மாணவர்களின் படிப்பறிவு விரிவடைய பிறக்கிறது வழி : பாடப்பொருள் சார்ந்த கேள்விகள் தயாரிக்க அரசுக்கு பரிந்துரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2014

மாணவர்களின் படிப்பறிவு விரிவடைய பிறக்கிறது வழி : பாடப்பொருள் சார்ந்த கேள்விகள் தயாரிக்க அரசுக்கு பரிந்துரை

'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை, அப்படியே கேட்கக் கூடாது. பாடப் பொருள் சார்ந்து, அதே நேரத்தில், பாடத் திட்டத்திற்கு வெளியே இருந்து, கேள்வி கேட்க வேண்டும்' என, தேர்வு சீர்திருத்தக் குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சீர்திருத்தம் குறித்து ஆய்வு : பொதுத்தேர்வு விதிமுறைகள் மற்றும் கேள்வித்தாளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்க, சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) முன்னாள் தலைவர், பாலசுப்ரமணியன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில், கல்வித் துறை இயக்குனர்கள் உட்பட, பலர் இடம் பெற்று உள்ளனர். செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்து, ஏற்கனவே பல

கூட்டங்களை நடத்தி, வரைவு அறிக்கை மற்றும் பரிந்துரை அறிக்கையை, பாலசுப்ரமணியன் குழு தயாரித்து, தமிழக அரசுக்கு சமர்ப்பித்து உள்ளது. 'கோப்பு, முதல்வரிடம் செல்வதற்கு முன், இயக்குனர்கள் பார்வைக்கு, வரைவு அறிக்கையை சமர்ப்பித்து, தேவையான ஆலோசனையை பெற வேண்டும்' என, குழுவிற்கு உத்தரவிடப்பட்டது.

வரைவு அறிக்கை விவரம் : அதன்படி, அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனர், பூஜா குல்கர்னி, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன், மெட்ரிக் கல்வி இயக்குனர், பிச்சை ஆகியோருக்கு, வரைவு அறிக்கை விவரம், நேற்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, துறை வட்டாரம் கூறியதாவது:

பூஜா குல்கர்னி மட்டும், 'அறிக்கையின் விவரங்களை, முழுமையாக படிக்க வேண்டும். எனவே, சில நாட்கள் கால அவகாசம் வேண்டும்' என கேட்டுக் கொண்டார். எனவே, ஒரு வாரத்திற்குப் பின், மாற்று கருத்து இருந்தால், அது குறித்து ஆலோசித்து, வரைவு அறிக்கையில் சேர்க்கப்படும்.

தேர்வு சீர்திருத்தக் குழு, 100 பக்க வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது. அதில் பரிந்துரைகள் மட்டும், 10 பக்கங்களில் இடம் பெற்றுள்ளன.

'பொதுத்தேர்வுக்கான விதிகள், அரசாணைகள், தற்போது, தனித்தனியாக உள்ளன. இப்படி இல்லாமல், அனைத்து விதிகள், அரசாணைகளை பரிசீலனை செய்து, தேவையானவற்றை மட்டும் ஒருங்கிணைத்து, தேர்வுக்கான சட்ட விதிமுறைகளாக தொகுத்து வெளியிட வேண்டும்' என, பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகள், அப்படியே, 'ஈ' அடிச்சான் காப்பி போல், பொதுத்தேர்வுகளில் கேட்கக் கூடாது. பாடப் பொருள் சார்ந்து, அதே நேரத்தில், வெளியில் இருந்து, கேள்விகளை கேட்க வேண்டும்; மாணவர்களின் அறிவை சோதிக்கும் வகையில், கேள்விகள் இருக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கைக்கு, தமிழக அரசு விரைவில் ஒப்புதல் அளித்ததும், அடுத்த கல்வி ஆண்டில் (2015 - 16) இருந்து, சீர்திருத்த விதிமுறைகள் அமலுக்கு வரும். இவ்வாறு, துறை வட்டாரம் தெரிவித்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி