சினிமா, 'டிவி'க்களால் திசை மாறும் மாணவர்கள்: நல்லவற்றை மனதில் ஏற்றவேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2014

சினிமா, 'டிவி'க்களால் திசை மாறும் மாணவர்கள்: நல்லவற்றை மனதில் ஏற்றவேண்டும்

சினிமா, 'டிவி'க்களால் மாணவர்கள் திசை மாறுவதால் கொலை போன்ற விபரீத சம்பவங்கள் நடக்கின்றன என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சில வாரங்களுக்கு முன் அரசு பள்ளி மாணவர் சக மாணவரால் கொலை செய்யப்பட்டார். நேற்று விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், முன்னாள் மாணவரால் கொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்த சம்பவங்களால் பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமுதாயம், பெற்றோர், பள்ளி நிர்வாகம் இணைந்து மாணவர்களின் பிரச்னைகளை கண்டறிந்து உடனுக்குடன் நல்வழிப்படுத்தினால் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கலாம் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

திருவேங்கட ராமானுஜதாஸ் (ஸ்ரீவித்யா கல்வி குழும தலைவர், விருதுநகர்): சமுதாயத்தில் காணப்படும் பல்வேறு பிரச்னைகள், மோதல்கள் பள்ளிகளில் எதிரொலிக்கின்றன. இதனால்தான் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. பிள்ளையை பள்ளிக்கு அனுப்பிவிட்டால் நிர்வாகம், ஆசிரியர் தான் பொறுப்பு என பெற்றோர் நினைக்கின்றனர். வீடு திரும்பிய பின் பள்ளியில் நடந்த நிகழ்வுகளை பெற்றோர் கேட்பதில்லை. இன்றைய சினிமாக்கள் வன்முறை கலாசாரத்தை தூண்டுகின்றன. யோகா, தியான வகுப்பு நடத்தி மனதை ஒருமுகப்படுத்த மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

வி. ராதாகிருஷ்ணன்( தாளாளர், இந்து ரெட்டி உயர்நிலை பள்ளி, கோபாலபுரம்): ஆசிரியர்கள் கண்காணிப்பில் மாணவர்கள் இருக்க வேண்டும். பள்ளியில் போதுமான பாதுகாப்பு வசதிகள் வேண்டும். மாணவர்களிடையே குரோத மனப்பான்மை வளர விடக்கூடாது. அன்பையும், நட்பையும் வளர்க்க யோகா, நீதிபோதனை வகுப்புகள் நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் தெரியபடுத்த வேண்டும்.

பாண்டியராஜன்( பிளஸ் 2 மாணவர், சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்): வகுப்பறைகளில் மாணவர்கள் குழுவாக செயல்படுவதைத் தவிர்த்து அனைவரோடும் இயல்பாக பழக வேண்டும். யாரிடமும் பகைமை வளர்த்துக்கொள்ளக்கூடாது. எந்தப்பிரச்னையாக இருந்தாலும் தலைமையாசிரியர், ஆசிரியர், பெற்றோரிடம் கூறினால் அதற்கு எளிதில் தீர்வு கிடைக்கும். மாறாக மன இறுக்கத்துடன் இருக்கக்கூடாது. 'டிவி', சினிமா நிகழ்வுகளை சீரியசாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

கருப்பசாமி (பிளஸ் 2 மாணவர்,எஸ்.எஸ்.அரசு மேல்நிலை பள்ளி, ராஜபாளையம்): பெற்றோர் தங்களது ஆசையை மாணவர்களிடத்தில் திணிப்பதால் மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவேண்டும். சினிமா, 'டிவி'க்களில் வன்முறை காட்சிகளை பார்க்கும் மாணவர்கள், நிஜ வாழ்க்கையிலும் நிகழ்த்த முயற்சிக்கின்றனர். ஈவ் டீசிங் போன்ற கொடுமைகளில் ஈடுபடுகின்றனர். பள்ளிகளில் விளையாட்டு, நீதிபோதனைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

துரைசெல்வபாண்டியன் (குடும்ப தலைவர், திருத்தங்கல்): பள்ளிகளுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கு வந்துவிடுகின்றனர். ஆசிரியர்கள் 9 மணிக்குமேல்தான் வருகின்றனர். முன்னதாக வரும் மாணவர்கள் வகுப்பறையில் ஒன்று கூடி தேவையில்லாத விஷயங்களை பேசி பிரச்னைக்குள் சிக்கி விடுகின்றனர். மேலும் மாணவர்கள் சமூக விரோதிகளுடன் பழக்கம் ஏற்படுத்தி கொள்கின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகள் தேவையில்லாத நபர்களுடன் பழகுவதை தடுக்க வேண்டும்.

சங்கர நாராயணன் (குடும்ப தலைவர், ஸ்ரீவில்லிபுத்தூர்): சினிமாக்களில் பள்ளி மாணவர்களை கதாநாயகர்களாகவும், கதாநயாகிகளாகவும் காண்பிக்கின்றனர். சினிமாக்களால் காதல், வன்முறை ஆழ்மனதில் பதிந்து விடுகிறது. அதிக பணப்புழக்கம் கலாசார சீரழிவிற்கு வழி வகுக்கிறது. மாணவரின் பழக்க வழக்கங்களை பெற்றோரும் கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் அவசியம்.

டாக்டர் அர்ஜூனன்( மன நல மருத்துவர், சேத்தூர் ): அடுத்த தலைமுறை மாணவர்கள் நல்ல செய்திகளை கேட்க தயாராக உள்ளார்கள்.ஆனால் அவர்களுக்கு வழிகாட்ட,எடுத்துக்கூற நல்ல சமுக ஆர்வலர்கள் இல்லை. சமீப காலமாக பள்ளிகளிள் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. முன்பு கல்லூரிகளில் நடக்காத நிகழ்வுகள் தற்போது பள்ளிகளிள் நடைபெறுகிறது.இதற்கு நான்கு காரணங்கள் உள்ளது.1)குழந்தைகளின் பெற்றோர், 2)ஊடகம் (சினிமா, 'டிவி' மற்றும் பல சாதனங்கள்). 3)சுற்றுபுற சூழல்.4)கல்விக்கூடம். பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று வரும் பிள்ளைகள் கவனம் படிப்பை தவிர்த்து வேறு வழியில் செல்கிறதா என்பதை கவனிப்பது இல்லை. மாணவர்களை சுற்றியுள்ள சமூகம் நல்ல சூழ்நிலையில் இருந்தால்தான் மாணவன் சிறந்தவனாக இருப்பான். தற்போது வெளியாகும் சினிமாக்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்தாமல் பாலியல் வன்முறை, கொலை போன்றவற்றை சித்தரிக்கின்றன. இவற்றை நேரடியாக பார்க்கும் மாணவர்கள் தனது நிஜ வாழ்க்கையில் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. சமீப காலத்தில் வெளி வரும் சினிமாக்கள் மாணவர்களின் மன நிலையை பாதிக்கும் நிலையில் அமைந்துள்ளன. முன்பு பள்ளிகளில் நீதிபோதனை என்ற பாடத்தில் மாணவர்களுக்கு வாழ்க்கை முறைகளைஆசிரியர் எடுத்துக்கூறுவார். தற்போது பள்ளிகளில் இந்த நடமுறை இல்லை. பள்ளிகளில் பாடத்தை தவிர எதையும் போதிப்பது கிடையாது. மாணவர்கள் பெரும்பாலான நேரத்தை கல்விக்கூடத்தில் கழிக்கிறார்கள். ஆசிரியர், மாணவர், பெற்றோர் இணைந்து செயல்படும் நிலை அமைந்தால் தான் மாணவர்களை சிறந்த முறையில் உருவாக்க முடியும். வெறும் சட்டங்கள் மற்றும் தண்டனையால் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாது. குழந்தைகள் தங்கள் மனநிலையில் படிக்க வேண்டும் என விரும்புகின்றனர். நினைத்தது நடந்தால் சந்தோஷம், எதிர்மறையாக நடந்தால் அதிக கோபம், எதிர்புணர்ச்சியும் காட்டுகின்றனர். மாணவர்கள் நல்ல செய்திகளை கேட்கவும் அதன்படி நடக்க ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு சமுகத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை எடுத்து கூறி வழிகாட்ட போதுமானவர்கள் இல்லாததால் இவர்களது வாழ்க்கை வீணாகிறது.

விருதுநகர்மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார்: "டிச.,1ல் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களின் கூட்டத்தைக்கூட்டி பந்தல்குடி பள்ளியில் மாணவர் கொலை செய்யப்பட்ட பிரச்னை தொடர்பாக விவாதிக்கப்படும். பள்ளி வாரியாக மாணவர்களின் பிரச்னைகளை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும். தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் ,”என்றார்.

பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சம்சுதீன்: "காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வந்தேன். ஆனால் 8.10க்குள் இக்கொலை நடந்து முடிந்துவிட்டது. பிளஸ் 2 மாணவர்கள், கத்தியால் வெட்டி குத்தப்பட்டமாணவரை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுவிட்டனர்,”என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி