கீழக்கடம்பூரில் கண்டெடுக்கப்பட்ட பிரம்மா மனைவி பிராமி அம்மன் சிற்பம்.
மூத்ததேவி சிற்பம்.
வராகி சிற்பம்.
சாமுண்டி, இந்திராணி சிற்பம்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே சோழர் கால சிற்பங்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கடம்பூர் கிராமத்தில் அமுக்கிராங்குட்டை குளம் உள்ளது. இதனருகே உள்ள மரத்தை வேருடன் எடுக்கத் தோண்டிய போது சப்தமாதர் சிற்பங்கள் மற்றும் கிபி 9-10 ஆம் நூற்றாண்டு கால மூத்ததேவி சிற்பம் மண்ணில் புதையுண்டு கிடப்பதை அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில், திராவிட வரலாற்று ஆய்வுக் கழக இயக்குநர் இல.கணபதிமுருகன், தலைவர் ஆ.முத்துக்குட்டி, சி.பாஸ்கரன், துணைப் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், ஆய்வாளர் இல.கணபதி முருகன் தெரிவித்ததாவது:
சோழர்களின் வரலாற்றில் மேலக் கடம்பூர், கீழக் கடம்பூர் பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கிருந்த சோழ அரண்மனையில்தான் ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டான். அந்நிகழ்வுதான் அப்போதைய தமிழக வரலாற்றை மாற்றியது. ராஜராஜன் என்ற மாமன்னன், சோழ சாம்ராஜ்ஜியத்துக்கு மகுடம் சூட கிடைத்த வாய்ப்பாகவும் இந்நிகழ்வுதான் காரணமானது. மேலகடம்பூரில் அமைந்துள்ள ருத்ரபதீஸ்வரர் கோயில் மிகவும் பழமையானது. வரலாற்றுச் சிறப்புமிக்கது.
சப்தமாதர் சிற்பங்கள்: பிரம்மாவின் மனைவியான பிராமி நான்கு கரங்களுடன் குண்டம், அட்சய பாத்திரம், ஜெப மாலை, அகப்பையை ஏற்றி அபய, வரத முத்திரையில் உள்ள சிற்பம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவனின் சேவகனான யமனுக்கு சக்தியை வழங்கக் கூடிய தேவியான சாமுண்டி, விரிசடை அலங்காரத்தில் அபய முத்திரையில் காட்சி தருகிறார். சிவனுக்கு சக்தி மூல ஆதாரமாக விளங்கும் மகேஸ்வரி நான்கு கரங்களுடன் உடுக்கை ஏந்திய நிலையில் முக்கண்ணை உடையவளாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். முருகனின் சக்தி மூல ஆதாரமாக விளங்கும் கௌமாரி சிற்பமானது, நான்கு கரங்களுடன் அபய, வரத முத்திரையில் பொலிவுற வடிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணுவின் சக்தியாக போற்றப்படும் வைஷ்ணவி சிற்பமும் நான்கு கரங்களுடன் அபய, வரத முத்திரையில் சங்கு, சக்கரம் ஏந்திய பத்மபீடத்தில் வடிக்கப்பட்டுள்ளது. வராக மூர்த்திக்கு மூல ஆதாரமாக விளங்கக் கூடிய வராகி காதில் மகர குண்டலங்கள் பூட்டி சங்கு, சக்கரம் ஏந்தி அபய முத்திரையில் அருள்பாலிக்கும் தோற்றத்தில் விளங்குகிறார்.
இந்தத் தெய்வ உருவங்கள் அனைத்துமே எளிய வேலைப்பாடுடன் வடிக்கப்பட்டுள்ளது. இவை மேலகடம்பூர் ருத்ரபதீஸ்வரர் கோயிலில் தேவகோஷ்டச் சுவரில் தான் இடம் பெற்றிருக்க வேண்டும். தற்போது இடம் பெயர்ந்து புதைந்துள்ளது என்பதை கோயில் அமைப்பு மூலம் அறியலாம். இந்தச் சிலைகள் யாவும் பிற்காலச் சோழர்களின் இறுதி காலக் கட்டத்தைச் சேர்ந்தது.
மூத்த தேவியின் சிற்பம்: சப்தமாதர் சிற்பத்தில் அருகாமையிலேயே மூத்த தேவியின் 3.5 அடி நீளம், 2 அடி அகலத்திலான கற்பலகையில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. காக்கை கொடி ஏந்திய மூத்த தேவியின் கழுதை வாகனம், தேவியின் மைந்தர்களான மாந்தன், மாந்தி உருவங்கள் நன்றாகவே தெரிகிறது. கண்களை முடியவாறு செதுக்கப்பட்டுள்ள இச்சிற்பம் நீண்ட நாள்களாக மண்ணில் புதைந்திருந்த காரணத்தால் மணலால் அரிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
பாண்டியர் படையெடுப்புகள்: மூன்றாம் ராஜராஜன் (கிபி 1216-1256) சோழ மண்டலத்தை ஆண்டு கொண்டிருக்கும் போது நிகழ்ந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் நிகழ்த்திய படையெடுப்புகளில் இங்கு பேரழிவு உண்டானதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
அவ்வாறெனில் மேலக்கடம்பூர் கோயில் புனரமைப்பு பாதியில் கைவிடப்பட இந்தப் படையெடுப்பு காரணமாக இருந்திருக்க வேண்டும். மூன்றாம் ராஜராஜனுக்கு முந்தைய காலக்கட்டத்திலேயே இங்கு பழமையான கோயில் இருந்துள்ளது. புனரமைப்பு பணிகளை 3-ஆம் குலோத்துங்கனும், 3-ஆம் ராஜராஜனும் மேற்கொண்டுள்ளது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. ஆகவே, இந்தச் சிற்பங்கள் காலமும் கி.பி 12-13 ஆவது நூற்றாண்டுகளைச் சேர்ந்தது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி