போலீஸ் விதிமுறையை அமல்படுத்த கால அவகாசம் வேண்டும் : நிதி வசதி இல்லை என பள்ளி நிர்வாகங்கள் புலம்பல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2014

போலீஸ் விதிமுறையை அமல்படுத்த கால அவகாசம் வேண்டும் : நிதி வசதி இல்லை என பள்ளி நிர்வாகங்கள் புலம்பல்

பள்ளி மாணவர்கள் பாதுகாப்புக்காக, போலீசாரின் விதிமுறைகளை செயல்படுத்த, மேலும் கால அவகாசம் கேட்டு, பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்தியுள்ளன.

கர்நாடகா, மாரத்தஹள்ளி விப்ஜியார் பள்ளியில், சிறுமி பாலியல் பலாத்கார சம்பவத்துக்கு பின், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்திலும், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்துதல், செக்யூரிட்டிகளை நியமித்தல், ஆசிரியர் மற்றும் பள்ளி ஊழியர்கள் நியமனத்தின்போது பின்னணியை கண்டறிதல், வேன் டிரைவர்கள் குறித்த தகவல்களை பெறுதல் என, பல விதிமுறைகளை, அக்டோபர், 31க்குள் அமல்படுத்த, பெங்களூரு போலீசார் உத்தரவிட்டிருந்தனர். விதிமுறைகளை செயல்படுத்துவதில், நிதி நிலையை காரணம் காட்டி, அரசு பள்ளி நிறுவனங்கள் தாமதம் காட்டின. ஆனால், தனியார் பள்ளி நிர்வாகங்கள், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. விதிகளை செயல்படுத்த, கால அவகாசம் தேவை என, கோரின. பள்ளி வளாகம் முழுவதும், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்துவதற்கு போதுமான நிதி வசதியில்லை என, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கூறுகின்றன.

அரசு பள்ளிகளோ, பெற்றோருக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு, போதுமான நிதி இல்லை என்று தெரிவித்துள்ளன. சில தனியார் பள்ளிகள், குழந்தைகள் பாதுகாப்புக்கு ஆசிரியர்கள் தான் பொறுப்பேற்க வேண்டுமென்று, உத்தரவிட்டுள்ளன.

கர்நாடக மாநில தனியார் பள்ளி இணை நடவடிக்கை கமிட்டி ஒருங்கிணைப்பு செயலர் சசிகுமார் கூறியதாவது: சில அடிப்படை வழிகாட்டுதல்களை நிறைவேற்றுவதில் ஆட்சேபனை இல்லை. பெற்றோருக்கு அடையாள அட்டை வழங்க, தயாராகவுள்ளோம். ஆனால், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்துவது, பள்ளி வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவியை பொருத்துவது போன்றவற்றுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதை அமல்படுத்த, கால அவகாசம் தேவை. விதிமுறைகளை கண்காணிக்க, காவல் துறை, பள்ளி வளாகத்துக்குள் வருவதை விரும்பவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

வி.வி.ஐ.பி., பாதுகாப்பு டி.சி., ஈஸ்வர் பிரசாத் கூறுகையில், "கர்நாடகா உயர் நீதிமன்ற உத்தரவு படி, போலீஸ் துறை விதித்த விதிமுறைகள் செயல்படுத்தப் பட்டுள்ளதா என்பதை அனைத்து பள்ளிகளிலும் பார்த்தோம். சில பள்ளிகளில் மட்டுமே, விதிமுறை கடைபிடிக்கப்படுவது தெரியவந்தது. ஆனால், கால அவகாசம் கேட்டு, பள்ளிகள் தொடர்ந்த வழக்கு, வரும், 7ம் தேதி, விசாரணை நடக்கவுள்ளதால், பள்ளிகளில் ஆய்வு நிறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி