போதிய வசதிகளின்றி அரசுக் கல்லூரிகளில் தொடங்கப்படும் புதிய படிப்புகள்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2014

போதிய வசதிகளின்றி அரசுக் கல்லூரிகளில் தொடங்கப்படும் புதிய படிப்புகள்..


போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதபோதும், தனிப்பட்டவிருப்பங்களுக்காக அரசுக் கல்லூரிகளில் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்படுவதாக மாணவர்களும் பேராசிரியர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. கல்லூரிகளில் புதிய படிப்புகள் தொடங்குவதற்கு, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்து உரிய அனுமதியைப் பெற வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது, தொடங்கப்படவுள்ள புதிய படிப்புக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்ற விவரங்களையும் கல்லூரிகள் தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில், பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கும். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும் இதே நடைமுறையைத்தான் பின்பற்ற வேண்டும். ஆனால், ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசுக் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும்கூட புதிய படிப்புகளைத் தொடங்க பல்கலைக்கழகமும், அரசும் அனுமதி அளிக்கின்றன. இந்த வசதியை சில அரசுக் கல்லூரிகள் தவறாகப் பயன்படுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மாணவர்களின் நலனுக்காக அல்லாமல், தனிப்பட்ட பேராசிரியரின் நலனைக் கருத்தில் கொண்டு சில கல்லூரிகள் புதிய படிப்புகளைத் தொடங்குவதாகப் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரசுக் கல்லூரிப் பேராசிரியர்கள் சிலர் கூறியது: தங்களுக்கு வேண்டிய பேராசிரியர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் பணியமர்த்துவதற்காகவே, சில கல்லூரிகள் புதிய படிப்புகளைத் தொடங்குகின்றன. உதாரணமாக, ஊட்டி அரசுக் கல்லூரியில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த பி.ஏ. பாதுகாப்பு (டிஃபன்ஸ்) பட்டப் படிப்பு, சென்னையில் உள்ள அரசுக் கல்லூரி ஒன்றில் அண்மையில் தொடங்கப்பட்டது.

இதுபோல, பல கல்லூரிகள் மாணவர்களின் நலனைக் காற்றில்பறக்கவிட்டு, தனிப்பட்ட விருப்பங்களுக்காகப் புதிய படிப்புகளைத் தொடங்குகின்றன. போதிய வகுப்பறைகள், ஆய்வக வசதிகள் இல்லாமலேயே இதுபோன்ற புதிய படிப்புகள் தொடங்கப்படுவதால், மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறியாகி வருகிறது. இந்த உள்கட்டமைப்பு வசதிகளை முழமையாக மேம்படுத்த குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்கு மேலாகும் என்பதால், முதல் இரண்டு ஆண்டுகள் இந்தப் படிப்பில் சேரும் மாணவர்கள்பாதிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது. எனவே, தேவையின் அடிப்படையில், போதிய உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுள்ள கல்லூரிகளுக்கு மட்டுமே புதிய படிப்புகளைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி