ஊக்க ஊதியத்தை திரும்ப பெறக்கூடாது : கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2014

ஊக்க ஊதியத்தை திரும்ப பெறக்கூடாது : கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!


சென்னை : 'கூடுதல் கல்வி தகுதி பெற்ற, இடைநிலை ஆசிரியருக்குவழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை, திரும்ப பெறக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர், அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில், 1987 செப்டம்பரில், இடைநிலை ஆசிரியராக, மீனலோசினி என்பவர், நியமிக்கப்பட்டார். அப்போது, பி.ஏ., மற்றும் பி.எட்., பட்டம் பெற்றிருந்தார். இடைநிலை ஆசிரியர் தகுதி உள்ளவர்கள்கிடைக்காததால், பட்டதாரி ஆசிரியரான மீனலோசினியை, இடைநிலை ஆசிரியராக நியமித்தனர். ஆனால், பட்டப் படிப்பு மற்றும் பி.எட்., படிப்புக்கு, ஊக்க ஊதியம் கோரக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில், நியமிக்கப்பட்டார். பணி நியமனத்துக்குப் பின், எம்.எட்., மற்றும் எம்.ஏ., பட்டங்களை பெற்றார். அதற்காக, ஊக்க ஊதியம், 1990, 1999, மீனலோசினிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், 2002, செப்டம்பரில், தணிக்கையின் போது, 'கூடுதல் கல்வி தகுதி பெற்ற, மீனலோசினிக்கு, ஊக்க ஊதியம் பெற உரிமையில்லை' எனக்கூறி, அதை திரும்பப் பெறுவதற்கான உத்தரவை, கணக்கு அதிகாரி பிறப்பித்தார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மீனலோசினி, மனுத் தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன் ஆஜரானார்.

மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: முதுகலை பட்டங்களான, எம்.ஏ., மற்றும் எம்.எட்., படிப்புக்காக, ஊக்க ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கூடுதல் தகுதி பெறுவதற்காக தான், ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. கடைசியில், மாணவர்களுக்கு தான், பலன் கிடைக்கிறது. கூடுதல் தகுதியை பெறுவதன் மூலம் கிடைக்கும் அறிவுத் திறனுக்காக, ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது.

மனுதாரர் பெற்ற, முதுகலை பட்டங்களுக்காக, ஊக்க ஊதியம் வழங்கப்படுவதுசரிதான். 'கூடுதல் தகுதிகளை பெற்றதற்காக, ஊக்க ஊதியம் பெற, மனுதாரருக்கு உரிமை இல்லை' என, தணிக்கைத் துறை ஆட்சேபனை தெரிவித்துள்ளது, துரதிர்ஷ்டவசமானது. இடைநிலை ஆசிரியர் கிடைக்காததால் தான், பட்டதாரி ஆசிரியரை, அந்தப் பணிக்கு நியமித்துள்ளனர். அப்போது, பி.ஏ., பிஎட்., படிப்புக்கான, ஊக்க ஊதியம் கோர கூடாது என்ற நிபந்தனையின் பேரில், நியமனம் நடந்துள்ளது. அந்த நிபந்தனையை, முதுகலை பட்டங்களுக்கும் நீட்டிக்க முடியாது. எனவே, மனுதாரருக்கு வழங்கப்பட்ட, ஊக்க ஊதியத்தை, திரும்பப் பெறக் கூடாது. ஊதியத்தை மாற்றி நிர்ணயிக்கவும் கூடாது. இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

  1. Kaalai vanakkam
    Yarenum ADW selection list patriya tagavalai pathiyungal

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி