ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2014

ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி


வங்கிகளின் வங்கி என அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ்தான் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

மும்பையைத் தலையிடமாகக் கொண்டு செயல்படும் ரிசர்வ் வங்கியின் மண்டல தலைமை அலுவலகங்கள் சென்னை உள்பட 4 இடங்களில் அமைந்துள்ளன.பொதுத்துறை வங்கிகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும் அதிகாரிகளும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection-IBPS) என்ற அமைப்பு மூலமாகத் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.இதில் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களைத் தானே தேர்வு நடத்தித் தேர்வு செய்துகொள்கிறது. இதேபோல், இந்திய ரிசர்வ் வங்கியும் கடைநிலை ஊழியர் முதல் பல்வேறு நிலைகளில் அதிகாரி பணி வரை தானே தேர்வுவைத்துத் தேர்வுசெய்கிறது.அந்த வகையில், இந்திய ரிசர்வ் வங்கி 506 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் என்றால் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். வயது வரம்பைப் பொருத்தவரையில், 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எனினும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானோர் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு ஆன்லைனில் செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடத்தப்படும். இதில், ரீசனிங், ஆங்கிலம், கணிதம், பொது அறிவு, கணினி அறிவு ஆகிய 5 பகுதிகளில் இருந்து தலா 40 கேள்விகள் வீதம் மொத்தம் 200 வினாக்கள் இடம்பெறும்.ஆப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் அமைந்திருக்கும். தவறான பதில்களுக்கு மைனஸ் மார்க் உண்டு. அதாவது 4 கேள்விகளுக்குத் தவறான விடையளித்திருந்தால் ஒரு மதிப்பெண் பறிபோய்விடும். மேற்கண்ட ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியே தேர்ச்சி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் www.rbi.org.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் ஆகஸ்ட் 6-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வேறுவழியில் விண்ணப்பித்தால் ஏற்றுக்கொள்ளப்படாது.

தேர்வுக் கட்டணம் எஸ்சி, எஸ்சி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 மட்டும். ஓபிசி உள்பட மற்றவர்களுக்கு ரூ.450. தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்திவிடலாம்.மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா,பஞ்சாப் தேசிய வங்கி, சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிக் கிளைகளிலும் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தக் கடைசி நாள் ஆகஸ்ட் 6-ந் தேதி. வங்கிகள் மூலம் செலுத்துவதாக இருந்தால் ஆகஸ்ட் 11-ந் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும்.உதவியாளர் பணிக்கு மாதச் சம்பளம் ஏறத்தாழ ரூ.23 ஆயிரம் கிடைக்கும். பதவி உயர்வுக்கான தேர்வுகள் எழுதி வங்கி அதிகாரி ஆவதற்கு நிறையே வாய்ப்புகள் உள்ளன. ரிசர்வ் வங்கிப் பணியில் நுழைவதற்கு உதவியாளர் தேர்வு அருமையான வாய்ப்பு.

மேலே குறிப்பிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் சென்று Home Page பகுதியை கிளிக் செய்து பின்னர் Recruitment என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு Recruitment to the post of Assistant என்பதை கிளிக் செய்து தேர்வு தொடர்பான விவரங்களை முழுமையாக அறிந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி