வங்கிகளின் வராக்கடன் ரூ.2.17 லட்சம் கோடியாக அதிகரிப்பு: 6 ஆண்டில் 500 மடங்கு உயர்ந்ததை விசாரிக்க கோரி வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2015

வங்கிகளின் வராக்கடன் ரூ.2.17 லட்சம் கோடியாக அதிகரிப்பு: 6 ஆண்டில் 500 மடங்கு உயர்ந்ததை விசாரிக்க கோரி வழக்கு

வராக்கடன், 2.17 லட்சம் கோடி ரூபாயாக உயரக் காரணமாக இருந்த பொதுத் துறை வங்கிகள் மற்றும் முக்கிய பரிவர்த்தனைகளை கோட்டை விட்ட ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் குறித்து, சி.பி.., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, முன்னாள் பத்திரிகையாளர் கேதன் திரோட்கர் தாக்கல் செய்த மனு விவரம்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கி அளித்த விவரப்படி, 2008 மார்ச்சில், 455 கோடி ரூபாயாக இருந்த, பொதுத் துறை வங்கிகளின் வராக்கடன், 2014 மார்ச்சில், 2.17 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆறு ஆண்டுகளில், வராக்கடன் இந்த அளவுக்கு உயர, பொதுத்துறை வங்கிகளும், ரிசர்வ் வங்கியும் விதிமுறைகளை மீறியதே காரணம். 1969ம் ஆண்டு, வங்கி ஒழுங்கு முறை சட்ட விதிமுறைகளின்படி, வங்கிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில், அவற்றின் கணக்கு தணிக்கை அறிக்கைகளை, ரிசர்வ் வங்கியிடம் வழங்க வேண்டும். இந்த விதிமுறைகளை, பொதுத்துறை வங்கிகள் சரிவர பின்பற்றவில்லை. அதுபோல், ரிசர்வ் வங்கியும், தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, பொதுத் துறை வங்கிகளின், பெருங்கடன் பரிவர்த்தனைகளை கண்காணிக்கத் தவறிவிட்டது. சந்தேகத்திற்குரிய வராக் கடன்களுக்கு ஒப்புதல் வழங்கியதில், வங்கி அதிகாரிகள் முறைகேடாகச் செயல்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் வங்கி அளித்த தகவல்படி, பெருந்தொகையிலான வராக் கடன்கள் பலவற்றுக்கு, 'ஒரே முறையில் தீர்வு' என்ற அடிப்படையில், மிகக் குறைவான ஒரு தொகையை வங்கி அதிகாரிகள் வசூலித்து, அக்கணக்குகளை மூடியுள்ளனர். இதையடுத்து, அந்த கணக்குகளின் கீழ் உள்ள வராக் கடன்கள் அனைத்தையும் திரும்ப வசூலித்து விட்டதாக, ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இது போன்ற முறைகேடுகளால் தான், வங்கிகளின் வராக்கடன் அதிகரித்துள்ளது. இது குறித்து, சி.பி.., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், உள்நோக்கத்துடன் சந்தேகத்திற்குரிய கடன்கள் வழங்கப்பட்டது தொடர்பான கிரிமினல் வழக்குகளின் விவரங்களையும், ஐகோர்ட்டில் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனு மீதான விசாரணை, வரும், 12ம் தேதி நடைபெற உள்ளது.

கடன் கூடினால் என்ன நேரும்?


* வங்கியில் கடன் வாங்கியவர், தொடர்ந்து, 90 நாட்கள் வரை தவணையை செலுத்தத் தவறினால், அக்கடன், வராக்கடன் பட்டியலில் சேர்க்கப்படும்.


* ரிசர்வ் வங்கி, 2008 - 12ம் ஆண்டு வரை, தலா, 15 கோடி ரூபாய் வீதம், 140க்கும் மேற்பட்ட வராக்கடன் மோசடிகள் குறித்து சி.பி.., கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.


* வராக் கடன்கள் அதிகரித்தால், வங்கியின் வருவாய் சரிவடைந்து, லாபம் குறையும்; இழப்பையும் சந்திக்கலாம். ஒரு கட்டத்தில், டிபாசிட்தாரர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க முடியாத நிலையும் உருவாகலாம்.


மத்திய அரசு நிதி உதவி:

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உட்பட, ஒன்பது பொதுத் துறை வங்கிகளுக்கு, பங்கு மூலதனமாக, முதல்கட்டமாக, 6,990 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்தடுத்து பல கட்டங்களில், மார்ச்சுக்குள், மொத்தம், 11,200 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.


சர்வதேச வங்கித் துறையில், 2018ம் ஆண்டிற்குள், 'பேசல் - 3' விதிமுறைப்படி, வங்கிகளின் மூலதன இருப்பு விகிதம். 7 - 9.5 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும். இதற்காக, வங்கிகளுக்கு, 2.40 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஒரு வழிமுறையாக, பொதுத் துறை வங்கிகளுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை, பங்கு மூலதனமாக மத்திய அரசு வழங்கி வருகிறது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி