91 வயதில் துரோணாச்சாரியார் விருது பெற்றவர் : இவர் இப்படி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2014

91 வயதில் துரோணாச்சாரியார் விருது பெற்றவர் : இவர் இப்படி

நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதாக கருதப்படும், துரோணாச்சாரியார் விருதை, தன், 91வது வயதில் பெற்று, சாதனை படைத்துள்ளார், பெங்களூரை சேர்ந்த, என்.லிங்கப்பா. கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து, ஈட்டி எறிதல், நீண்டதூர நடை போன்ற விளையாட்டுகளின் பயிற்சியாளர் இவர்.
தானாக இந்த விருது அவருக்கு கிடைக்கவில்லை; 18 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் தான் கிடைத்துள்ளது. இதற்காக தன் வயதையும் பொருட்படுத்தாமல் போராடி கடைசியில் வெற்றி பெற்றுள்ளார் லிங்கப்பா.போராட்டம் இவருக்கு தண்ணீர் பட்டபாடு. அவரை விட மிக வயது குறைந்தவர்களும், தகுதி குறைந்தவர்களும் அந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவருக்கு ஒரு குறை இருந்தது. தன் சாதனைகளை பட்டியலாக தயாரித்து, மத்திய அரசிடம் சமர்ப்பித்து, கடைசியில் அந்த விருதையும் பெற்று, சாதித்து காட்டியுள்ளார் இவர்.துரோணாச்சாரியார் விருதுக்கு லிங்கப்பாவை தேர்ந்தெடுத்தது, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் தலைமையிலான குழு.கர்நாடகாவைச் சேர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளான, அஸ்வினி நாச்சப்பா, டி.ஓய்.பிரேந்தர், சதிஷ் பிள்ளை மற்றும் உதய் கே பிரபு ஆகியோரை உருவாக்கியவர், துரோணாச்சாரியார் லிங்கப்பா.இத்தனை ஆண்டுகளும் இவருக்கு இந்த விருது கிடைக்காமல் போனதற்கான காரணங்களில் ஒன்று, லிங்கப்பாவுக்கு ஆங்கிலம் தெரியாதது தான். விளையாட்டின் மீது தீராத ஆர்வம் இருந்த போதிலும், முதலில் இவர், பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியில், 1946ல், கிளார்க்காக தான் வேலையில் சேர்ந்தார். 20 ஆண்டுகள் அந்தப் பணியில் இருந்தவர், அதற்குப் பின் தான், விளையாட்டு வீரராக உருவெடுத்தார்.இவருக்கு மிகவும் பிடித்தமானது, ஈட்டி எறிதல் விளையாட்டு தான். எனினும், இவரின் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தை அடுத்து, அந்த விளையாட்டை கைவிட்டு, பிற விளையாட்டில் ஆர்வம் செலுத்த துவங்கினார்.இத்தனை வயதானாலும், தினமும், பெங்களூரு காண்டீரவா மைதானத்திற்கு இவர் வரத் தயங்குவதில்லை; அங்கு இவரை எதிர்நோக்கி காத்திருக்கும் இளம் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு அவர்களை தயார்படுத்தி வருகிறார் இந்த, 91 வயது 'இளைஞர்'.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி