புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2014

புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா





தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக, சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இப்போது வேளாண்மைத் துறைச் செயலாளராக உள்ளார்.

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென பிரவீண்குமார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அவர் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தீப் சக்சேனா 1989-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்தவர். அவரது சொந்த ஊர் மத்தியப் பிரதேச மாநிலம், போபால். பல்வேறு இடங்களில் பல பொறுப்புகளை வகித்த சந்தீப் சக்சேனா, இப்போது தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் திங்கள்கிழமை பிறப்பித்தார்.

இப்போது தலைமைத் தேர்தல் அதிகாரியாகவுள்ள பிரவீண்குமாருக்கு ஒதுக்கப்படவுள்ள பணியிடம் குறித்து தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பணியைத் தொடங்கியவர்: தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் சக்சேனா, சேலத்தில் 1990-ஆம் ஆண்டு உதவி ஆட்சியராக தனது பணியைத் தொடங்கினார். இதன்பிறகு கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கூடுதல் ஆட்சியராக இருந்தார். 1996-97-ஆம் ஆண்டில் மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார்.

அதன்பிறகு, சேலம் ஆட்சியராக 1998 முதல் 2001-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை, வருவாய், வணிகவரிகள் துறை ஆகியவற்றில் கூடுதல் செயலாளராக 2002-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை பணியில் இருந்தார். தனது சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் தாமோ மாவட்டத்தின் ஆட்சியராகவும் பணியாற்றினார்.

2006-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரையில் சர்க்கரைத் துறை ஆணையராகவும், அதன்பிறகு 10 மாதங்கள் தமிழக ஆளுநரின் செயலாளராகவும் இருந்தார். 2008-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரை மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் 2011-ஆம் ஆண்டு நவம்பரில் இருந்து வேளாண்மைத் துறை செயலாளராக இருந்து வருகிறார்.

ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளை நன்கு பேசத் தெரிந்த சந்தீப் சக்சேனா, பி.இ., எம்.டெக்., எம்.பி.ஏ., உள்ளிட்ட பட்டப் படிப்புகளை படித்துள்ளார்.

விரைவில் பொறுப்பேற்பு: பருவ மழை பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதம் குறித்தும், அதற்கான நிவாரணம் பற்றிய பணிகளை வேளாண்மைத் துறை செயலாளராக உள்ள சந்தீப் சக்சேனா மேற்கொண்டு வருகிறார். இந்தப் பணிகள் முடிவடைந்ததும் அவர் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொள்வார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரத்துக்குள் அவர் பொறுப்பேற்க வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

தன் விருப்பத்தின் பேரில் விலகல்: மக்களவைத் தேர்தலின்போது, தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீண்குமார் எடுத்த நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையை எழுப்பின. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, தன்னை துறை ரீதியான பணிக்கு மாற்றும்படி தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையைத் தொடர்ந்து பிரவீண்குமார் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கான பொறுப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி