கல்வியியல் கல்விக்கான கலந்தாய்வு: தமிழகத்தில் 4 இடங்களில் நாளை தொடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2014

கல்வியியல் கல்விக்கான கலந்தாய்வு: தமிழகத்தில் 4 இடங்களில் நாளை தொடக்கம்.


தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில்சேர்வதற்கான கலந்தாய்வு, சென்னை, மதுரை, சேலம், கோவை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 7 அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் அல்லாத கல்வியியல் கல்லூரிகளும், 7 அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன.

இவற்றில் மொத்தமுள்ள 2,155 இடங்களுக்கு நிகழ் கல்வியாண்டில் மொத்தம் 10 ஆயிரத்து 450 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமை (ஆக. 6) தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னையில் பல்கலைக்கழக வளாகத்திலும், மதுரையில் தூய ஜஸ்டின் கல்லூரியிலும், சேலத்தில் சாரதா கல்வியியல் கல்லூரியிலும், கோவையில் அரசுமகளிர் கல்வியியல் கல்லூரியிலும் ஆன்-லைன் மூலம் ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கான அழைப்புக் கடிதம் ஏற்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அஞ்சல், மின்னஞ்சல், குறுஞ்செய்தி, தொலைபேசி மூலமாகம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கிடைக்காதவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரியில் அழைப்புக் கடிதங்களைப் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கல்லூரிகளுக்கு மட்டும்தான் கலந்தாய்வுக்குச் செல்ல வேண்டும்.

மாணவர் சேர்க்கையில் பாதிப்பில்லை:

ஆசிரியர் தகுதித் தேர்வு காரணமாக கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கத்தான் செய்யும். நிகழ் கல்வியாண்டில் திருவாரூர், வேலூர் ஆகியஇடங்களில் புதிதாக தலா ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர புதிதாக கல்வியியல் கல்லூரி தொடங்குவதற்காக 10 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு வந்துள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 6 துறைகளுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த கல்வியாண்டு முதல் 30 ஆராய்ச்சி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 2014-15ஆம் கல்வியாண்டில்ஆராய்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டு ஆய்வுக்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்துக்காக காரப்பாக்கத்தில் 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவற்றில் கட்டடங்கள் கட்ட ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

இது மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வை கல்வியியல் கல்வி பயிலும் மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஒரு பாடத்திட்டம் உள்ளது. அதனை விரும்புவோர் மட்டுமே தேர்ந்தெடுத்து படித்து வருகிறார்கள். அதனை கட்டாயப் பாடத்திட்டமாக்குவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். அவ்வாறு சேர்த்தால் ஆசிரியர் தகுதித் தேர்வை மாணவர்கள் மிகவும் எளிதாக எதிர்கொள்ள முடியும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி