ஆசிரியர் இல்லாத பள்ளியில் தேர்வுக்கு முன் சுறுசுறுப்பு: 2 ஆசிரியர்களை களத்தில் இறக்கிய கல்வித்துறை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2015

ஆசிரியர் இல்லாத பள்ளியில் தேர்வுக்கு முன் சுறுசுறுப்பு: 2 ஆசிரியர்களை களத்தில் இறக்கிய கல்வித்துறை!!


சென்னை அரசுப் பள்ளியில், பிளஸ் 2 பிரிவில், ஐந்து பாடங்களுக்கு, ஓர்ஆண்டாக ஆசிரியர் இல்லாத தகவல் அம்பலமானதை தொடர்ந்து, கல்வித்துறை விழிப்படைந்துள்ளது. பொதுத் தேர்வு துவங்குவதற்கு, இரண்டு நாட்களுக்கு முன், இரு பாடங்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, எழும்பூரில், வடக்கு மற்றும் தெற்கு கல்வி மாவட்ட அதிகாரி அலுவலக வளாகத்தில், அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பிரிவில், 200 மாணவர்கள், ஐந்து பிரிவுகளில் படித்து வருகின்றனர். பிளஸ் பொதுத் தேர்வு ஏற்கனவே துவங்கி விட்டது. இப்பள்ளி மாணவர்கள், ஆங்கிலம் பாடத்தின், இரண்டு வினா தாள்களிலும், வினாக்கள் எளிமையாக இருந்தும் சரியாக எழுதவில்லை. இதுகுறித்து, மாணவர்களிடம் விசாரித்த போது, 'எங்கள் பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு ஆங்கிலம், கணக்குப் பதிவியல், பொருளாதாரவியல், வணிகவியல் மற்றும் கணினிப் பிரிவுக்கு,ஓராண்டாக ஆசிரியர்களே இல்லை' என்றனர். ஆசிரியர் இல்லாமல், பாடமும் நடத்தாமல், என்ன பாடம் என்றே தெரியாமல், தேர்வு எழுதும் நிலைக்கு ஆளாகி உள்ளோம் என, அவர்கள் புலம்பினர். இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில், கடந்த, 10ம் தேதி செய்தி வெளியானது. உடனடியாக விழித்துக் கொண்ட கல்வித்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று கள ஆய்வு நடத்தினர். முக்கியப்பாடத் தேர்வுக்கு, இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், நேற்று, இரண்டு சிறப்பு ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். வணிகவியல் மற்றும் கணினி பிரிவுக்கு ஆசிரியர்கள் வெளியிலிருந்து வரவழைக்கப்பட்டு, நேற்று சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.

இன்றும் நடத்தப்பட உள்ளது. இந்த, இரண்டு நாட்களில், 400 பக்கங்களுக்கு மேல் உள்ள இரண்டு, 'வால்யூம்' புத்தகத்தின் பாடங்களை, ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு புரிய வைக்க ஆலோசித்துவருகின்றனர். முதற்கட்டமாக, சில முக்கிய வினாக்களை மட்டும் குறித்துக் கொடுத்து, அவற்றை மனப்பாடம் செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு, மனதளவில் மாணவர்களும் தயாராகி விட்டனர். ஆசிரியர்களை அரசு நியமிக்காததால், தங்களுக்கு மட்டும், 'பாஸ் மார்க்' போட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையும் இருப்பதாக சில மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, 'ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதை கல்வித்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து விட்டனர். தற்போது செய்தி வெளியான பின், சுறுசுறுப்பாகியுள்ளனர். இதனால், இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பலனும் இல்லை' என, வருத்தத்துடன் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி