ஆசிரியர் பணி நியமனம்: நீதிமன்றங்களில் குவியும் வழக்குகள் - தி இந்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2014

ஆசிரியர் பணி நியமனம்: நீதிமன்றங்களில் குவியும் வழக்குகள் - தி இந்து


தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான நடவடிக்கைகளை எதிர்த்து அண்மைக் காலத்தில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
2009-ம்ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) வழிகாட்டுதல் படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த தகுதித் தேர்வை எதிர்த்தும், தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு தளர்வு வழங்க கோரியும்பல மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கலாகின. இந்நிலையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்குவதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பால் இந்தப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு ஏற்பட்டது.இதற்கிடையே வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, ஆசிரியர் பணி நியமனத் துக்கு இடைக்காலத் தடை விதித்தது. எனினும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.எனினும் பணி நியமன நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றங்களை நாடும் போக்கு தொடரும் என்றே தெரிகிறது.

ஆசிரியர் பணி நியமனத்துக்கான விதிமுறைகளை வகுக்கும்போது சில அதிகாரிகளின் தவறான புரிதலால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே அரசுக்கு எதிராக ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் குவிய காரணமாக அமைந்துள்ளன என்கின்றனர் கல்வியாளர்கள்.இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைக் கல்வித் தகுதியைவிட கூடுதல் தகுதியை யாரேனும் பெற்றிருந்தால், அந்த கூடுதல் தகுதிக்கு தரப்படும் கூடுதல் மதிப்புதான் வெயிட்டேஜ். பட்டதாரி ஆசிரியர் ஒருவருக்கு பட்டப்படிப்பும்,பி.எட். தகுதியும் அடிப்படை தகுதி என்றால் அதற்கு மேல் அவர் பெற்றிருக்கும் கல்வித் தகுதிக்குத்தான் வெயிட்டேஜ் தரப்பட வேண்டும். இதுதான் பொதுவாக பணி நியமனங்களில் பின்பற்றப்படும் நடைமுறை. இதன்படி கல்லூரி ஆசிரியர் நியமனத்தை மேற்கொள்ளும் ஆசிரியர் கல்வி வாரியம், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் மட்டும் அடிப்படை கல்வித் தகுதிக்கும், அதற்கும் குறைவான பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்களுக்கும் வெயிட்டேஜ் தருவது நடைமுறைக்கு முரணானது.இந்த விதிமுறைகள் யாவும் கல்வித் துறையைச் சேர்ந்த நால்வர் குழுவின் உருவாக்கமே தவிர, அமைச்சரவை மேற்கொண்ட கொள்கை முடிவல்ல.

தமிழ்நாட்டில் பல்லாயிரக் கணக்கான காலி ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. அதேபோல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களும் ஏராளமானவை நிரப்பப்படவில்லை. தற்போதைய வெயிட்டேஜ் முறை ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முதல் தலைமுறையினர் ஆசிரியர் பணியில் அமர்வதை தடுப்பதாக உள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கலாம் என்று உத்தரவிட்டதன் மூலம், ஒரு பெரும் பிரச்சினைக்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல் இப்போதைய வெயிட்டேஜ் மதிப்பெண் விவகாரத்திலும் முதலமைச்சர் தலையிட்டு உரிய உத்தரவைப் பிறப்பித்தால், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தகுதியுள்ள பலர் ஆசிரியர்களாக பணி நியமனம் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.கல்வியியல் பட்டயம் அல்லது பட்டம் பெற்றுள்ளவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, வயது மற்றும் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு வெயிட்டேஜ் தருவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய திருப்பம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளிப்பதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லாது என உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஆசிரியர் நியமன விவகாரத்தில் இன்னொரு புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பற்றி பரவலான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

3 comments:

  1. sir .iam teacher trainning 2004 badge t et mark 97 p 1 wrong worst weitage method i loose my chance,,,.till this weitage icant get this job what job/?

    ReplyDelete
  2. அரசு மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  3. Palli kalvithurai , arasu , high court ithellame makkalukku sevaiseiya illainu thelivaga therigirathu!!
    2013 tet la 90above eduthum vaaippu kidaikkatha seniors than miga miga thurathishtasali
    Ini uruvagum kalipaniyidangalai ivargalikondu mattume nirappa vendum
    Ivargalukku paniniyamanam vazhangiya piraguthan adutha tet thervargalai paniyamartha vendum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி