அடிமை முறை இன்னும் இருக்கிறதா-இன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்- - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2014

அடிமை முறை இன்னும் இருக்கிறதா-இன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்-

நாடு சுதந்திரமடைந்துவிட்டது. இனி ஆண்டானும் இல்லை அடிமையும் இல்லை'. - அரசியல் மேடைகளில் கேட்டுக்கேட்டு இந்த வார்த்தைகள் பழகிப்போய்விட்டன. ஆனால் இன்றைக்கும் ஏதோ ஒருவடிவில் அடிமை முறை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதனால்தான் அடிமைத்தனமாக வாழ்பவர்களை, மீட்டெடுக்கும் பணியை வலியுறுத்தி டிச., 2 'சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினமாக' .நா. 1986 முதல் அனுசரித்து வருகிறது.

அடிமை சமுதாயம் :
மனித குலம் தோன்றியபோது அது பொதுவுடமை சமூகமாகதான் இருந்திருக்கும். இயற்கையில் கிடைத்த காய் கனிகளையும், வேட்டையாடிய விலங்குகளையும் பகிர்ந்து உண்டான். அடுத்தகட்டமாக குழுகுழுவாகப் பிரிந்து வாழத்துவங்கினான். இந்தக் குழு ஆடு, மாடு போன்றவற்றை வளர்க்கத் துவங்கியது. மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போக அவர்களுக்கான உணவின் தேவையும் அளவும் அதிகரித்தது. உணவுக்காக இந்தக் குழுக்கள் மோதிக்கொள்ளத் துவங்கின. இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொள்வதில் போட்டி ஏற்பட்டது. போட்டியில் தோற்ற ஆண்கள் கொல்லப்பட்டனர். அவர்களைச் சார்ந்த பெண்களை வெற்றி பெற்ற குழுவினர் கொண்டு சென்றனர். இதற்குப்பின் தோற்றுப்போன ஆண்களையும் அவர்கள் கொல்லவில்லை. தங்களுக்கு வேலை செய்யும் அடிமைகளாக்கிக்கொண்டனர். அப்போது தான் அடிமை சமுதாயம் உருவானது.
யார் அடிமை :
தனிமனித சுதந்திரம் எதுவுமின்றி ஜாதி, குடும்பம், நிறுவனம், அரசாங்கம் போன்றவற்றில் துளியும் விருப்பமின்றி வேலை செய்யும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படும் ஒருவர் அடிமை எனப்படுவார். பண்டைகாலத்தில் ஒருவர் பிறப்பினாலோ, பிடிக்கப்படுவதனாலோ, விலைக்கு வாங்கப்படுவதனாலோ அடிமையாக்கப்பட்டார். அவ்வாறு அடிமையானவருக்கு, இத் தளையில் இருந்து விடுபடும் உரிமையோ, வேலை செய்ய மறுக்கும் உரிமையோ, உழைப்புக்கான ஊதியம் பெறும் உரிமையோ கிடையாது. "போனால் போகட்டும்" என்று உயிர் வாழ்வதற்கான உணவு மட்டும் அடிமைக்கு வழங்கப்பட்டது. அடிமைப்படுத்தி உள்ளவரின் சொத்தாக அவர் கருதப்பட்டார். அடிமைப்படுத்தப்பட்டவரிடம் வலுக்கட்டாயமாக வேலை வாங்குவது "அடிமை முறை"யாகும். அடிமைகள் ரத்தமும் சதையும் கொண்ட மனிதனாகக் கருதப்படாமல் உற்பத்திக் கருவியாகவே கருதப்பட்டனர். அரிஸ்டாட்டில் அடிமைகளை "பேசும் கருவி" என்று சொன்னது சரியானதே.
அடிமை முறையின் துவக்கம் :
அடிமை முறை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலே இருந்தது.அடிமையால் எந்த பயனும் இல்லை என்றால் அவர் கொல்லப்படுவார். அல்லது ஆள் இல்லாத தீவில் கொண்டு விடப்படுவார். பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும், பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவதும் அடிமைமுறையின் ஒரு அங்கமாக இருந்தது. தொன்மையான நாகரிக நாடுகள் என வர்ணிக்கப்படும் கிரேக்கம், எகிப்தின் வளர்ச்சிக்கு அடிமைகளின் அயராத உழைப்பே காரணம்.எகிப்தில் அடிமைகளை வைத்திருப்பதும் பரிசளிப்பதும் சமூக அஸ்தஸ்து. ஏதென்ஸ் நகரின் மக்கள் தொகை நாற்பதாயிரம் பேர் என்றால் அவர்களிடம் இருந்த அடிமைகளின் எண்ணிக்கை எண்பதாயிரம். அடிமைகள் தங்களுக்கு விருப்பப்பட்ட பெயரை வைத்துக்கொள்வது கூட குற்றம். எஜமானர் தான் பெயர் வைப்பார்.
இந்தியாவில் எப்படி :
ரோம், கிரேக்க நாடுகளைப் போலத் தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி காலங்களில் அடிமைகளாக வாழ்ந்தவர்கள் நிறுவனரீதியாக பணிபுரியவில்லை. விவசாயம் சார்ந்த பணிகளையே பார்த்தனர். சோழர்களின் ஆட்சி காலத்தில் நிலவுடைமை வளர்ச்சியடைந்து அடிமைகளின் உழைப்பு அதிக அளவு உறிஞ்சப்பட்டது.சோழ மன்னர்களும், சோழநாட்டிலிருந்த வசதியானவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. அடிமையாவோர் அடிமையாளருக்கு எழுதிக் கொடுக்கும் இந்த ஓலைக்கு ஆளோலை என்று பெயர். அரசாங்கம் ஒருவருடைய நிலங்களைப் பறிமுதல் செய்யும் போது அவனுடைய பணியாட்களையும் பறிமுதல் செய்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. கோயில் பணி செய்வதற்காகவே சில பெண்கள் அவர்களுடைய குடும்பத்துடன் விற்கப்பட்டனர்.
அடிமைகள் ஆசான்கள் :
உலகம் முழுவதும் அடிமைகள் ஆசான்களாகவும் இருந்தது உண்டு. இந்திய வரலாற்றின் போக்கை இரண்டு அடிமைகள் மாற்றி அமைத்து இருக்கின்றனர். அவர்கள்... அடிமை வம்சத்தை ஆட்சி புரிய செய்த சுல்தான் குத்புதீன் ஐபக், தமிழகம் வரை பெரும் படை எடுத்து வந்த மாலிக்கபூர். இருவருமே அடிமைகள்தான். தங்களது எஜமானனின் விருப்பத்துக்கு உரியவராகி, பின் அதிகாரத்தினுள் நுழைந்து சந்தர்ப்பங்களை தங்களுக்கு ஏற்ப மாற்றி அதிகாரத்தின் உச்சத்துக்கு வந்தவர்கள். அதுபோல விலை மதிப்பற்ற கோகினுார் வைரம் தன் கைக்கு வந்ததும் இந்தியாவிலிருந்து பல ஆயிரம் அடிமைகளைக் கூட்டிக்கொண்டு ஈரானுக்குக் சென்றார் நாதிர் ஷா என்கிறது வரலாறு. ஒட்டகச்சிவிங்கியை பாதுகாக்க சீன மன்னன் ஆப்ரிக்காவில் இருந்து அடிமைகளை தருவித்த தகவலும் உண்டு. இப்படி அடிமைகளுக்கு வரலாற்றில் பல பங்களிப்புகள்.
அடிமை முறை ஒழிந்துவிட்டதா :
ஒரு காலத்தில் அதிதீவிரமாக இருந்த அடிமை முறை இன்று சட்டத்தால் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு தொழிலாளிக்கு முன் பணம் கொடுத்து வலுக்கட்டாயமாக வேலை வாங்குவது, அந்த தொழிலாளிக்கு குறைந்தபட்ச கூலி கொடுக்காமல் இருப்பது, விரும்பிய பணிக்கும், விரும்பிய இடத்துக்கும் செல்லவிடாதபடி அவரைத் தடுப்பது என்ற அடையாளங்களைப் பெற்று அடிமை முறையானது கொத்தடிமை முறையாகியிருக்கிறது. இப்படி ஏதோ ஒரு முகமூடி அணிந்து அடிமைத்தனம் தொடர்ந்து கொண்டு இருக்கிறதுஉலகம் முழுவதும் 3 கோடியே 58 லட்சம் மக்கள் நவீன அடிமைகளாக வாழ்கிறார்கள். நவீன அடிமைகளில் 61 சதவிகிதம் பேர் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளனர். "சுமார் 125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 1 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 700 மக்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள். இந்தியாவில் கட்டுமானம், விவசாயம், வீட்டு வேலை, ஜவுளி உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் மக்கள் நவீன அடிமைகளாக நடத்தப்படுகின்றனர்" என்கிறது ஒரு அறிக்கை.தமிழகத்தில் இருபத்தைந்தாயிரம் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாக 1996- ல் அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. "மீட்கப்படும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு உரிய மறுவாழ்வுத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துவதில்லை. அதனால் அவர்கள் மீண்டும் கொத்தடிமைத் தொழிலுக்கே போய்விடுகிறார்கள்" என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தொடரும் அடிமை முறை :
தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களிலுள்ள முறுக்கு, மிட்டாய்க் கம்பெனிகளுக்கு பெற்றோர் இசைவுடன் அனுப்பப்படும் சிறுவர்கள், அங்கு அடிமையாக நடத்தப்படுவதோடு சித்ரவதைக்கு உள்ளாகி அதில் உயிரிழந்த விபரீதத்தையும் நாம் அறிவோம். ஆனாலும் சிறுவர்களை அனுப்புவது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதுபோல செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள் போன்றவற்றில் அங்கேயே தங்கவைக்கப்பட்டு வேலை வாங்கப்படும் தொழிலாளர் குடும்பங்கள் இன்றும் இருக்கின்றன."சுமங்கலித்திட்டம்" என்ற பெயரில் சிறுமிகளை பஞ்சாலைகளில் தங்க வைத்து வேலை வாங்கும் அவலமும் அங்கு சிறுமிகள் படும் அவஸ்தைகளும் நவீன அடிமைத்தனத்திற்கான உதாரணம்.
தீர்வு என்ன :
நவீன அடிமைகள் கலாசாரம் பரவி வருவதால், உலகம் முழுவதும் அடிமை வாழ்க்கை வாழ்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நாட்டிற்கோ, சமூகத்துக்கோ, கலாசாரத்துக்கோ, தனிப்பட்ட நபருக்கோ உலகில் யாரும் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்கிறது .நா. அதே நேரத்தில் அடிமை, கொத்தடிமை முறை ஒழிப்பு என்பது அரசாலோ, தனி நபராலோ, தனி இயக்கங்களாலோ, ஊடகங்களாலோ சாத்தியமாகும் சாதாரணமான விஷயமல்ல. அனைவரும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய பணி. முதலில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சகமனிதனை மனித மாண்புடன் நடத்தும் மனநிலை ஒவ்வொருவருக்குள்ளும் மலரவேண்டும்."ரோமாபுரி அடிமை முறை ஒழிந்துவிட்டது; அமெரிக்கா அடிமை முறை ஒழிந்துவிட்டது; ரஷ்யா அடிமை முறை ஒழிந்துவிட்டது. நாமும் ஒழித்துவிட்டோம்; அடிமை முறை என்ற வார்த்தையை மட்டுமே. ஆனால் அடிமை முறை இன்னும் அப்படியே."- ஜார் மன்னரின் ரஷ்யாவைப் பற்றி எழுதும் போது லியோ டால்ஸ்டாய் சொன்னது இது. நாமும் நம்நாட்டில் அடிமைகள், கொத்தடிமைகள் இல்லை... எனச் சொல்லிக்கொள்ளலாம்; அவ்வளவு தான்!
- . திருமலை
எழுத்தாளர்
84281 15522
thirugeetha@gmail.com


2 comments:

  1. தினம் தினம் ஏமாற்றம், நிலைத்து போய்விடுமோ இந்த தடுமாற்றம் என முடக்கப்பட்டு கிடக்கும் தலித் நாங்கள்,,, ( ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகான இடைநிலை ஆசிரியர் ேதர்வு பட்டியலுக்காக ஏங்கும் தலித் ), எங்களின் நலனில் அக்கறை கொள்ள உருவான தனி துறைகள். தன்னிச்சையான அதிகார மையங்கள், தனி அமைச்சர், இதையெல்லாம் தவிர நாங்கள் சமுக நலனில் அக்கறை கொண்டவர்கள், தலித் மக்களின் முன்னேற்றமே எங்களின் குரல் என்றல்லாம் கூறும் தலைவர்கள் இவர்களுக்கெல்லாம் நாங்கள் முடக்கப்பட்டு கிடப்பது இவ்வளவு வெளிப்படையாக தெரிந்தும் எங்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்,,,,,,,,, நாங்கள் இவ்வாறு முடக்கப்படுவது ஏன்,,,,,, இது இன்னும் எத்தனை நாள்தான் நீடிக்கும்,,,,,,

    ReplyDelete
  2. தினம் தினம் ஏமாற்றம், நிலைத்து போய்விடுமோ இந்த தடுமாற்றம் என முடக்கப்பட்டு கிடக்கும் தலித் நாங்கள்,,, ( ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகான இடைநிலை ஆசிரியர் ேதர்வு பட்டியலுக்காக ஏங்கும் தலித் ), எங்களின் நலனில் அக்கறை கொள்ள உருவான தனி துறைகள். தன்னிச்சையான அதிகார மையங்கள், தனி அமைச்சர், இதையெல்லாம் தவிர நாங்கள் சமுக நலனில் அக்கறை கொண்டவர்கள், தலித் மக்களின் முன்னேற்றமே எங்களின் குரல் என்றல்லாம் கூறும் தலைவர்கள் இவர்களுக்கெல்லாம் நாங்கள் முடக்கப்பட்டு கிடப்பது இவ்வளவு வெளிப்படையாக தெரிந்தும் எங்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்,,,,,,,,, நாங்கள் இவ்வாறு முடக்கப்படுவது ஏன்,,,,,, இது இன்னும் எத்தனை நாள்தான் நீடிக்கும்,,,,,,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி