கலப்புத் திருமணம் செய்தோருக்கு நீண்ட கனவாகும் அரசுப் பணி: கவலையில் 50 வயதை நெருங்கும் பதிவுதாரர்கள்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2014

கலப்புத் திருமணம் செய்தோருக்கு நீண்ட கனவாகும் அரசுப் பணி: கவலையில் 50 வயதை நெருங்கும் பதிவுதாரர்கள்?


கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வழங்கும் முன்னுரிமை அடிப்படையிலான வேலைவாய்ப்பில் குளறுபடிகள் உள்ளன. பணி நியமனத்தில் சரியான நடைமுறைகள் கையாளப்படுவது இல்லை என வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் பதிவுதாரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சுமார் 4,500 சோதனைக்கூட உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை எடுத்து வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேறியவர்கள், விதவைகள், கலப்புத் திருமணம் செய்து கொண்டோர் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி, பள்ளிக் கல்வித் துறை கேட்டுள்ள பதிவுதாரர்களின் பட்டியல், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக வழங்கப்படுகிறது. இதில், 1989 முதல் 91-ம் ஆண்டுக்குள் பதிவு செய்துள்ள கலப்புத் திருமணதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நீண்ட காலமாகப் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் கலப்பு திருமணம் செய்துள்ள பதிவுதாரர்கள் கவலை அடைந்துள்ளனர்.தற்போதுதான், 1989-ம் ஆண்டு பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முயற்சி நடைபெறும் நிலையில், தங்களுக்கு எப்போது அழைப்பு வரும்,அதற்குள் எங்களுக்கு 50 வயது கடந்துவிடுமே என பதிவுதாரர்கள் கவலையுடன்தெரிவித்தனர்.

இது குறித்து கோவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் 2003-ம் ஆண்டு கலப்புத் திருமணம் செய்த பதிவுதாரர் ஒருவர் கூறியதாவது: கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு இருந்தபோதும், சரியாக நடைமுறைப்படுத்துவது இல்லை. 1989-ம் ஆண்டு, 10-ம் வகுப்பு முடித்து பதிவு செய்த பதிவுதாரருக்கு 50 வயதை நெருங்கி இருக்கும். தற்போதுதான் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புக்கான அழைப்பு வந்துள்ளது. நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள கலப்புத் திருமணம் செய்து கொண்ட பதிவுதாரர்கள் அனைவரும், இந்த வேலைக்காகக் கலந்து கொள்வார்களா என்றால் அதுவும் முழுமையாக இருக்காது. எனவே, கலப்புத் திருமணம் பதிவுதாரர்களுக்கான இடஒதுக்கீடு முழுமையாக நிரப்ப வாய்ப்பு இருக்காது. அதனால்தான், 1989 முதல் 91-ம் ஆண்டு வரை உள்ள பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதற்குப் பதிலாக 1989-ம் ஆண்டு முதல் என சீலிங் வைக்காமல் அறிவிக்கலாம். இல்லையென்றால், கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வழங்கும் பணி என்பது நீண்ட நாள் கனவாக மட்டுமே இருக்கும் என்றார்.

இது குறித்து கோவை வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஜோதிமணி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 70 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.பதிவு மூப்பு அடிப்படையில் அழைக்கிறோம். இதன்படி, 1989 முதல் 91-ம் ஆண்டு வரை பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆய்வக உதவியாளர் பணிக்கு 1985-ம் ஆண்டு ஆள்சேர்க்கை நடைபெற்றது. அதன் பிறகு தற்போதுதான் மீண்டும் நடக்கிறது. எங்களைப் பொறுத்தவரை அரசுத் துறைகள் கேட்டுள்ள தகுதிகள் அடிப்படையில் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியலை வழங்குவது மட்டும்தான். பணிக்கான தேர்வு நடைமுறை எல்லாம் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.

2 comments:

  1. GO 188. முறையாகக்கடைபிடிக்கப்படவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குபோட ஆயத்தமாகி வருகின்றனர்.
    இதைப்பற்றி அவர்களிடம் கேட்டபோது GO 188 என்பது 1979க்கு முன்பு போடப்பட்டது. அதை முறையாக நடைமுறைபடுத்தவும் இல்லை அதை மாற்றியமைக்கவும் இல்லை.
    எனவே, GO 188 படி எங்களுக்குரியப்பணியைப்பெற வழக்குத்தொடருவோம் என்றனர்.
    எனவே, வழக்குகள் ஒருபுறம் இருந்தாலும் இதை சற்று அக்கரையோடு நன்கு கூர்ந்தாய்வு செய்து பிரச்சனை ஏதும் வராதவண்ணம் கையாண்டால் எவருக்கும் பாதிப்பில்லாமல் பணிநியமனம் செய்ய முடியும்.
    காத்திருப்போம் நல்ல முடிவிற்காக.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. neenga poi 2lakhs kodunga trb ta poi .kandipaga lab assistant job kodupanga?ya allah nee than kekanum......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி