ஆசிரியர் போட்டித்தேர்வு; வினாத்தாள் வந்தாச்சு : துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2015

ஆசிரியர் போட்டித்தேர்வு; வினாத்தாள் வந்தாச்சு : துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.


முதுகலை ஆசிரியர் பதவிக்கான போட்டித்தேர்வை, திருப்பூர் மாவட்டத்தில்,3,542 பேர் எழுதுகின்றனர். வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர்தேர்வு வாரியம் சார்பில், முதுகலை ஆசிரியர் பதவிக்கான போட்டித்தேர்வு, நாளைநடக்கிறது. மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் 76 பேர், பார்வை குறைபாடு உள்ளவர்கள் 19 பேர் உட்பட 3,542 பேர், இத்தேர்வை எழுத உள்ளனர். முதன்மை மற்றும் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாக, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 18 பேர், துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அறை கண்காணிப்பாளர்களாக 197 ஆசிரியர்கள், பார்வை குறைபாடு உள்ளவர்கள் தேர்வு எழுத 19 ஆசிரியர்கள், பறக்கும் படை உறுப்பினர்களாக 18 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் எழுத்துதேர்வு குறித்த ஆலோசனை கூட்டம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்றுநடந்தது; பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் பாலமுருகன் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். தேர்வு மையங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடு, பறக்கும் படை கண்காணிப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இத்தேர்வை எழுதுவதற்காக, தனியார் பள்ளிகளை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வு நடக்கும் நாளன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என்றும், சில பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்கு சிறப்பு வகுப்புநடத்தப்படலாம் என்றும், கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வை கண்காணிக்க, கலெக்டர் மற்றும் கல்வி அலுவலர்கள் தலைமையில், பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையத்துக்குள் மொபைல் போன், "டேப்', லேப்-டாப், "புளூ டூத்' மற்றும் கால்குலேட்டர் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடு புரிவோர், 3 ஆண்டுகளுக்கு, ஆசிரியர் தேர்வுவாரியம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும், என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. கலெக்டர் ஆய்வு தேர்வுக்கான வினாத்தாள் நேற்றுதிருப்பூர் வந்தது. அவை, கே.எஸ்.சி., அரசு பள்ளியில் ஒரு அறையில் வைத்து, சீலிடப்பட்டது; துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கலெக்டர் கோவிந்தராஜ் பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி