திறனறிவு தேர்வில் ஆள்மாறாட்டம்: பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட3 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2015

திறனறிவு தேர்வில் ஆள்மாறாட்டம்: பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட3 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்


கற்றல் அடைவு திறனறிவு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒரே பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மாணவர்களுக்கான செயல்திட்டம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 1–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்புவரை படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு பல்வேறு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவ–மாணவிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது.அதைத்தொடர்ந்து, மாணவ–மாணவிகள் எந்த அளவு இந்த கல்வித்திட்டத்தில் மேம்பாடுஅடைந்திருக்கிறார்கள் என்பதை கண்டறிவதற்காக தேர்வுநடத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்படுவது வழக்கம். இத்தேர்வு கடந்த மாதம் சேலம்மாவட்டத்தில் ஒன்றியத்திற்கு 20 பள்ளிகளில், அதாவது ரேண்டம் அடிப்படையில் 1, 3, 5–வகுப்புகள் மற்றும் 8–ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. வினாத்தாள் மாநில அளவில் ஒரே மாதிரியாக தயாரிக்கப்பட்டு நடத்தப்பட்டது.

ஆள்மாறாட்டம் கண்டுபிடிப்பு

இந்த நிலையில், சேலம் அடுத்துள்ள சேலத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கான கற்றல் அடைவு திறன் தேர்வு நடத்தப்பட்டது. சேலத்தாம்பட்டி பள்ளியில் நடத்தப்பட்ட கற்றல் அடைவு திறன் அறிதல் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு நடந்திருப்பதாக சென்னையில் உள்ள மாநில அனைவருக்கும் கல்வி இயக்குனரகத்திற்கு புகார் சென்றது.அதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை இயக்குனர் உஷாவை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்குமாறு சென்னை தலைமையகம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமையிலானகுழுவினர் சேலத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரணைநடத்தினர். அப்போது, 5–ம் வகுப்புக்கான கற்றல் அடைவு திறன் அறிதல் தேர்வின்போது, 5–ம் வகுப்பு மாணவர்களுக்கு பதிலாக அந்த மாணவர்கள் பெயரில் 6–ம் வகுப்பு, 7–ம் வகுப்பு மாணவ–மாணவிகளை கொண்டு, அதாவது ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்தது உறுதி செய்யப்பட்டது. அதை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி ஒப்புதலோடு, அப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் சுரேஷ்பாபு, இடைநிலை ஆசிரியை உமாமகேஸ்வரி ஆகியோர் நடத்தியதும் கண்டறியப்பட்டது.

3 பேர் பணி இடைநீக்கம்

அதைத்தொடர்ந்து உதவி தொடக்க கல்வி அலுவலரும் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயக்குமாருக்கு, தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அலுவலர் உஷா பரிந்துரை செய்தார்.அதன்படி, தலைமை ஆசிரியர் ரவி, இடைநிலை ஆசிரியர்கள் சுரேஷ்பாபு, உமாமகேஸ்வரி ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயக்குமார் உத்தரவிட்டார். இவர்களில் ஆசிரியர் சுரேஷ்பாபு ஆசிரியர் சங்க நிர்வாகியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி