ஆசிரியர் பணிக்கு போராடுபவர்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2014

ஆசிரியர் பணிக்கு போராடுபவர்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் - தினமணி

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி முடித்து ஆசிரியர் பணி நியமனத்துக்காக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்து ஆசிரியர் பணி நியமன ஆணைக்காக காத்திருப்பவர்கள் கடந்த ஒரு வாரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த இந்த இளைஞர்களில் பெரும் பகுதியினர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். முதல் தலைமுறை அரசு வேலைக்காக முயற்சிப்பவர்கள். இவர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம், செல்வபுரம் வருவாய் கிராமத்தில் 215 விவசாயிகளுக்குச் சொந்தமான 915 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி கும்பல் பத்திரப் பதிவு செய்துள்ளது. இதற்கு எதிராக போராடும் மக்களுக்கு கருங்குளம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கி வருகிறார். இதனால் அவருக்கு நிலப் பறிப்பு கும்பல் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. இதுகுறித்து காவல் துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. மாரியப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி