213 மாநகராட்சி பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் 4 மாதத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் : ஐகோர்ட்டு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2015

213 மாநகராட்சி பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் 4 மாதத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் : ஐகோர்ட்டு உத்தரவு


அடிப்படை வசதிகள் இல்லாத 213 மாநகராட்சி பள்ளிகளில் 4 மாதத்துக்குள்அனைத்து வசதிகளையும் செய்து முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு,ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில், புரட்சிக்கர மாணவர்கள் இளைஞர் முன்னணியின் செயலாளர் வி.கார்த்திகேயன் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
படுகாயம்

தனியார் பள்ளிகளில் பெரும் தொகையை கட்டணமாக கொடுத்து படிக்க முடியாத ஏழை மாணவர்கள், அரசு பள்ளிகளில்தான் சேர்ந்து படிக்கின்றனர். சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி தமிழக கல்வித்துறை செயலர் பிறப்பித்த அரசாணையின்படி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து வகையான அடிப்படை வசதிகளை செய்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், மணலி சடையன்குப்பத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியின் மேல்கூரைஇடிந்து விழுந்ததில், மாணவர்கள் ஆகாஷ், சூர்யகலா ஆகியோர் 2014-ம் ஆண்டு ஜனவரி 10-ந் தேதி படுகாயமடைந்துள்ளனர்.

குழு அமைப்பு

இந்த மாணவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பதை நிபுணர்கள் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். 2012-ம் ஆண்டு கல்வித்துறை செயலர் பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மாநகராட்சி பள்ளிகளை ஆய்வு செய்வதற்கு பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் டி.ராஜேந்திரன் தலைமையில், ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர்கள் ஜெயசந்திரன், நவமணி மற்றும் பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.

பள்ளிகள் ஆய்வு

இந்த குழு, சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளை ஆய்வு செய்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, ஐகோர்ட்டு நியமித்த ஆய்வு குழு தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:-சென்னையில் 284 மாநகராட்சி பள்ளிகளில், 3 பள்ளிகள் மூடப்பட்டு விட்டது. தற்போது செயல்பட்டு வரும் 281 பள்ளிகளை ஆய்வு செய்தோம்.

அடிப்படை வசதிகள்

தமிழக அரசின் அரசாணையின்படி, 281 பள்ளிகளில், 111 பள்ளிகளில் மட்டுமே குடிநீர் வசதிகள் உள்ளது. மீதமுள்ள 170 பள்ளிகளில், விரைவில் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளது. அதேபோல கை கழுவும் தண்ணீர் வசதிகள், 126 பள்ளிகளில் மட்டுமே உள்ளது. மீதமுள்ள 155 பள்ளிகள் விரைவில் இந்த வசதி செய்து கொடுக்கப்படவுள்ளது. கழிவறை வசதிகள் 269 பள்ளிகளில் உள்ளது. 12 பள்ளிகளின் இந்த வசதிகள் செய்து கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுநீர் கழிக்கும் வசதிகள் 134 பள்ளிகளில் உள்ளது. மீதமுள்ள 147 பள்ளிகளில் இந்த வசதி செய்து கொடுக்கப்படும். மின்சார பயன்படுத்தும் விதிமுறைகளை 271 பள்ளிகளில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.பள்ளிகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்று கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டுள்ள அனைத்து அடிப்படை வசதிகளும் வெறும் 68 பள்ளிகள் மட்டுமே பூர்த்தி செய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

4 மாதம் அவகாசம்

இதையடுத்து, மனுதாரர் தரப்பில் வக்கீல் வி.பொற்கொடி ஆஜராகி வாதிட்டார். இதன் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-இந்த ஆய்வு குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 281 பள்ளிகளில் வெறும்68 பள்ளிகள் மட்டுமே அனைத்து வசதிகளையும் பூர்த்தி செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி தரப்பு வக்கீலிடம் கேட்டபோது, அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வசதிகளையும் 6 மாதத்துக்குள் செய்து கொடுக்கப்படும் என்று கூறினார். ஆனால், அனைத்து வசதிகளையும் 4 மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும். இதன்மூலம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும்போது, அனைத்து வசதிகளும் மாணவர்களுக்கு கிடைக்கும்.

மாதம் ஒரு அறிக்கை

எனவே, இந்த கால அவகாசத்துக்குள் அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்துள்ளதா? என்பதை நாங்கள் கண்காணிக்க முடிவு செய்துள்ளோம். எனவே, எந்தெந்த பள்ளிகளில், என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதை மாதந்தோறும் அறிக்கையாக மாநகராட்சி நிர்வாகம் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வருகிற மார்ச் 12-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி