வறுமைக்கு வறுமை வராதா: -இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்- - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2014

வறுமைக்கு வறுமை வராதா: -இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்-

உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அங்கு அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர் சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது. ஐ.நா., சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது.
வறுமையை ஒழிக்கவும், அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. "ஒருவர் கூட வறுமையில் இருக்கக்கூடாது : வறுமையால் உருவாகும் வன்முறைக்கு முடிவு: யோசித்து முடிவெடுத்து வறுமைக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

எது வறுமை:அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், சத்தாண உணவு, மருத்துவம், வேலை வாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உடை, இருப்பிடம் கிடைக்க வேண்டும். இவை இல்லாத அனைவரும் வறுமை நிலையில் இருப்பவர்கள் என கருதப்படுகிறார்கள். வறுமை, பட்டினி வன்முறைக்கு வழிவகுக்கிறது.


உலகில் ஏற்படும் மரணங்களில், அதிகம் வறுமையினால் தான் ஏற்படுகிறது. எய்ட்ஸ், மலேரியா, டிபி., போன்ற நோய்களால் உயிரிழப்பவர்களை விட, வறுமையினால் இறப்பவர்கள் அதிகம். உலகில் 87 கோடி பேர் போதிய உணவின்றி வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 கோடி பேருக்கு சுத்தமான குடிநீர் வசதி இல்லை. இதில் 40 கோடி பேர் சிறுவர்கள். 160 கோடி பேர் மின்சார வசதியின்றி வாழ்கின்றனர். உலக மக்கள்தொகையில் பாதிபேரின் (50 சதவீதம்) ஒருநாள் வருமானம் 150 ரூபாய்க்கு கீழ் உள்ளது. அதே போல 14 சதவீதம் பேரின் ஒருநாள் வருமானம் 75 ரூபாய்க்கும் கீழ் உள்ளது.

என்ன காரணம்:மக்கள் ஏழ்மை நிலையில் தள்ளப்படுவதற்கு அரசியல்வாதிகள், ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, புதிய தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பது என பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும் முக்கிய காரணம் ஏழை மக்களின் பசியை போக்குவதற்கு எந்த அரசுக்கு அக்கறையில்லாதது தான் முக்கிய காரணம்.


தேர்தலின் போது கட்சிகள் நிறைய வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றனர். ஆனால் ஆட்சியில் அமர்ந்தவுடன் மக்களின் பசியைக்கூட போக்க முன்வருவதில்லை. தங்களை செல்வந்தராக மாற்றிக்கொள்வதற்காகவே சிலர் பதவிக்கு வருகின்றனர். இதனை நாம் நேரடியாகவே பார்க்க முடிகிறது.


ஏழ்மை நிலையில் இருப்பவர்களை ஒரே நாளில் வசதியானவர்களாக மாற்றிட முடியாது. ஆனால் இப்போதிருந்து பல தொலைநோக்கு திட்டங்களை தீட்டினால், வரும் சந்ததியினரும் தொடர்ந்து வறுமைக்கோட்டிலேயே வசிப்பதை தவிர்க்கலாம். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கினால் வறுமை ஒழியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி