அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2014

அலிஷா பூமிக்குத் திரும்புவாரா?

அலிஷா கார்சன்... 13 வயது அமெரிக்கச் சிறுமி. இப்போது அமெரிக்கப் பிரபலமாக இருக்கும் அலிஷா, இன்னும் சில வருடங்களில் அகில உலகப் பிரபலம் ஆகிவிடுவார். அப்போதைய தலைமுறை மாணவர்கள், 'செவ்வாய்க் கிரகத்தில் கால் பதித்த முதல் பெண், அலிஷா கார்சன்’ என நெஞ்சில் குத்திக் குத்தி மனப்பாடம் செய்யலாம். அல்லது டேப்லெட்டில் லைவ் வீடியோ பார்த்து லைக்கிட்டு 'குட் டே அலிஷா’ என கமென்ட்டலாம்.

சிலர் பிறக்கும்போதே ஐ.க்யூ லெவல் எகிறிப் பிறப்பார்களே... அப்படி ஒரு பெண் அலிஷா. 'நான் விண்வெளி வீராங்கனையாக வேண்டும்’ என அலிஷா சொன்னபோது அவளுக்கு வயது... மூன்று! பள்ளியில் இப்போது செவன்த் கிரேடு படிக்கும் அலிஷா தன் பாடத் திட்டங்களோடு சேர்ந்து விண்வெளி தொடர்பான பாடங்கள், ஸ்பானிஷ், பிரெஞ்சு, சைனீஸ்... மொழிகளையும் கற்றுக்கொண்டுவிட்டாள்.

நாசா நடத்திய உலக விண்வெளிப் பயிற்சி முகாம் ஒன்றுக்குத் தேர்வான ஒரே பெண் இவர்தான். நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்றால், அதன் விதவிதமான துறைகள் அளிக்கும் பயிற்சிகளில் 'டிஸ்டிங்ஷனோடு’ தேறியிருக்க வேண்டும். அப்படி... மொத்தம் 14 துறைகள் அளித்த பயிற்சிகள் அனைத்திலும் அலிஷா 'அவுட்ஸ்டேண்டிங்’ மாணவி.



'எல்லாம் சரி... அதற்காக 13 வயது சிறுமியை செவ்வாய்க் கிரகத்துக்குத் தனியாக அனுப்ப முடியுமா என்ன?’ இப்போது நாசாவிடம் இருக்கும் அதிகபட்சத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு ரோபோவை செவ்வாயில் இறக்கிவிட்டு, இங்கிருந்து ரிமோட்டில் ஆணைகள் பிறப்பித்து இயங்கச் செய்யலாம். அதை மீண்டும் பூமிக்கு அழைத்து வர முடியாது. ஆனால், 2033-ல் மனிதனை செவ்வாயில் இறக்கும் அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றிருக்கும் நாசா, அப்போதுதான் அலிஷாவை செவ்வாய்க்கு அனுப்புமாம்!

மனிதனை செவ்வாய்க்கு அனுப்புவதற்கு எகிடுதகிடாக செலவுகள் எகிறும். நிலா என்றால் பரவாயில்லை. பக்கத்திலேயே இருக்கிறது. செவ்வாயோ எக்கச்சக்க தூரம். செலவு ஒரு பக்கம். அதைவிட சவால், பயணிக்கும் மனிதனின் மனநிலை. கிட்டத்தட்ட ஒரு வருடம் இருளான விண்வெளியில் தனிமையில் ஒரு கேப்சூலில் (விண்வெளி ஓடம்) பயணிக்க வேண்டும். அவருக்குத் தேவையான உணவு, தண்ணீர் அதில் இருக்க வேண்டும். தனிமை, அமைதி, சூழந்திருக்கும் பேரிருள் ஆகியவற்றால் அந்த மனிதனின் மனநிலை பாதிக்கப்படலாம். அதைச் சமாளிக்கப் பயிற்சியளிக்க வேண்டும். ரோபோ என்றால், பலூன்களின் உதவியோடு செவ்வாயின் தரையில் 'தடால்... புடால்’ என மோதி தரையிறக்கிவிடலாம். ஆனால், மனிதனை அப்படி இறக்க முடியுமா? சரி... கஷ்டப்பட்டு செவ்வாயில் இறக்கிவிடலாம் ஓ.கே. அவனை/அவளை திரும்ப எப்படி பூமிக்கு மீண்டும் அழைத்துவருவது? அங்கிருந்து கிளம்பி வர, இங்கிருந்து அனுப்பிவைத்ததைப்போல ரிட்டர்ன் ராக்கெட் வேண்டும். பூமியின் ஈர்ப்பு விசையைவிட செவ்வாயின் ஈர்ப்பு விசை அதிகம். எனவே, பூமியில் இருந்து கிளம்பியதைவிட செவ்வாயில் இருந்து அதிவேகமாகக் கிளம்ப வேண்டும். அதற்கு எரிபொருள் வேண்டும்; அதையும் பூமியில் இருந்தே எடுத்துச் செல்ல வேண்டும். நிலவின் வட்டப்பாதையில் ராக்கெட்டை நிலைநிறுத்தி, ஆம்ஸ்ட்ராங்க் திரும்ப வந்ததுபோல, செவ்வாயில் இருந்து திரும்பினாலும், மீண்டும் ஒரு வருடப் பயணம். அதற்கு தேவையான உணவு, தண்ணீர் வேண்டும். நிலா பூமியைச் சுற்றி வருகிறது. ஆனால் செவ்வாய் சூரியனைச் சுற்றி வருகிறது. காலமும், தூரமும் மாறிக் கொண்டே இருக்குமே? அதையும் கணக்கிட வேண்டும். எவ்வளவு பெரிய வேலை?



சரி... செவ்வாய்க்குச் சென்ற ஆளைத் திரும்ப அழைத்தால்தானே இவ்வளவு அக்கப்போர். 'ஒன் வே ட்ரிப்’ போல இறக்கி மட்டும் விட்டுவிட்டு ஆராய்ச்சி செய்தால்? 1998-ல் இந்த ஐடியாவையும் யோசித்தார்கள் விஞ்ஞானிகள். அதன்படி பூமியில் இருந்து கிளம்பும் ஆளிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிடுவார்கள். அவருடைய குடும்பத்துக்கு பெருந்தொகை செட்டில் செய்யப்படும். உலக வரலாற்றில் 'முதல் செவ்வாய் மனிதன்’ என்ற புகழ் கிடைக்கும். ஆனால் அதை அனுபவிக்க முடியாது. செவ்வாயில் இறங்கி ஆராய்ச்சி செய்ய வேண்டும். திரும்பி பூமிக்கு வர முடியாது. கேப்சூலில் இருக்கும் உணவும் தண்ணீரும் தீரும் வரை உயிர் வாழ்ந்துகொள்ளலாம். பின் மாஸ்க்கைக் கழற்றி செவ்வாயில் இருந்து சொர்க்கமோ, நரகமோ போய்ச் சேரலாம். புவியின் முதல் மனிதன் மாதிரி அவர் செவ்வாயின் முதல் ஆதாம் அல்லது ஏவாள் ஆகலாம். ஆனால், 'முடிந்த அளவு ஆளை திரும்பக் கூட்டிவரும் வேலையைப் பார்ப்போம்’ எனக் குரல் வர, திட்டத்தை அப்படியே பெண்டிங்கில் வைத்துவிட்டார்கள்.

'செவ்வாயில் மனிதன்’ திட்டத்துக்கு இத்தனை பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்க, நாசாவின் தேர்வுகளை அநாயசமாக எழுதி, செல்லப் பிள்ளை ஆகிவிட்டாள் அலிஷா. அளப்பறிய ஐ.க்யூ-வாலும் ஆர்வத்தாலும், நாசா அவளைக் கிட்டத்தட்ட தத்தெடுத்துக்கொண்டுவிட்டது. 'பங்கி ஜம்பிங், ஸ்கை டைவிங், ஸ்கூபா டைவிங்... எல்லாம் கத்துகிட்டு வா’ என நாசா விஞ்ஞானிகள் அசைன்மென்ட் கொடுக்கும் அளவுக்கு இப்போது அலிஷா அங்கே டார்லிங். இன்னும் 20 வருடங்கள் கழித்து, அலியாவுக்கு 33 வயது ஆகியிருக்கும். கிட்டத்தட்ட நாசாவின் 'மிக அனுபவசாலி’ விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆகியிருப்பார். அதனால், அப்போது அலிஷாவை செவ்வாய்க்கு அனுப்ப, இப்போதே பரிந்துரைக்கிறார்கள் பல விஞ்ஞானிகள். அது தொடர்பான பரபரப்பைக் கண்டுகொள்ளாமல், விண்வெளி தொடர்பான பயிற்சிகள், ரோபோட்டிக்ஸ் பாடங்கள் என செம பிஸியாக வலம்வருகிறார் அலிஷா!

அடுத்துவரும் 20 வருடங்கள் எந்தப் பஞ்சாயத்தும் இல்லாமல், மூன்றாம் உலகப் போர் எதுவும் மூளாமல், எல்லாம் சுபமாக நடந்து, அலிஷாவை செவ்வாய்க்கு அனுப்ப நாசா முடிவு எடுக்கும்பட்சத்தில், மில்லியன் டாலர் கேள்வி ஒன்று தொக்கி நிற்கும். அது, அலிஷாவை பூமிக்குத் திரும்ப அழைத்துக்கொள்வதா... இல்லை செவ்வாய்க் கிரகத்திலேயே இறக்கிவிட்டுவிடுவதா?!’

விகடன்...

11 comments:

  1. Super sri .

    You are doing always good work. Keep it up.

    ReplyDelete
  2. very nice article.and sema interesting.

    ReplyDelete
  3. Blessed girl alisha..... nice article....

    ReplyDelete
  4. Blessed girl alisha..... nice article....

    ReplyDelete
  5. Blessed girl alisha..... nice article....

    ReplyDelete
  6. Good efforts. efficient girl Alisha

    ReplyDelete
  7. திரும்ப அழைத்துக்கொள்ளும் வசதி இல்லாதபட்சத்தில் மனிதனை ( அலிஷாவாகக்கூட இருக்கலாம்) செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவது சரியாகத் தெரியவில்லை!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி