உயர் கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியல் வெளியிட முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2014

உயர் கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியல் வெளியிட முடிவு

இந்தியாவிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை அவ்வப்போது வெளியிடும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான நடைமுறையை சென்னை ஐஐடி-யும், கான்பூர் ஐஐடி-யும் இணைந்து உருவாக்க உள்ளன.

ஐஐடி 48-ஆவது கவுன்சில் கூட்டம் சென்னை ஐஐடி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைச் செயலர் அசோக் தாக்குர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:

இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில், உயர் கல்வி நிறுவனங்களின் இந்திய அளவிலான தர வரிசைப் பட்டியலை வெளியிடுவது, அதற்கான நடைமுறைகளை சென்னை ஐஐடி-யும், கான்பூர் ஐஐடி-யும் இணைந்து உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உத்தேச நடைமுறை வரும் டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்டு, 2015 மார்ச் மாதத்தில் இறுதி செய்யப்பட்டு விடும்.

ஐஐடி, மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்கள் அடங்கிய தரவரிசைப் பட்டியல் முதலில் வெளியிடப்படும்.

பின்னர், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) கீழ் இயங்கி வரும் நாடு முழுவதுமுள்ள உயர் கல்வி நிறுவனங்களையும் உள்ளடக்கிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

இந்தத் தர வரிசையில் பின்தங்கும் கல்வி நிறுவனங்களில் பயிலரங்குகள், பயிற்சிகள் நடத்தப்பட்டு கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஐஐடி-க்களில் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த ஐஐடி முன்னாள் மாணவர் சங்கம் ஒன்றை பெங்களூரில் உருவாக்குவதற்கு, கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமுள்ள ஐஐடி-க்களின் முன்னாள் மாணவர்கள் இதில் உறுப்பினர்களாக இடம்பெறுவர்.

இந்த சங்கம் மூலம், கல்வியாளர்கள், தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்களை ஒன்று கூட்டி ஐஐடி-க்களில் ஆராய்ச்சிகளை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றார் அவர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி