கல்லூரி ஆசிரியர் போராட்டம் ஒத்திவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2015

கல்லூரி ஆசிரியர் போராட்டம் ஒத்திவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு


கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தை, கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் முற்றுகையிட முயன்று, 300 பேர் கைதாகினர்.கோரிக்கைகளில் ஒன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட தால், தொடர் முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தர ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலை, கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வந்தன. உயர்கல்வித் துறை, இதை கண்டு கொள்ளவில்லை. எனவே, பல்கலை ஆசிரியர் சங்கம், அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட நான்குசங்கங்கள் இணைந்து, கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவை அமைத்து உள்ளன. இக்குழு சார்பில், ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், தமிழ்மணி உள்ளிட்டோர் தலைமையில், கல்லூரி கல்வி இயக்ககத்தை, நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, 300க்கும் மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்களை, போலீசார் கைது செய்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

போராட்டம் குறித்து, அரசு கல்லூரி ஆசிரியர் சங்க தலைவர் தமிழ்மணி கூறியதாவது:

* கடந்த, 2001ல் வெளியான அரசாணை, 350ன் படி வழங்க வேண்டிய தர ஊதிய உயர்வும், பணி மேம்பாடும், 2006 முதல், 6,000 கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.
* 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய திட்டம் அமல்படுத்தப்படும்' என, அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது. இதுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
* அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 5,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை துவக்கி உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிலையில், நேற்று காலை, கூட்டு நடவடிக்கை குழு முக்கிய பிரதிநிதிகளை, உயர்கல்வி செயலர் அபூர்வா அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், 6,000 ஆசிரியர் களுக்கான தர ஊதிய கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதாகவும்,இதற்கான நிதித்துறை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால் போராட்டத்தை கைவிடும்படியும்,செயலர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தமிழ்மணி கூறும்போது, ''தர ஊதியம் தொடர்பான கோப்பு, துறைரீதியான ஒப்புதலுக்கு செல்வதால், ஏப்., மாதம் தரஊதிய உயர்வு வரும் என, உறுதி அளித்துள்ளனர். ''இதுகுறித்து, ஆலோசனை நடத்தினோம். தற்போதைக்கு, முற்றுகை போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி