கல்லூரிகளில் அழகுப் போட்டி நடத்தத் தடை விதிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2015

கல்லூரிகளில் அழகுப் போட்டி நடத்தத் தடை விதிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளில் அழகன், அழகிப் போட்டி நடத்துவதற்குத் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்ப தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த லட்சுமி சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது மகள் அக்ஷயா சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.இ. படிக்கிறார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் மத்திய பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் சங்கம் சார்பில் "டெகோஃபெஸ்' கலாசார விழா நடைபெற இருப்பதாக பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் விளம்பரம் செய்யப்பட்டது. அதில், 400 கல்லூரிகளிலிருந்து 40 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டது.

எனது மகள் அந்த கலாசார விழாவின் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார். குறிப்பாக அழகன், அழகிப் போட்டிகள் நடத்தப்பட்டன. அந்தப் போட்டிக்கான முதல் விதியாக, கூட்டம் நிறைந்த அரங்கை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என இருந்தது.

இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் கேட்டபோது ஒழுக்கம், சுயமரியாதை, நன்னடத்தை இது போன்ற விஷயங்கள் ஏதும் பாதிக்கப்படாது என உறுதி அளித்தனர். இதில், வெற்றி பெறுபவர்களுக்கு புதிய இரு சக்கர வாகனம், செல்லிடப்பேசி, ரொக்கப் பரிசு ரூ. 10 ஆயிரம் ஆகியவை உள்பட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

எனது மகளும் அதில் பங்கேற்று வெற்றி பெற்றார். ஆனால், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கூறியவாறு பரிசுகள் ஏதும் வழங்கவில்லை. பங்கேற்றதற்கான சான்றிதழ் மட்டும் வழங்கினர். மேலும், அவர்கள் கூறிய எதையும் பின்பற்றவில்லை. இதனால், எனது மகள் மன உளைச்சலுக்கு ஆளானார்.

எனவே, எனது மகளை ஏமாற்றியதற்காகவும், அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும் ரூ.5 லட்சம் இழப்பையும், வெற்றிப் பரிசையும் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு: சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியின் முத்திரையுடன் வெளியாகியுள்ளது.

இது போன்ற நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. இது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. மனுதாரர் கூறிய நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்துள்ளது. அதனால், இந்த நிகழ்ச்சி நடந்தது குறித்து தெரியாது என பல்கலைக்கழக அதிகாரிகள் கூற முடியாது.

மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக வழங்கப்பட்ட சான்றிதழும் போலியானது என மனுதாரர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும் வரை மனுதாரருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க முடியாது.

இருந்தாலும், அரசு நிர்வகிக்கும் கல்லூரி நடத்திய கலாசார நிகழ்ச்சியில் சிறந்த ஆணழகன் அல்லது அழகி யார் எனத் தேர்ந்தெடுப்பது தேவையானதா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

கலாசார நிகழ்ச்சிகள் மாணவர்களின் திறமையை வெளிக் கொணர்வதாக இருக்க வேண்டும். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தடுப்பதற்கு இடைக்கால உத்தரவு வழங்க இந்த நீதிமன்றம் கருதுகிறது. மேலும், பல்கலைக்கழகங்கள் இது போன்ற நிகழ்ச்சிகளைக் கவனிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் எதாவது வழிமுறைகள் வழங்கியுள்ளதா, பல்கலைக்கழகத்தின் எந்த அதிகாரி இவற்றைக் கண்காணிக்கிறார், நிதி எவ்வாறு கையாளப்படுகிறது உள்பட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் விரும்புகிறது.

அதுவரை, இது போன்ற அழகன், அழகிப் போட்டிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் அல்லது இது போன்ற போட்டிகள் நடத்தக் கூடாது என அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கு தமிழக உயர் கல்வித் துறை செயலர், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆகியோர் உடனடியாகச் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

மேலும், வரும் பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி