பசுமை பாலைவனமாகும் தமிழகம்...சீரழிக்கும் சீமைகருவேல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2014

பசுமை பாலைவனமாகும் தமிழகம்...சீரழிக்கும் சீமைகருவேல்!

வேலியே பயிரை மேயுது’ என்பார்களே அதற்கு மிகச்சரியான உதாரணம் சீமைகருவேல். ஊழல், தீவிரவாதம், எதிரி நாட்டு படையெடுப்பு மட்டுமே ஒரு நாட்டுக்கு மிகவும் ஆபத்தான விஷயம் என்ற கருத்து உங்களுக்கு இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். சீமைகருவேல் மரங்கள் போதும் எவ்வளவு வளமான நாட்டையும் பசுமை பாலைவனமாக்கி விடும். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு தமிழ்நாடு. இதன் ஆபத்தை உணர்ந்த உலகநாடுகள், தங்கள் பகுதிக்குள் எதிரிகளை நுழைய விடாமல் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறார்களோ அதே உணர்வில்தான் சீமைகருவேலையும் பார்க்கிறார்கள். அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகள் இதை நச்சு தாவரமாக அறிவித்திருக்கின்றன. இவ்வளவு ஏன் நமது அண்டை மாநிலமான கேரளாவில் சீமை கருவேல் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த மரங்களை முற்றிலுமாக அழித்து, புதிதாக வளராத வகையில் பாதுகாத்து வருகிறார்கள். அப்படியென்னதான் இருக்கிறது இந்த தாவரத்தில்..?


பயிருக்கு வேலியாகவும், விறகு பயன்பாட்டுக்காகவும் 1950 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன சீமைகருவேல் விதைகள். தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் காமராஜர், அவரது ஆட்சி காலத்தில் தொலைநோக்கு பார்வையில்லாமல் கொண்டுவரப்பட்டது தான் சீமைகருவேல் என்பது கசப்பான உண்மை. மக்கள் சிறிதளவு கொண்டு வந்த விதை, இந்த 64 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் ஆக்கிரமித்து விட்டது. ''தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 25% இடத்தை ஆக்கிரமித்துள்ளது சீமைகருவேல்" என்கிறார்கள் சூழலியல் வல்லுநர்கள். மரம் ஆக்சிஜனை வெளியிட்டு, நிழல் கொடுத்து, பல்லுயிர்கள் வாழும் சூழலை ஏற்படுத்த உதவ வேண்டும். ஆனால், சீமைகருவேல் இதில் எதையும் செய்வதில்லை. மாறாக, அதிக கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது.அதிக நைட்ரஜன் அமிலத்தை சுரந்து மண்ணை மலடாக்குவதுடன், மண்ணில் உள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. இதன் ஆழமான வேர்களும், உறுதியான பக்கவேர்களும் மழைநீர் நிலத்திற்குள் செல்வதை தடுக்கின்றன. மரம் 12 அடி உயரம் வரை வளரும். வேர் 175 அடி ஆழம் வரை வளரக் கூடியது. அதனால் தான் மற்ற அனைத்து தாவரங்களை விடவும் அதிக ஆழத்திற்கு சென்று நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது இந்த நச்சுத் தாவரம். மழை இல்லாத காலங்களில் நிலத்தடி நீரையும், காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சு உயிர்வாழும் ஆற்றல் கொண்டது. நிலத்தடி நீரை உறிஞ்சுவதோடு மட்டும் நிற்காமல் நல்ல நீரை உவர்பாக மாற்றிவிடும். நிலத்தடி நீர் உவர்பாக மாறுவதற்கு இதுவும் ஒரு காரணம்.இந்த தாவரம் வளரும் இடங்களில் காற்று வெப்பமடைந்து மக்களை வறட்சியான மனநிலைக்கு கொண்டு சென்றுவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இந்த மரங்கள் அதிகளவில் இருக்கின்றன. இந்த மாவட்டங்களின் வறட்சிக்கும், மக்களின் மனநிலைக்கும், தரிசு நிலங்களின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்வதற்கும் இந்த தாவரம் ஒரு முக்கிய காரணம். சமீபகாலமாக, சீமை கருவேல் நச்சு தாவரத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதுடன், விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள் சூழல் ஆர்வலர்கள்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார், சீமை கருவேல் ஒழிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ''இந்த மாவட்டத்தில் இருக்கிற வறட்சிக்கு இந்த தாவரமும் ஒரு காரணம். விவசாயம் குறைஞ்சு போனதால், வாழ்வாதாரத்துக்காக இந்த தாவரங்களை வெட்டி, விறகாகவும், கரியாகவும் விற்றுவருகிறார்கள். இது, இவர்களுக்கான நிரந்தர தீர்வாக இருக்காது என்பதால் முதல் கட்டமாக, விவசாய நிலங்களில் உள்ள சீமைகருவேல் மரங்களை அழித்து, அதை மறுபடியும் விவசாய பூமியாக மாற்றி, விவசாயிகளுக்கு தேவையான பயிற்சிகள், இடுபொருட்கள், விதைகள் கொடுத்து அவர்களை மீண்டும் உழவுத் தொழிலில் ஈடுபட வைக்கிறோம்.

இதன் மூலம் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் மாவட்டத்தில் உள்ள 600 க்கும் மேற்பட்ட குளங்களில் உள்ள சீமைகருவேலை ஒழிக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மரங்களை வேரோடு அழிப்பதற்கான பணிகள் முடுக்கி விடபட்டுள்ளன. இன்னும் சில ஆண்டுகளில் சீமைகருவேல் இல்லாத மாவட்டமாக ராமநாதபுரம் மாறும்" என்றார்.

ராமநாதபுரம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இந்த நச்சு தாவரத்தை வேரோடு அழிக்கும் முயற்சியில் அரசை மட்டும் எதிர்பார்க்காமல் நாமே களத்தில் இறங்கினால் இன்னும் சில ஆண்டுகளில் சீமை கருவேல் என்னும் சூழலுக்கு எதிரான வில்லனை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும்.

ஆர்.குமரேசன்

படங்கள்: வீ. சக்தி அருணகிரி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி