1,330 குறட்பாக்களும் தலைகீழ் பாடம்: எல்லப்பன் பயிற்சியில் அசத்தும் மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2014

1,330 குறட்பாக்களும் தலைகீழ் பாடம்: எல்லப்பன் பயிற்சியில் அசத்தும் மாணவர்கள்


உலகெல்லாம் உணர்ந்து ஓதுதற்கு எளியனாய்' உயர்ந்திருக்கிறான், வான்புகழ் கொண்ட வள்ளுவன். உரலில் இடித்த புளி, அளவில் சுருங்கி, கரைத்தால், வீரியமாய் விரிவதுபோல், குறளில் இட்ட பொருளை கொடுத்த வள்ளுவனை எண்ணி, தமிழன்னை தலை கோதி பெருமை கொள்வாள். பேதமும், பேதைமையும் இல்லாத கருத்துகளை,
நாதம் போல் குழைத்து தந்த வள்ளுவனை, நாவிருக்கும் தமிழர் அனைவரும் போற்ற வேண்டும்.

தாயுள்ளத்தோடு, வள்ளுவத்தை ஏற்க வேண்டும் என, பலரை உணர வைத்த தருணம் மிகவும் உணர்ச்சி மயமானது. 'மம்மி' என்றும், 'டாடி' என்றும் அழைத்து, 'டம்மி'யாகி விட்டதடா 'டமில்' என, கும்மியடிப்பவர்களின் எண்ணங்களை, அம்மிக்குழவியில் இட்ட கொப்பரையாய் நசுக்கின, அங்கே மழலையரின் குரல். ஆம்... பூவில் தேன் சொட்டுவதை போல், நாவில் சொட்டியது நல்ல தமிழ். வள்ளுவனின் அத்தனை குறட்பாக்களும், மையம் கொண்ட புயல் மழையாய் கொட்டுகிறது. ஈற்றுச்சீர் போதுமே! அங்கு... கோடை மழையில் நனைந்த மரங்களாய் தளிர்க்கிறது, குறளில் நனைந்தவர்களின் மனதில் தமிழ்! நனைந்த இடம், சென்னை
பல்கலையின் கூட்ட அரங்கு. 'அடடா...! பாலைவனமாய் கிடந்ததடா மனம். இனி, நம் பிள்ளைகளுக்கும் குறள் சொல்லிக் கொடுக்க வேண்டும். தமிழமுதை அள்ளிக் கொடுக்க வேண்டும்' என, பெற்றோர் முடிவெடுக்கின்றனர். அதற்கு காரணமானோர், ஹேமலதா, பொற்செல்வி, ராமகிருஷ்ணன் என்னும், ஏழாம் வகுப்பு படிக்கும், மாணவர்கள். அவர்கள், 1330 குறட்பாக்களையும், மனனம் செய்திருக்கின்றனர். 30, 800, 145... ஏதாவது ஒரு எண்ணை சொன்னால், அந்த எண்ணுக்குரிய குறட்பாக்களை, தயங்காமல் உடனடியாக சொல்கின்றனர்.

ஈற்றுச்சீரை சொன்னால், அந்த குறட்பாவை சொல்லி விடுகின்றனர். அதிகாரத்தின் தலைப்பை சொன்னால், அதற்கு முன், பின் உள்ள அதிகாரங்களையும் சேர்த்து, அவற்றில் உள்ள குறட்பாக்களையும் சொல்லி அசத்துகின்றனர். கோடை வெயிலில் அடிபட்டவன், ஆலமரத்தடி காற்றில் நனைவது போல், சொக்கி கிடக்கின்றனர், மாணவர்களின் திறமையை சோதித்த அத்தனை பேரும்.
அந்த பிஞ்சுகளிடம் கேட்டோம்:
''படிக்க எத்தனையோ செய்யுட்கள் தமிழில் இருக்க, ஏன், திருக்குறளை படித்தீர்கள்?''
''அளவில் சிறிதாய், அர்த்தத்தில் பெரிதாய், அனைவருக்கும் பொதுவாய் இருப்பது திருக்குறள் மட்டுமே என்பதால், தேர்ந்தெடுத்தேன்,'' என்றான், மாணவன் ராமகிருஷ்ணன்.
வள்ளுவனின் ஆசி!
''நாவை மடித்து, நல்ல தமிழ் பேச, மனதை குவித்து ஒருங்கிணைக்க, மனப்பாடம் செய்யும் சக்தியை வளர்க்க, கோபம் குறைக்க ஏதாவது படி, என்றனர், என் பெற்றோர். நான் திருக்குறள் படித்தேன்,'' என்றாள் சிறுமி, ஹேமலதா. ''ஓய்வு நேரம் பயனளிக்க, ஒவ்வொரு மேடையிலும் பரிசு பெற, கேட்பவரை வசியப்படுத்தி, பிரமிக்க வைக்க, ஆசைப்பட்டேன். எளிதாய் கிடைத்தது, திருக்குறளே,'' என்றாள், பொற்செல்வி. ''செல்லும் இடமெல்லாம் சிறப்பு கிடைக்கிறது. பெரிய மனிதரெல்லாம் பாராட்டுகின்றனர். மாலையும், மரியாதை யும் கூடுகிறது. எல்லாம் வள்ளுவனின் ஆசி,'' என, புளகாங்கிதமடைகின்றனர் பெற்றோர். 'சரி... என்னதான் முயற்சி இருந்தாலும், சீர் பிரித்து படிக்க முறையாக பயிற்சி அளிக்க வேண்டாமா?' என்றால், ''எங்களுக்கு, எல்லப்பன் இருக்கும் வரை, ஏன் அந்த கவலை?'' என வினவி, கைநீட்டினர் அவரை. பழுத்த மரமாய், அடக்கமாய் இருந்த எல்லப்பனிடம், ''குறள் கற்பிக்கும் பணியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?' என்றோம்.
அவர் கூறியதாவது:


எத்தனையோ வேலைகளை செய்து விட்டேன். அத்தனை வேலையிலும் இல்லாத திருப்தி, குறள் சொல்லி கொடுக்கும் போது, கிடைக்கிறது. 'பொருளில்லார்க்கு இவ்வு ல கம் இல்லை' என்று மொழிந்த இறவா புலவனின் வரிகளை படித்த பின்பும், பொருளீட்டுவதிலும், பொருள் இருக்க வேண்டும் என, நினைத்தேன். அதனால் தான், குறள் கற்பித்தலை செய்து வருகிறேன். குறள் கற்பிப்பது வெறும் பணி அல்ல. மரம் வளர்ப்பது போன்ற சேவை. இப்போது, நான் திருக்குறள் என்னும் விதையை இளைய மனங்கள் என்னும் நாற்றங்காலில் பதியம் செய்கிறேன். அவர்களுக்குள், ஊறிக்கிடக்கும் இந்த விதை, நாளை விருட்சமாய் விரிந்து, சமூகத்தில் பல மாற்றங்களை உருவாக்கும். நான், வளர்ப்பது மரங்களை அல்ல; நடமாடும் நூலகங்களை. அவர்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள தமிழை, அடுத்தடுத்த தலைமுறைக்கு, பரிமாற்றம் செய்வர். பொருளுக்காய், பொருளில்லா பொருளாய் மாறி வாழும் வாழ்வில், பொருள் உள்ள, பொறுப்புள்ள வாழ்வை அவர்கள் வாழ்வர் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

தமிழை, அடுத்த தலைமுறையிடம் நிலைநிறுத்த, தாத்தா வள்ளுவனை துணைக்கு அழைக்கிறேன்.
பரிசு பெற்ற 43 பேர்!
இதனால், 'இது' கிடைக்கும் என, நான் இதை செய்யவில்லை. இதுவரை, குழந்தைகளை வைத்து, ஆயிரத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகளை நடத்தி விட்டேன். என்னிடம் பயின்ற, 70க்கும் அதிகமான மாணவர்கள், அனைத்து குறட்பாக்களையும் சொல்வர். அவர்களில், 43 பேர், தமிழக அரசின் 10 ஆயிரம் ரூபாய் பணப்பரிசையும், பாராட்டு சான்றிதழையும் பெற்றுள்ளனர்.
நான், குறள் பயிற்சி மட்டுமல்லாமல், நினைவாற்றலை, வேடிக்கையாக வளர்க்கும் கவனகம் நிகழ்ச்சி, பொது அறிவு பயிற்சிகளையும் நடத்துகிறேன். பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் எனக்கு, முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். இவ்வாறு, எல்லப்பன் தெரிவித்தார்.

3 comments:

  1. அருமையான கட்டுரை..அய்யா எல்லப்பன் அவர்களின் முகவரி மற்றும் அலைபேசி எண் கொடுத்திருந்தால் அவரைத் தொடர்புகொள்ள வசதியாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி