தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஊழியர் பற்றாக்குறை: ஆசிரியர்கள் அவதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2014

தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஊழியர் பற்றாக்குறை: ஆசிரியர்கள் அவதி

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஊழியர் பற்றாக்குறை உள்ளதால், பல்வேறு அலுவல் காரணமாக அந்த அலுவலகத்துக்குச் செல்லும் ஆசிரியர்களும், பொதுமக்களும் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்துக்கு ஒரு உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் உள்பட மொத்தம் 14 அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இம் மாவட்டத்தில் மொத்தம் 809 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப் பள்ளிகளில் 10 ஆயிரத்து 980 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இப் பள்ளிகளில் ஆசிரியர்களை நிர்வகிப்பது, ஆசிரியர்களுக்கான சம்பளம் பட்டுவாடா செய்தல், சேமநல நிதிக் கடன், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பல்வகை ஊக்க ஊதியம் வழங்குதல், மருத்துவ ஈட்டுத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்குதல், விடுப்பு பதிவு ஆகியவற்றையும், ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பணப் பலன்கள் வழங்குதல் போன்ற பணிகள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்த அலுவலகங்களில், பதிவறை எழுத்தர்கள், எழுத்தர்கள், உதவி எழுத்தர்கள், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் என 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களும், உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் இருவர், கண்காணிப்பாளர் ஒருவர் என 3 அலுவலர்களும் பணியில் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பணி ஓய்வு பெறுவது, பணி மாற்றலில் செல்வது, மருத்துவ விடுப்பில் செல்வது என பல காரணங்களால் மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தற்போது ஒவ்வொரு உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களிலும் இரு தொடக்கக் கல்வி அலுவலர்களும், ஒரு கண்காணிப்பாளர், ஒரு எழுத்தர் உள்ளிட்டோர் மட்டுமே பணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் மேற்கண்ட பணிகளுக்காக இந்த அலுவலகங்களுக்குச் செல்லும் ஆசிரியர்கள், பொதுமக்கள் தங்களது வேலைகள் முடியாத நிலை ஏற்படுகிறது.

ஓய்வு பெற்றவர்கள் தங்களது விவரங்கள் வேண்டி, மாதக்கணக்கில் நடையாய் நடந்தும் பணிகள் முடியவில்லை என வருத்தப்படுகின்றனர்.

இதுகுறித்து தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், 12 பேர் வரை வேலை பார்த்த அலுவலகத்தில் தற்போது 5 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் ஒன்றியம் முழுவதும் இயங்கி வரும் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டிய உயர் அதிகாரிகள், அலுவலகத்தில் அமர்ந்து எழுத்தர் பணியைச் சேர்த்துப் பார்க்கும் அவல நிலை உள்ளது என்றார்.

இதுகுறித்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அறிவழகனிடம் கேட்டபோது அவர் கூறியது: இம் மாவட்டத்தில் ஊழியர் பற்றாக்குறை இருப்பது உண்மைதான்; ஆனால் பணிகள் ஓரளவு சீராகவே நடைபெற்று வருகிறது.

ஊழியர் பற்றாக்குறை குறித்து எங்களது இயக்குநர் அலுவலகத்தில் எடுத்துக் கூறியுள்ளோம். எனவே இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி