தமிழகத்தில் இந்தியை விரும்பி படிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2015

தமிழகத்தில் இந்தியை விரும்பி படிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு.


தமிழகத்தில், தமிழ், ஆங்கிலம் என, இருமொழி கல்விக் கொள்கை அமலில்இருந்தாலும், இந்தி மொழியை விரும்பி படிப்போரின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, ஒருலட்சம் பேர் என்ற விகிதத்தில் அதிகரித்து வருகிறது.
இந்த புள்ளி விவரம், சென்னை இந்தி பிரசார சபா, தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் மத்திய கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இருந்து பெறப்பட்டவை. தமிழகத்தில், இந்தி மொழியை கட்டாயமாக கல்வித் திட்டத்தில் திணிக்கக் கூடாது என, பெரும் கிளர்ச்சி எழுந்து, அதன்மூலம், திராவிட கட்சிகள் ஆட்சியையும் பிடித்தன. இந்தி பேசும் மாநிலங்கள் ஏற்காத வரை, அந்த மாநிலங்களில், இந்தி கட்டாயமாக்கப்படாது என, மறைந்த பிரதமர் நேரு அளித்த உறுதிமொழியை பின்பற்ற வேண்டும் என்பது, தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கை.

இந்தி பிரசார சபா

இந்நிலையில், தமிழகத்தில், தன்னார்வமாக இந்தி படிப்போரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்தே வருகிறது. 1918ல் சென்னையில் துவங்கப்பட்ட, இந்தி பிரசார சபா, இந்தியில் தொடக்கக் கல்வி முதல், முனைவர் பட்டம் வரை நடத்தி வருகிறது. ஒன்பது கட்டங்களாக உள்ள, தொடக்கக் கல்விக்கு, ஆண்டுக்கு இரு முறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இவர்களுக்காக, மாநிலம் முழுவதும், 20 ஆயிரம் இந்தி ஆசிரியர்கள் உள்ளனர்.கடந்த, 2009ல், இந்தியில் தொடக்கக் கல்வி தேர்வுகளை எழுதியோரின் எண்ணிக்கை 4.61 லட்சம் பேர். இது, 2013ல் 6.82 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த, ஐந்து ஆண்டுகளில், இந்தி தொடக்க கல்வி தேர்வை எழுதுவோரின் எண்ணிக்கை, சராசரியாக, ஆண்டுக்கு, 40 ஆயிரம் பேர் என அதிகரித்து வருகிறது.

பள்ளிகள்

தமிழகத்தில், 510 சி.பி.எஸ்.இ., பள்ளிகள், 39 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், ஒரு லட்சம் மாணவர் படிக்கின்றனர். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, இரு மொழி; ஆறில் இருந்து எட்டாம் வகுப்பு வரை மும்மொழி; ஒன்பதில் இருந்து, 12ம் வகுப்பு வரை இரு மொழி என்பது, இப்பள்ளிகளில் கட்டாயம்.இங்கு படிக்கும், ஒரு லட்சம் மாணவர்களில், 60 சதவீதம் பேர், இந்தி படிக்கின்றனர். இந்தி பிரசார சபா மற்றும் பள்ளிகளில், இந்தி படிப்போரை சேர்த்து கணக்கிடுகையில், தமிழகத்தில், இந்தி படிப்போரின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் என அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து, சென்னை, சமஸ்கிருத கல்லூரி முதல்வர், தேவி பிரசாத் கூறியதாவது: தமிழகத்தில், இந்தி படிப்பவர்கள் குறித்த புள்ளி விவரங்கள், மக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. தமிழ், ஆங்கிலம் என்ற, இருமொழியோடு,மூன்றாவது ஒரு மொழியைக் கற்பது, வேலைவாய்ப்புக்கு கைகொடுக்கும்.தாய் மொழிதென் மாநிலங்களில், தமிழகத்தைத் தவிர, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், மும்மொழி கொள்கைதான் உள்ளது. வட மாநிலங்களிலும், மும்மொழி கொள்கை அமலில் இருக்கிறது. எனவே, தாய் மொழியான தமிழை கட்டாயம் கற்க வேண்டும். இதோடு, ஆங்கிலம் மற்றும் மற்றொரு மொழியைக் கற்பது, கூடுதல் பயனையே தரும். இவ்வாறு, அவர் கூறினார்.

இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தும் எழுத்தாளர் அருணன் கூறியதாவது:தமிழகத்தில், இந்தி மறுக்கப்படுகிறது என்ற வாதம் தவறு என்பதையே, விரும்பி இந்தி படிப்போரின் எண்ணிக்கை உறுதி செய்கிறது. வணிகம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்காக, விரும்பி இந்தி படிப்போர் உள்ளனர். அதற்கு, எந்த தடையும் இல்லை. வேற்று மொழியை திணிப்பதால்தான், பிரச்னையை கிளப்புகிறது.

7.5 கோடி பேர்

இந்தி படிக்க, தமிழகத்தில், இந்தி பிரசார சபா உள்ளது. அதேபோல், தமிழ் பிரசார சபா, வட மாநிலங்களில் இல்லை. தமிழ் மொழி பேசக் கூடியவர்கள் 7.5 கோடி பேர். இதற்கான, அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. இந்தியை திணிக்கக் கூடாது என்பது தான் பொதுவான கோரிக்கை. வட மாநிலங்களில், நடைமுறையில், இரு மொழி கொள்கைதான் அமலில் உள்ளது. மும்மொழி என்றபோது, ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழியை, மத்திய அரசு முன் வைக்கிறது.இந்திய மொழி குடும்பத்தில் ஒன்றான, தமிழ், தெலுங்கு, வங்க மொழியை, மூன்றாவது மொழியாக ஏன் முன்னிறுத்தவில்லை. மூன்றாவது மொழியாக ஜெர்மன் தேவையில்லை என்கிறபோது, சமஸ்கிருதத்தைத்தான் முன் வைக்கின்றனர். இந்நிலையில், இந்தியை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்பதன் நோக்கம், அம்மொழியை பள்ளிகளில் கட்டாயமாக்கும் திட்டமாகும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி