தனுஷ்கோடி அழிந்து போன 51 ஆம் ஆண்டு துவக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2014

தனுஷ்கோடி அழிந்து போன 51 ஆம் ஆண்டு துவக்கம்!

ஆழிப்பேரலைக்குள் மூழ்கி இன்றும் அதன் மிச்சசொசங்களுடன் நினைவு சின்னமாக திகழும் தமிழகத்தின் துறைமுக நகரங்களில் ஒன்றான தனுஷ்கோடி, அழிந்து போன 51 ஆம் ஆண்டு துவக்கத்தில் இன்று கால் பதிக்கிறது.


இந்திய நாட்டின் தென்கோடி எல்லைபகுதி தனுஷ்கோடி. ராமனின் கையில் இருந்த வில்லினை போன்ற தோற்றம் கொண்ட நிலப்பகுதி இது என்பதால் இதற்கு தனுஷ்கோடி என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு. வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் தனுஷ்கோடி இன்றுவரை மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாகதான் அரசால் கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயல் தான்.



1964 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் புயல் ஒன்று உருவானது. இந்த புயல் மெல்ல மெல்ல வழுவிழந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. மணிக்கு 400 முதல் 550 கி.மீ வேகத்தில் வந்த இந்த புயல் டிசம்பர் 22 ஆம் தேதி இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளான வவுனியாவை தாக்கியது. அதன்பின், வங்க கடலில் உள்ள பாக்ஜலசந்தி கடலில் மையம் கொண்ட இந்த புயல்தான் 23 ஆம் தேதி அதிகாலை தனுஷ்கோடியை நோக்கி வந்தது. இந்த புயலின் வெளிப்பாடாக மணிக்கு 280 கி.மீ வேகத்தில் காற்று வீசியதுடன் கடும் மழையும் பெய்தது. இந்த புயல்தான் தங்கள் வாழ்க்கையை புரட்டிபோட உள்ளது என்பதை அறியாத மக்கள் வழக்கம் போல் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதில், பாம்பன்-தனுஷ்கோடி இடையிலான பயணிகள் ரயிலும் ஒன்று.



இந்தியா வழியாக இலங்கை செல்ல விரும்புபவர்களுக்கென அந்நாளில் போட் மெயில் சர்வீஸ் இருந்து வந்தது. ரயில் மற்றும் கப்பல் வழி பயணமான இதில், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயிலில் தனுஷ்கோடிக்கு முதலில் வரவேண்டும். அங்கிருந்து இலங்கை செல்ல தயாராக இருக்கும் இர்வின் கோஷன் என்ற கப்பலில் பயணித்து இலங்கையை அடையலாம். இது தவிர, தனுஷ்கோடிக்கு வர விரும்பும் யாத்திரைவாசிகள் மற்றும் உள்ளூர் பயணிகளுக்காக ‘வாட்டர் டாங்’ எனப்படும் பயணிகள் ரயிலும் நாள்தோறும் இயங்கி வந்தது.

இந்த ரயில் 23 ஆம் தேதி நள்ளிரவு தனுஷ்கோடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. தனுஷ்கோடியை அடைய சில நூறு அடி தூரமே இருந்த நிலையில், பலத்த காற்றுடன் மழையும் கொட்ட துவங்கியது. இதனால், தனுஷ்கோடிக்கு ரயில் வருவதற்கான அனுமதி சிக்னல் கொடுக்கப்படவில்லை. கடும் இருட்டில் மழையும் கொட்டியதால் ரயில் டிரைவரால் அந்த சிக்னலை பார்க்க முடியவில்லை. இதனால் பயணிகள் ரயில் தனுஷ்கோடியை நோக்கி செல்ல, அந்நேரத்தில் எழுந்த ஆழிப்பேரலை ரயிலின் 6 பெட்டிகளை ஆழ்கடலுக்குள் இழுத்து சென்றது. நள்ளிரவு நேரம் என்பதால் ஜன்னல்கள், கதவு என அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ரயிலில் பயணித்த 115 பேரும் பரிதாபமாக பலியாகினர். ஆழிப்பேரலையின் இந்த கோர தாண்டவம் பற்றிய செய்திகூட இரு நாட்களுக்கு பின்னரே அரசு நிர்வாகங்களுக்கு தெரிய வந்தது.

இதன்பின்னரும் தொடர்ந்து வீசிய புயலில் சிக்கி தனுஷ்கோடி நகரமே உருக்குலைந்து போனது. இங்கிருந்த ரயில் நிலையம், அஞ்சலகம், கோயில்கள், தேவாலயம், நகரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் என ஒன்றுகூட புயலுக்கு தப்பவில்லை. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிரமாண்ட கட்டிடங்களே கடலால் துவம்சம் செய்யப்பட்ட நிலையில், ஏழை மீனவர்களின் வீடுகள் என்னவாகியிருக்கும் என நினைத்துகூட பார்க்க முடியவில்லை. அந்தளவிற்கு சுமார் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் நீராலும், மணல் திட்டுகளாலும் தனுஷ்கோடி நகரம் மூழ்கடிக்கப்பட்டது. இதில் 1,800க்கும் மேற்ப்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புயலின் கோரத்தை உணர்ந்த அரசு தனுஷ்கோடி பகுதியை இனி மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக (Unfit for living)
அறிவித்தது. தனுஷ்கோடியில் வசித்த மக்களுக்காக புதிய வாழ்விடங்கள் உருவாக்கப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டனர்.

ஊரையே தனக்குள் உள்வாங்கி கொண்ட வங்க கடலால் வளைக்க முடியாமல் போனது தனுஷ்கோடியில் இருந்த துறைமுக பாலமாகும். அந்த அளவிற்கு அந்த பாலம் உலோக கலவைகளால வார்க்கப்பட்டிருந்தது. அங்கிருந்து இனி கப்பல் போக்குவரத்தினை இயக்க வாய்ப்பில்லாமல் போனது. இதனால், கப்பல் பயன்பாட்டிற்கு உதவிய துறைமுக பாலம் புயலுக்கு பின் அப்பகுதியில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கு உதவி வந்தது.

ஆனால், உருக்கி ஊத்தப்பட்ட உலோகங்களால் உருவான இந்த பாலம் அதிகார அரசியல் வர்கத்தின் கண்களை உயர்த்தியது. இதனால், கடந்த 90களின் துவக்கத்தில் இந்த பாலம் தனியாரிடம் ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுத்த தனியார் பாலத்தினை துகள் துகளாக பெயர்த்தெடுத்து சென்றனர். இப்போது, அந்த பாலத்தை கட்ட வேண்டும் எனில் பலகோடி தேவைபடும். ஆனால், பாலத்தை ஏலம் விட்டதின் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாயோ சொற்பமான தொகைதான். பாலத்தினை ஏலம் எடுத்தவர்களுக்கும் அதற்கு உதவிய மக்கள் பிரதிநிகள் சிலரும் அடைந்ததோ கொள்ளை லாபம்.

இந்த பாலத்தினை தொடர்ந்து பராமரித்து இருந்தால் சேதுசமுத்திர திட்டதிற்கும், வரும் காலங்களில் தனுஷ்கோடி பகுதிகளில் ஏற்பட உள்ள வளர்சிக்கு பெரிதும் உதவியிருக்கும். மேலும், இலங்கையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன நாட்டினால் நம் நாட்டிற்கு எழுந்துள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க நமது கடற்படை கப்பல்களுக்கு இந்த பாலம் இன்றியமையாததாக இருந்திருக்கும்.

கடல் வழி போக்குவரத்து வளர்ந்து வரும் இக்காலத்தில், இருபுறமும் கடல் சூழ்ந்த தனுஷ்கோடிக்கு தற்போது மீண்டும் சாலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. தேசிய நெடுஞ்சாலை துறையினர் சுமார் 53 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர்.

கடல் கொண்ட தனுஷ்கோடி பகுதியில் குடிதண்ணீர், சாலை, மின்சாரம் என எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையிலும் தனுஷ்கோடி கடலை தங்களை தாலாட்டும் தாயின் மடியாக கருதும் மீனவர்கள் இன்னும் அந்த மணற்குன்றுகளுக்கு மத்தியில் வாழ்வதையே வரமாக கருதி வசித்து வருகின்றனர். அந்த மீனவர்களுக்கு மட்டுமல்லாது நாடு முழுவதிலும் இருந்து தனுஷ்கோடியை காணவரும் சுற்றுலா பயணிகளுக்கும் 51 ஆண்டுகளுக்கு பின் அமைய இருக்கும் சாலை புதிய பாதையினை ஏற்படுத்தும்!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி