அனைத்து பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கழிப்பறை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2014

அனைத்து பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கழிப்பறை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகளை அமைக்கவும், குடிநீர்வசதி ஏற்படுத்தவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த சி.ஆனந்தராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

கல்வித்துறைக்காக அரசு ஆயிரக்கணக்கான கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், பயனற்ற கழிப்பறைகளை சரி செய்வது கிடையாது. மேலும் புதிதாக கழிப்பறை வசதிகளும் செய்து தரப்படுவதில்லை.மாணவ, மாணவிகள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் தொற்று நோய் வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை வசதிகளை 6 மாதத்தில் செய்து கொடுக்க வேண்டும் என கடந்த 2012-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆண்டு தமிழக அரசு கல்வித்துறைக்கு ரூ.17 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.தமிழகத்தில் 37,032 பள்ளிகள் உள்ளன. இதில் 4375 பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை. மாணவர்கள் பயிலும் 4060 பள்ளிகளில் கழிப்பறை இல்லை. மாணவிகள் பயிலும் 898 பள்ளிகளிலும், ஆண்கள் பயிலும் 1189 பள்ளிகளிலும் கழிப்பறைகள் பயனற்று உள்ளன.

இந்தக் குறைபாடுகளை களையக்கோரி கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அனைத்து அரசுப் பள்ளி களிலும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கவும், பயனற்று உள்ள கழிப்பறைகளை சீரமைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி வி.தன பாலன் கொண்ட அமர்வுமுன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். விசாரணைக்குப் பின் தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு:அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கழிப்பறை வசதி செய்வது தொடர்பாக அளித்த மனுவை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை அமைக்க வேண்டும்.

கழிப்பறையை சரியாக பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். இவற்றுடன் பள்ளிகளில் சுத்தமான குடிநீர்வசதியும் ஏற்படுத்த வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.கழிப்பறை விவரங்களை கல்வித்துறை இணையதளத் தில் வெளியிட வேண்டும் என உத்தர விட்ட தலைமை நீதிபதி, வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி