'பிராட்பேண்ட்' வசதி பெறுவதற்கு ஆர்வமில்லை: ஒரு சதவீதம் கூட விண்ணப்பிக்காத ஆபரேட்டர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2014

'பிராட்பேண்ட்' வசதி பெறுவதற்கு ஆர்வமில்லை: ஒரு சதவீதம் கூட விண்ணப்பிக்காத ஆபரேட்டர்கள்

தமிழகத்தில், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், கேபிள் மூலம், பிராட்பேண்ட் வசதியை வழங்க முடிவு செய்யப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில், திட்டத்தை செயல்படுத்துவதற்கு, கேபிள் ஆபரேட்டர்களிடம், விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஒரு சதவீதம் கேபிள் ஆபரேட்டர்கள் கூட விண்ணப்பம் செய்யவில்லை. அதனால், தமிழக கேபிள், 'டிவி' நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
சந்தாதாரர்கள்:


தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், தற்போது, 63 கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து, 26 ஆயிரத்து, 246 கேபிள் ஆபரேட்டர்கள் மூலம், 70 லட்சத்து, 52 ஆயிரம் சந்தாதாரர்களுக்கு கேபிள், 'டிவி' சேவையை வழங்கி வருகிறது. அரசு கேபிள், 'டிவி' வாயிலாக, கேபிள், 'டிவி' ஆபரேட்டர் மூலம், மாநிலம் முழுவதும் பிராட்பேண்ட் வசதி (அதிவேக அலைவரிசை சேவை) மற்றும் இன்டர்நெட் சர்வீஸ் (பிற இணையதள சேவை) ஆகியவற்றை, குறைந்த கட்டணத்தில் வழங்க முடிவு செய்தது.

சேவை என்ன?

தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், இந்திய அரசின் ரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து, அதிவேக அலைவரிசை சேவையையும், இதர இணைய தள சேவைகளையும், குறைந்த கட்டணத்தில், மாவட்ட கேபிள் ஆபரேட்டர்கள், வட்ட கேபிள் ஆபரேட்டர்கள், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் ஆகியோர் மூலம் வழங்க திட்டமிட்டது. தமிழகம் முழுவதும், மாவட்டம் வாரியாக, கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கேபிள் ஆபரேட்டர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். சந்தாதாரர்களிடம் வசூல் செய்யும் கட்டணத்தில், 40 சதவீதம் கேபிள் ஆபரேட்டர்களுக்கும், ஏழு சதவீதம் அரசு கேபிள், 'டிவி'க்கும், 18 சதவீதம் ரயில் டெல் நிறுவனத்துக்கும், ஏழு சதவீதம் ரயில்வேக்கும், எட்டு சதவீதம் தொலை தொடர்பு துறை நிறுவனத்துக்கும் வழங்க திட்டமிடப்பட்டது.

அறிவுறுத்தல்:

ரயில்டெல் நிறுவனம், தன் ரயில் ஒயர் சேவையை, அருகாமையில் இருக்கும் ரயில் நிலையத்தில் இருந்து, அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின், பைபர் கேபிள் வழியாக, கேபிள் ஆப்ரேட்டர்களின் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்க திட்டமிடப்பட்டது. கேபிள் ஆபரேட்டர்கள், இணையதள வசதியை பெறுவதற்கு, விண்ணப்ப படிவங்களை, தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன் மூலம் ரயில்டெல் நிறுவனத்துடன், தொடர்பு ஏற்படுத்தி தரப்போவதாக தெரிவிக்கப்பட்டது. வீட்டு உபயோகத்துக்கான திட்டத்தில், குறைந்தபட்ச கட்டணம், 499 ரூபாயும், அதிகப்பட்ச கட்டணம், 2,499 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான திட்டத்தில், குறைந்தப்பட்ச கட்டணம், 2,199 ரூபாய், அதிகப்பட்ச கட்டணம், 14 ஆயிரத்து, 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.

அதிர்ச்சி:

கேபிள் ஆபரேட்டர்களுக்கு அழைப்பு விடுத்து, ஒரு மாதம் கடந்த நிலையில், தமிழகம் முழுவதிலும் இருந்தும், வெறும், 300 கேபிள் ஆபரேட்டர்கள் மட்டுமே, திட்டத்தை செயல்படுத்துவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். தமிழகத்தில், 26 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்கள் உள்ள நிலையில், ஒரு சதவீதம் பேர் கூட விண்ணப்பிக்காதது, தமிழக அரசு கேபிள், 'டிவி', ரயில் டெல் நிறுவனம் ஆகியவற்றுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் திட்டத்தை, திட்டமிட்டபடி செயல்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி