காந்தி பெயரிலான பீருக்கு பதிலடி: தமிழகத்தில் தயாராகும் ஜார்ஜ் செருப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2015

காந்தி பெயரிலான பீருக்கு பதிலடி: தமிழகத்தில் தயாராகும் ஜார்ஜ் செருப்பு!

அமெரிக்க நிறுவனம் காந்தி பெயரில் பீர் விநியோகம் செய்ததற்கு பதிலடியாக, ஜார்ஜ் வாஷிங்டன் பெயரில், அவர் படத்துடன் கூடிய செருப்பு கோவையில் தயாராகி வருகிறது.


அமெரிக்காவை சேர்ந்த நியூ இங்கிலாந்து ப்ரூவிங் கம்பெனி என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் காந்தி பாட் என்ற புதிய வகை பீர் டின் ஒன்றை அறிமுகம் செய்தது. அந்த பீர் டின்களில் நமது தேசப்பிதா மகாத்மா காந்தியின் புகைப்படத்தையும் வெளியிட்டது. அமெரிக்க நிறுவனத்தின் இச்செயலுக்கு கடும் கண்டனம் கிளம்பியது. டின் பீர் விளம்பரத்தில் உள்ள காந்தி படத்தை அகற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன. ஆனால் இதற்கு அந்த நிறுவனம் மன்னிப்பு கோரிய போதும், அந்த பீர் பாட்டிலில் காந்தி படத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இணைய தளங்களில் இன்னும் காந்தி படத்துடன் கூடிய பீர் பாட்டில்களின் படங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், இதற்கு பதிலடியாக அமெரிக்கா நாட்டின் தந்தை என அழைக்கப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் படத்துடன் கூடிய செருப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.ராமசுப்பிரமணியம். இது தொடர்பாக அவரிடம் பேசினோம்.

"நம் நாட்டின் தந்தை காந்தியடிகளை அவமானப்படுத்தும் வகையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று காந்தி படத்துடன் கூடிய பீர் பாட்டிலை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, யாரையும் புண்படுத்த இப்படி செய்யவில்லை என அந்த நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அதன் பின்னரும் காந்தியடிகளின் படத்தை பீர் பாட்டிலில் இருந்து அகற்றவில்லை. இது சம்பந்தமாக ஹைதராபாத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் வெளிநாட்டைச் சேர்ந்தவரை இந்தியா கொண்டு வர நிறைய சட்ட நடைமுறைகள் உள்ளது. அது அவ்வளவு சீக்கிரம் நடக்காது.

அதனால் இதனை எப்படி எதிர்கொள்வதுனு யோசிச்சேன். அப்போ தான் இந்த ஐடியா வந்துச்சு. நம் நாட்டுல காந்தி மாதிரி, அவங்க நாட்டுல ஜார்ஜ் வாஷிங்டன் மதிக்க கூடிய நபர். முதல் ஜனாதிபதியும் அவர் தான். காந்தி பெயர்ல, அவர் படத்தை போட்டு பீர் டின் கொண்டு வந்ததுக்கு பதிலடியா, ஜார்ஜ் வாஷிங்டன் பெயரில் செருப்பு தயாரிச்சா என்னான்னு தோணுச்சு.

இது சம்பந்தமா 5, 6 கம்பெனியை அணுகினேன். ஆனா யாரும் முன் வரலை. ஒரு நிறுவனம் மட்டும் எங்க பேரை வெளியில சொல்லலைனா, தயாரிச்சு தர்றதா சொன்னாங்க. அதுக்கு சரினு சொன்னததால, அந்த நிறுவனத்துல இப்போ செருப்பு தயாராகிக்கிட்டு இருக்கு. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தயாராகி விடும். அமெரிக்க அதிபர், துணை அதிபர், ஸ்பீக்கர்கள், 50 மாகாண கவர்னர், இந்திய வம்சாவழி எம்.பி.க்கள் உள்ளிட்டோருக்கு இந்த செருப்புகள் இந்த வார கடைசியில அனுப்பி வைப்போம்.

இதுமட்டுமில்லாமல் இந்த செருப்பை பெரிய வடிவத்தில் தயாரிச்சு, ஒபாமா இந்தியா வர்ற 26ஆம் தேதி டெல்லியில் இருக்குற அமெரிக்க தூதரகத்தின் முன்னாடி வைக்கவும் ஏற்பாடு செஞ்சிருக்கேன்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி