ரசித்து, ருசித்து சிரித்து வாழுங்கள்...: இன்று உலக சிரிப்பு தினம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2014

ரசித்து, ருசித்து சிரித்து வாழுங்கள்...: இன்று உலக சிரிப்பு தினம்

இன்று உலக சிரிப்பு நாள். ஆண்டில் மற்ற நாட்களில் சிரிக்காவிட்டால் கூட பரவாயில்லை. இன்று மட்டுமாவது சிரிக்க வேண்டாமா? காதலர் தினத்தன்று நம் காதலன்-காதலிக்கு வாழ்த்து சொல்ல மறக்கலாமா? சொல்லப் போனால் ஒரு விதத்தில் காதலை விட சிரிப்பு மகத்தானது.
நம் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் தான் காதல் வரும். ஆனால் சிரிப்பு? நம்முடன் பிறந்து நிரந்தரமாக நம்முடனேயே இருக்கும். அப்படி இல்லாவிட்டால் வாழ்க்கை ருசிக்காது. ''ஆமாய்யா சிரிக்கிற மாதிரியா இருக்கு நிலமை? ஒரே சிரிப்பாக சிரிச்சிக்கிட்டிருக்கு. இதுல சிரிப்பு ஒண்ணுதான் கேடு,'' என அலுத்து கொள்ளாதீர்கள்.


திச் நாட் ஹான் என்ற புத்தத்துறவி சொல்வதை கேளுங்கள்... ''சில சமயங்களில் உங்கள் புன்னகைக்குக் காரணம் உங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் சில சமயங்களில் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணம் உங்கள் புன்னகையாகக் கூட இருக்கலாம்,'' ஆகவே புன்னகை செய்யுங்கள்.

பார்வையை மாற்றினால் போதும்: வாழ்க்கையில் சிரிப்பதற்கான விஷயங்களை தேடாதீர்கள். உங்கள் பார்வையைக் கொஞ்சம் மாற்றிப் பார்த்தால் போதும். இம்சையான நேரங்கள் கூட உங்களை சிரிக்க வைக்கும். முன்பு ரயிலில் முன்பதிவிற்காக ஒரு நீண்ட வரிசையில் நின்றேன். ஒரு இளைஞர் வரிசையின் நடுவே புக முயற்சி செய்தார். அங்கு நின்று கொண்டிருந்தவர், ''இங்கே ஆள் நிக்கிறாங்க தெரியதுல்ல? கடைசில போய் நில்லுய்யா,'' என கத்தினார். ''அங்கேயும் தான் சார் ஆள் நிக்கிறாங்க... நான் எங்கதான் போறது...,'' என்று இடைச்சொருகல் இளைஞர் கேட்ட போது, என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. என் வாடிக்கையாளர் ஒருவர் அதிபுத்திசாலி. ஒரு முறை அவர் விஷயமாக சென்னைக்கு சென்றிருந்தேன். அது மொபைல்போன், கம்ப்யூட்டர், பேக்ஸ் இயந்திரங்கள் வராத காலம். ஒரு கடிதத்தில் அவர் கையெழுத்து தேவைப்பட்டது. கையெழுத்திட வேண்டிய கடிதத்தை இரவு செல்லும் ஆம்னி பஸ் மூலம் மதுரைக்கு அனுப்பி விட்டு, அவரிடம் போனில் பேசினேன். ''ஆளை அனுப்பிக் கவரை வாங்கிக் கொள்ளுங்கள். உள்ளே இருக்கும் கடிதத்தில் கையெத்துப் போட்டு உடன் அனுப்புங்கள். எந்த பஸ் மூலம் அனுப்புகிறீர்கள் என்ற விவரத்தை இந்த எண்ணுக்கு போன் செய்து சொல்லுங்கள்,'' என்றேன். அடுத்த நாள் மதியம் 12 மணி வரை அவரிடமிருந்து அழைப்பு வரவில்லை. நானே அவரை அழைத்தேன்.


''அதை கே.பி.பஸ்ல அனுப்பிட்டேனே,''


''அதை எனக்குச் சொல்ல வேண்டாமா சார்,''


''எதுக்கு ஆடிட்டருக்கு தேவையில்லாம போன் பண்ணனும்? கே.பி., பஸ்ல அனுப்பறேன்னு ஒரு லெட்டர் எழுதி அதையும் அந்தக் கவர்லயே வச்சி அதே கே.பி., பஸ்ல அனுப்பிச்சிட்டேன். நீங்க பார்த்துத் தெரிஞ்சிப்பீங்கன்னு நெனைச்சேன்,'' என்றார் அறிவாளித்தனமாக.


சரி அதை விடுங்கள். ஒரு முறை கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தினேன்.


ஒரு இளங்கலை வேதியியல் மாணவனிடம் நான் கேட்ட கேள்வி இது தான்:


''வாஸ்கோடகாமா இந்த உலகை மூன்று முறை சுற்றி வந்தார். ஒரு முறை அப்படிச் சுற்றி வரும் போது இறந்து போனார். அது எந்த முறை என்று சொல்ல முடியுமா,''


''இரண்டாவது முறை''


''அப்போ மூணாவது முறை உலகத்தச் சுத்தி வந்தது அவரோட ஆவியா? என அவனைக் கலாய்த்தேன்.


''சார் நான் பி.எஸ்.சி., படிக்கிறேன். எங்கிட்ட வரலாறு சம்பந்தப்பட்ட கேள்வியெல்லாம் கேக்காதீங்க சார்,'' என்றார். தலையில் அடித்துக் கொண்டேன்.

உலக மொழி-புன்னகை: முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது... இந்தியாவில் ஜெராக்ஸ் வசதி அப்போது தான் வந்திருந்தது. மும்பையில் ஒரு கடைக்காரரின் விளம்பரம் வித்தியாசமாக இருந்தது. ''இங்கு இந்தியாவின் எல்லா மொழிகளிலும் ஜெராக்ஸ் எடுத்து தரப்படும்,'' என்றிருந்தது. ஜெராக்ஸ் தொழில்நுட்பம் மொழிகளை எல்லாம் தாண்டியது என்று பாவம் அவருக்கு புரியவில்லை. ஜெராக்ஸ் மட்டும் இல்லை புன்னகையும் அப்படித்தான். புன்னகை என்பது உலக மொழி. நீங்கள் கோவில்பட்டியில் புன்னகைத்தாலும், கோபன்ஹேகனில் புன்னகைத்தாலும் மக்கள் அதை புரிந்து கொள்வர். உங்கள் புன்னகை இந்த உலகையே மாற்றட்டும். எக்காரணம் கொண்டும் உலகம் உங்கள் புன்னகையை மாற்ற அனுமதிக்காதீர்கள். ஒரு முறை பெங்களூரு பஸ்சில் பயணித்தேன். நான் இறங்க வேண்டிய நிறுத்தத்தின் பெயரை சொல்லி அது வரும்போது சொல்லுங்கள் என்று அருகில் இருந்தவரிடம் ஆங்கிலத்தில் கூறினேன். ''ஆகா! அதற்கென்ன! நீங்கள் என்னையே பார்த்து கொண்டிருங்கள். நான் எங்கே இறங்குகிறேனோ அதற்கு முந்தைய நிறுத்தத்தில் நீங்கள் இறங்க வேண்டும்,'' என்றாரே பார்க்கலாம்.

ஆட்சியாளர்கள் வேடிக்கை: பாமரர்கள் இப்படி வேடிக்கை செய்வார்கள் என்றால் ஆட்சியாளர்கள் செய்யும் வேடிக்கை அதற்கு மேல். ஓய்வூதியம் வாங்க ஒரு முதியவர் சார்நிலைக் கருவூலத்திற்கு வந்திருந்தார்.


''நவம்பர் மாதம் நீங்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வேண்டும்,''


''இதோ''- கையில் இருந்ததை எடுத்து நீட்டினார், முதியவர்.


''சரி அக்டோபர் நீங்கள் உயிருடன் இருந்ததற்கான சான்றிதழ்,''


''அக்டோபரில் உயிருடன் இல்லையென்றால் நவம்பரில் எப்படி ஐயா உங்கள் முன் உயிருடன் நிற்க முடியும்,''


''அதற்காக அரசு விதிகளை மீறச் சொல்கிறீர்களா,''


உட்டோப்பியா என்ற நாட்டில் ஒரு முறை ஒரு கோமாளியை ரயில்வே அமைச்சர் ஆக்கி விட்டனர். அந்த நாட்டு ரயில்களில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து கொண்டிருந்தன. கோமாளி அமைச்சர் உயர்மட்ட அதிகாரிகளை திரட்டி ஒரு அவசர கூட்டம் நடத்தினார்.


பல மணி நேர விவாதத்திற்கு பிறகு ரயில் வண்டியின் கடைசி பெட்டி தான் பெரும்பாலும் விபத்துகளுக்குக் காரணம் என்று அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள். கோமாளிக்கு ஒரே மகிழ்ச்சி.


''அவ்வளவு தானே. இனிமேல் ரயில்களில் கடைசிப் பெட்டியை எடுத்து விடுங்கள். விபத்தே நடக்காது அல்லவா,'' என்றார். அதிகாரிகள் மிக சிரமப்பட்டு சிரிப்பை அடக்கி கொண்டனர்.

ஒரு துணிச்சலான அதிகாரி தயங்கி தயங்கி கேட்டார்.


''அது எப்படி ஐயா கடைசி பெட்டி இல்லாம ரயில் வண்டியை ஓட்ட முடியும்,''


''அவ்வளவு தானே பிரச்னை. பேசாம கடைசிப் பெட்டிய வண்டிக்கு நடுவில மாட்டிருங்க. விபத்தே நடக்காதுல்ல,'' என்றார்.


வாழ்க்கையின் நோக்கம்: வாழ்க்கையின் நோக்கமே மகிழ்ச்சி தான். என்னை பொறுத்தமட்டில் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள். உங்களிடம் ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருந்து நீங்கள் எந்த நேரமும் மூஞ்சியைத் தூக்கி வைத்திருந்தால் நீங்கள் வாழ்க்கையில் தோற்றவர் தான்.

பிரபல பாடகர் ஜான் லெனானுக்கு ஐந்து வயது இருக்கும் போது, அவருடைய பள்ளிக்கூட ஆசிரியை அவரிடம் கேட்டாள்.

''பெரியவனானதும் என்னவாக விரும்புகிறாய்,''


''மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறேன்,''


''ஐயோ, நீ என் கேள்வியை புரிந்து கொள்ளவில்லை,''


''மிஸ், நீங்கள் இன்னும் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவில்லை,''


எனவே இன்று மட்டுமின்றி வாழ்க்கை முழுவதும் புன்னகைத்துக் கொண்டேயிருங்கள்.


சார்லி சாப்ளின் சொன்னதை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

''என்னுடைய வலி அடுத்தவர்களின் புன்னகைக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் எந்தக் காலத்திலும் அடுத்தவர்களின் வலி என் புன்னகைக்குக் காரணமாக இருந்து விடக்கூடாது,''

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி