பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த சட்டம் தேவை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2014

பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த சட்டம் தேவை

அனைத்துவகை பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய பாதுகாப்புச் சட்டங்களை தமிழக அரசு இயற்ற வேண்டும் என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

சென்னை கோடம்பாக்கம் லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாஸ்கர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியை மீது தொடுக்கப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் அமைப்பாளர் கு.பூபாலன் பேசியது:

பள்ளி வளாகங்களில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தக் கூடிய உரிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டின் கல்வி முறைதான் இத்தகைய சம்பவங்களுக்குக் காரணமாக உள்ளது. எனவே அதில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.

சென்னை லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்குள் ஆள்களை அனுப்பி ஆசிரியரைத் தாக்கிய அருளானந்தம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நடைபெறாத வகையில் அந்த நடவடிக்கை இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மீது தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எத்திராஜுலு பேசும்போது, வரும் கல்வியாண்டில் பொதுத் தேர்வுகளில் 95 சதவீத தேர்ச்சி இலக்கு நிர்ணயித்துள்ளதாகப் பள்ளிக் கல்வி செயலாளர் சபிதா தெரிவித்துள்ளார். இத்தகைய இலக்கு ஆசிரியர்கள் மீதும், மாணவர்கள் மீதும் தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.

மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.என்.ஜெனார்த்தனன் பேசியபோது, அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகைப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி