65 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மாநகராட்சி வசம் ஒப்படைக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2015

65 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மாநகராட்சி வசம் ஒப்படைக்க உத்தரவு


கோவை மாநகராட்சி விரிவாக்கப்பகுதியில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 65 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, மாநகராட்சி வசம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், துவக்கப் பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வரையிலும் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழிக்கல்வி போதிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், ரேங்க் பெறுகின்றனர். மாநகராட்சி பள்ளியிலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெறுகின்றன.யோகா, கராத்தே பயிற்சிகளும், உயர்கல்விக்கான ஆலோசனைகளும், வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றனர். விளையாட்டு திறனை ஊக்குவிக்க விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பள்ளிகளில், இ - கல்வி முறை துவங்கப்பட்டு, கம்ப்யூட்டர் கல்வியும் போதிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாணவர், பெற்றோர், ஆசிரியர் ஆகியோருக்கான கவுன்சிலிங் துவங்கப்பட்டு, பல்வேறு பிரச்னைகளுக்கும், இடைநிற்றலுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது.தமிழகத்தில் முதல் முறையாக கோவை மாநகராட்சி பள்ளிகளில் நாட்குறிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர் மீதும் தனிக்கவனம் செலுத்துவதுடன், பெற்றோர்களும் குழந்தைகள் கல்வியில் கவனம் செலுத்தும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், மாநகராட்சி விரிவாக்கப் பகுதியில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள்பராமரிப்பின்றி பாழடைந்துள்ளன.

அதனால், விரிவாக்கப் பகுதிகளான குறிச்சி, குனியமுத்துார், வடவள்ளி, வீரகேரளம், சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி, துடியலுார், கவுண்டம்பாளையம், விளாங்குறிச்சி, காளப்பட்டி பகுதியில் உள்ள 65 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை, மாநகராட்சி வசம் ஒப்படைக்க, கடந்தாண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது.அரசு வழிகாட்டுதல்படி, பெரியநாயக்கன்பாளையம், சர்க்கார்சாமகுளம், பேரூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 65 பள்ளிகளின் இடம், கட்டடத்தை மாநகராட்சி வசம் ஒப்படைக்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வுகள் முடிந்ததும், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படும். ஜூன் மாதம் பள்ளிகள் துவங்குவதற்குள், ஒப்படைக்கப்பட்ட பள்ளிகளில் மோசமான நிலையிலுள்ள கட்டடங்கள் சீரமைக்கப்படும் என தெரிகிறது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்உள்ள பள்ளி இடங்கள், கட்டடங்கள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படும். அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், கல்வி பயிலும் மாணவர்களையும் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு அரசு உத்தரவிட வேண்டும். அதன்பின், மாவட்ட துவக்கக்கல்வி அலுவலர் கட்டுப்பாட்டிலுள்ள, ஆவணங்கள் மாநகராட்சிக்குமாற்றம் செய்யப்படும். தற்போதுள்ள மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அங்கும் விரிவுபடுத்தப்படும்" என்றனர்.

வருவாய் நோக்கம் வேண்டாம்!

மாநகராட்சி பள்ளி இடங்களில், வணிக வளாகங்கள் கட்டுவதும் தொடர் கதையாக உள்ளது. இதனால், பல பள்ளிகளில் மாணவர்கள் விளையாட இடவசதி கூட இல்லை. மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படும் ஒன்றிய பள்ளிகளில் நிறைய இடவசதி உள்ளது.அந்தப் பகுதிகளில் வருவாய் நோக்கத்தில், வணிக வளாகம் கட்டாமல் பராமரிக்க வேண்டும். அந்த பள்ளிகளில், சுற்றுச்சுவர், வகுப்பறை, விளையாட்டு மைதானம் போன்ற வசதிகளை ஏற்படுத்த திட்டமிட வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி