மாநிலப் பாடத் திட்டத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும்: ராமதாஸ் - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2014

மாநிலப் பாடத் திட்டத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும்: ராமதாஸ் - தினமணி

சி.பி.எஸ்.இ., ஆந்திர மாநிலப் பாடத் திட்டத்துக்கு இணையாக தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி.) மாணவர் சேர்க்கை குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள 17 ஐ.ஐ.டி.க்களில் மொத்தம் 9,784 இடங்கள் உள்ளன. இதற்கான நுழைவுத் தேர்வில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 995 மாணவர்கள் பங்கேற்றனர்.

அவர்களில் 27,152 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் பாடத் திட்ட வாரியாகப் பார்க்கும்போது சி.பி.எஸ்.இ. பாடத் திட்ட மாணவர்கள் 55.08 சதவீதம், ஆந்திர மாநிலக் கல்வித் திட்ட மாணவர்கள் 17.48 சதவீதம், ராஜஸ்தான் மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் 5.71 சதவீதம், ஐ.எஸ்.சி.இ. பாடத்திட்ட மாணவர்கள் 3.43 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்னர். ஆனால், தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 65 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், தமிழகத்தில் இருந்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 537 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நடப்பாண்டில் பிளஸ் 2 தேர்வில் 8 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், ஒரு லட்சத்துக்கு 10 மாணவர்கள் கூட ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்த அவல நிலைக்குக் காரணம் தமிழ்நாடு மாநிலப் பாடத் திடத்தின் தரம் மோசமாக இருப்பதுதான்.

மருத்துவக் கல்லூரிகள் அல்லது தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டும் என்பதே தமிழகத்தில் உள்ள பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகளின் ஒற்றை இலக்காக உள்ளது. அதற்காக மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கின்றனர். இதற்காகவே பல மாவட்டங்களில் உறைவிடப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன.

எனவே, சி.பி.எஸ்.இ., ஆந்திர மாநில பாடத் திட்டத்துக்கு இணையாக தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். தேசிய அளவிலான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தாய்மொழியில் எழுத தமிழக அரசு அனுமதி பெற வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி