர்கள், போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.நேற்றும் இந்த பிரச்னை, பார்லிமென்ட்டிற்கு வெளியே தீவிரம் அடைந்திருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்கள், பார்லிமென்டை முற்றுகையிடலாம் என எதிர்பார்த்த போலீசார், சாலைகளில் தடுப்பை ஏற்படுத்தினர்.பார்லிமென்ட் வளாகம் நோக்கி வந்த தேர்வர்கள், போலீஸ் வேன்களில் ஏற்றப்பட்டு, காவல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.பார்லிமென்ட் மற்றும் தலைமைச் செயலகம் அருகில் உள்ள, மூன்று, 'மெட்ரோ' ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.தேர்வர்கள் கோருவது என்ன?ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வு, முதல் நிலை தேர்வு, முக்கிய தேர்வு, நேர்முக தேர்வு ஆகிய மூன்று கட்டங்களாக நடத்தப் படுகிறது. முதல் நிலை தேர்வில் தான் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என, மாணவர்கள் விரும்புகின்றனர்.முதல் நிலை தேர்வில், 'சிவில் சர்வீசஸ் ஆப்டிடியூட் டெஸ்ட்' எனப்படும், 'சிசாட்' தேர்வு உள்ளது. தலா, 200 மதிப்பெண்களை கொண்ட, சிசாட் - 1 மற்றும் சிசாட் - 2 ஆகிய கேள்வி தாள்களுக்கு, மாணவர்கள் பதில் எழுத வேண்டும். சிசாட் - 2 தேர்வில் தான், மாற்றம் செய்ய வேண்டும் என்பது, மாணவர்கள் கோரிக்கை. அந்த வினாத்தாளில், ஆங்கில காம்ப்ரஹென்ஷன், லாஜிக்கல் ரீசனிங், அனலிட்டிகல் எபிலிட்டி, மென்டல் எபிலிட்டி, பேசிக் நியூமரசி போன்ற கடினமான, அதிக ஆங்கில புலமை உள்ளவர்களால் மட்டுமே எழுத முடியும் வகையிலான வினாக்கள் உள்ளதாக, மாணவர்கள் கூறுகின்றனர். அதை, தமிழ், இந்தி போன்ற வட்டார மொழிகளில் எழுதும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்பது தான், மாணவர்களின் விருப்பம்.கடந்த 2010ல், தமிழகத்தில், 110 பேர், சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்வாகி இருந்த நிலையில், அதன் பிறகு எண்ணிக்கை குறைந்துள்ளது. அதற்கு, இந்த தேர்வில் பின்பற்றப்படும் புதிய நடைமுறையே காரணம். கிராமப்புற மாணவர்களும் எழுதும் வகையில், தேர்வு அமைய வேண்டும்; தமிழில் கேள்விகள் இருக்க வேண்டும்.கனிமொழிதி.மு.க., - எம்.பி.,:தகுதி தேர்வை, தமிழ் உட்பட நாட்டிலுள்ள எல்லா மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும். அப்போது தான், கிராமப்புற மாணவர்களும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற முடியும். தேர்வு முறையில் மாற்றம் செய்தால் தான், சமூகத்தின் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பேருதவியாக இருக்கும்.முத்துக்கருப்பன்,அ.தி.மு.க., - எம்.பி.,இந்தப் பிரச்னை பெரிய அளவில் உள்ளது. பதிலளிக்க வேண்டிய அமைச்சர்கள், அதிகாரிகள், பார்லிமென்ட் வந்து கருத்தை தெரிவிக்காமல், 'டிவி'களில் பேசுகின்றனர். பார்லிமென்ட் நடைபெறும் போது, 'டிவி' விவாதங்களில் அமைச்சர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்க வேண்டும்.டெரிக் ஓ பிரையன்திரிணமுல் காங்.,நான், ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இங்கு, எல்லாரும், அரசியலுக்காக, இவ்வாறு பேசுகின்றனரோ என தோன்றுகிறது. காரணம், அனைத்து மொழிகளிலுமே தேர்வு நடத்துவது இயலாத காரியம். அவ்வாறு செய்தால், நேர்முகத் தேர்வில், 500 பேராவது அமர வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி