காலாண்டு தேர்வில் கடலூர் மாவட்டம் மாநிலத்தில் கடைசி: சிறப்பு பயிற்சி அளிக்க ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2014

காலாண்டு தேர்வில் கடலூர் மாவட்டம் மாநிலத்தில் கடைசி: சிறப்பு பயிற்சி அளிக்க ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு


பள்ளி கல்வித்துறை செயலரின் உத்தரவுபடி, அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சிசதவீதத்தை அதிகரிக்க கடலுாரில் நடத்தப்பட்ட சிறப்பு பயிற்சி வகுப்பை, ஆசிரியர்கள் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.அரசு பொதுத் தேர்வுகளில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கஅரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த செப்டம்பர் மாதம் நடந்த காலாண்டு தேர்வு முடிவை வைத்து மாநிலஅளவில் ஆய்வு செய்யப்பட்டது.

அதில், கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள்தேர்ச்சி சதவீதம் மிக குறைவாக இருப்பதும், கடலுார் மாவட்டம் பத்தாம்வகுப்பில் 43 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் 53 சதவீத தேர்ச்சியும் பெற்று, மாநிலத்தில் கடைசி இடத்தில் உள்ளது தெரிய வந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா, தேர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ள மாவட்டங்களில், 10ம் வகுப்பில் பாட வாரியாக 80 சதவீதத்திற்கு குறைவாகவும், பிளஸ் 2 வகுப்பில் 90 சதவீதத்திற்கு குறைவாகவும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க உத்தரவிட்டார்.முதற்கட்டமாக, பொதுத் தேர்வு தேர்ச்சி வீதத்தில் முதல் 5 இடங்களில் உள்ள, மாவட்டங்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களைக் கொண்டு, தேர்ச்சியில் பின் தங்கியுள்ள கடலுார் உள்ளிட்ட 6 மாவட்ட ஆசிரியர்களுக்கு, இரு தினங்களுக்கு முன் சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள், அந்தந்த மாவட்டங்களில் பாடவாரியாக 10ம் வகுப்பில் 80 சதவீதத்திற்கும், பிளஸ் 2வில் 90 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடலுார் மாவட்டத்தில் 10ம் வகுப்பிற்கு பாடம் எடுக்கும் 525 ஆசிரியர்களுக்கு கடலுார் செயின்ட் ஆன்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், பிளஸ் 2 ஆசிரியர்கள் 430 பேருக்கு கடலுார் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியிலும் சிறப்பு பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு திட்டமிட்டபடி காலை 9:30 மணிக்கு துவங்கியது. ஆனால், பிளஸ் 2 ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புக்கு வந்த தமிழ்நாடு மேல்நிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்கள், மழை காரணமாக பள்ளிகளுக்கு கலெக்டர் விடுமுறை அறிவித்துள்ள நிலையில், எப்படி பயிற்சி வகுப்பு நடத்தலாம் எனக்கூறி பயிற்சி வகுப்பை புறக்கணித்தனர்.தகவலறிந்த முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, விடுமுறை நாளில் எப்படி பயிற்சி வகுப்பு நடத்தலாம், 90 சதவீதம் தேர்ச்சி என்பதை எதனை அடிப்படையாக கொண்டது. 25 ஆண்டு பணி அனுபவம் கொண்ட எங்களுக்கு, பணிக்கு வந்து ஓரிரு ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் பயிற்சி கொடுப்பதை ஏற்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதற்கு, சி.இ.ஓ., 'இந்த பயிற்சி வகுப்பு, பள்ளிக் கல்வித் துறை செயலர் ஏற்பாடு செய்தது. பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் என்பது மாநில அளவிலானது.

பயிற்சி கொடுக்கும் ஆசிரியர்களை கல்வித்துறை செயலர் தேர்வு செய்துள்ளார். நமது மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதத்தைஅதிகரிக்க நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்' என்றார். அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.இந்நிலையில், பயிற்சி வகுப்பிற்கு வந்த, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்கள், நமது மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கதான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். அதனை ஏன் தடுக்கின்றீர்கள் என, தமிழ்நாடு மேல்நிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்களிடம் நியாயம் கேட்டனர்.இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் பதட்டம் நிலவியது.

இறுதியாக, பிரச்னை செய்த ஆசிரியர்கள் கழகத்தினர், பயிற்சி வகுப்பில்பங்கேற்க சம்மதித்தனர். அதையடுத்து, 2:00 மணி நேரம் தாமதமாக, பகல் 11:30 மணிக்கு, பயிற்சி வகுப்பு துவங்கியது. ஆசிரியர் சங்கங்களின் ஆதிக்கம் காரணமாக, கடலுார் மாவட்டத்தில் தொடர்ந்து தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது என பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு இருந்த நிலையில், இந்த சம்பவம், பெற்றோர்களின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் அமைந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி