பென்ஷன், மருத்துவ வசதி... ஜெட்லி காட்டும் நம்பிக்கை (தினமலர் தலையங்கம்) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2015

பென்ஷன், மருத்துவ வசதி... ஜெட்லி காட்டும் நம்பிக்கை (தினமலர் தலையங்கம்)


அதிக எதிர்பார்ப்புகளுடன் இருந்த, 2015-16ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், பல்வேறு புதிய பாதைகளை காட்டுகிறது.கடந்த ஒன்பது மாதங்களில் வளர்ச்சி மற்றும் நிதிப் பற்றாக்குறை குறைந்த அம்சம், அன்னியச் செலாவணியில் ரூபாய் மதிப்பு சற்று உயர்வடைந்தது ஆகிவற்றை, மத்திய பட்ஜெட் பிரதிபலிக்கிறது.

உள்நாட்டில் கறுப்புப் பணம் தோன்றுவதை தடுக்க, பட்ஜெட்டில் காட்டப்படும், 10 ஆண்டுகால சிறை தண்டனை நல்ல அம்சம். வெளிநாடுகளில் உள்ள ஆஸ்திகளை மறைக்கும் வேலை இனி சிரமமே. இதற்கான சட்ட நடைமுறைகள் வர உள்ளன. லோக்பால் நிறைவேற நிர்வாக உதவிகள், மத்திய கண்காணிப்புக் குழு ஆணையப் பணிகளுக்கு அதிக நிதி, கறுப்புப் பண வழக்கை கண்காணிக்கும், எஸ்.ஐ.டி.,க்கு அதிக நிதி ஆகியவைவரவேற்கத்தக்கவை. அதிக அளவு மக்கள் கொண்ட நாட்டில், சமூக பாதுகாப்புக்கான பென்ஷன் திட்டம், முதல் தடவையாக தெளிவாக தரப்பட்டிருக்கிறது. 'ஜன் தன்' திட்டம், ஆதார் அடையாள எண், வங்கிக் கணக்கு ஆகிய மூன்றும் இணைக்கப்பட்டு, சமையல் எரிவாயு மானியம் தருவதில் அரசு முயற்சி பெற்ற வெற்றி, இனி பல விஷயங்களில் புதிய உருவில் நடைமுறையாகும். ஆண்டுக்கு, 12 ரூபாய் கட்டினால், விபத்து காப்பீடு, 2 லட்சம் ரூபாய்; தனிநபர் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு வரிச் சலுகை; வீட்டுக் கடனுக்கு, 2 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை என்ற முடிவுகள், நிச்சயம் மாத வருவாய்ப் பிரிவினருக்கு சாதகமானவை.

அத்துடன், இ.பி.எப்., அல்லது பென்ஷன் திட்டத்தில் அதிக முதலீடு செய்ய வசதி, போக்குவரத்திற்கு பயன்படுத்தும் வாகன செலவினம் மாதத்திற்கு, 1,600 வரை அனுமதி ஆகியவற்றை மாதாந்திர சம்பளம் பெறுவோர் வாழ்க்கைத் தரம் உயர வழியாகும்.பென்ஷன் திட்டமில்லாத சமுதாயம் என்பதை மாற்றுகிற இந்த பட்ஜெட், நெடுநோக்கம் கொண்டது. ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வரி கட்டும், 'சூப்பர் ரிச்' பிரிவினர், இனி, 12 சதவீத வரிகட்ட வேண்டும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு, 9,000 கோடி ரூபாய் கிடைக்கும். அதேபோல, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு, 'பான் எண்' அவசியம் என்பதும், பினாமி பரிவர்த்தனைகளுக்கு முடிவு காண சட்ட நடைமுறைகள், கம்பெனிகள் வரிவிதிப்பில் சில புதிய அணுகுமுறைகள் ஆகியவை, ஊழலைக் குறைக்கும்.

சிறு, குறு தொழில்களுக்கு உதவ, 'முத்ரா வங்கி' புதிய முயற்சியாகும்; அத்தொழில் நசிந்து வீணாவதை தடுக்க உதவும். செல்வ வரியை நீக்கிய அரசின் செயல் நல்ல முடிவு. கடந்த ஆண்டில் இதன் மூலம் அரசுக்கு, 1,000 கோடி தான் கிடைத்தது. இதை அரசு வசூலிக்கும் முன் பல்வேறு சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருந்தது. விவசாய வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில், 8.6 லட்சம் கோடி, தேசிய அளவில் விவசாயப் பொருள் சந்தை, ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடும் உண்டு. சேவை வரி இனி, 14 சதவீதமாகும். உணவு, உரங்கள், பெட்ரோலியப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான மானியங்கள், 10 சதவீதம் குறைகிறது. புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சார உற்பத்தி அதிகரிக்க வழியும் உள்ளது. தங்கம் இறக்குமதி குறைய அரசு காட்டும் வழிமுறைகள் புதிய அணுகுமுறையாகும்.

தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை மட்டும் அல்ல, மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் அதிக நிதி, அடிப்படை கட்டமைப்புகளுக்கு அதிக நிதி ஆகியவை, பொருளாதார நிலை வளர உதவும். பட்ஜெட்டில்காணப்படும் மொத்த வளர்ச்சி, 6 சதவீதத்திற்கு அதிகமாக காட்டப்பட்டாலும், பொருளாதார நிபுணர்கள் இதற்கான ஆதாரங்களை தேடி ஆராய வேண்டும் என்று கூறியுள்ளனர். பணவீக்க பாதிப்பு, பொருளாதார தேக்கம், வளர்ச்சி குறைவு என்ற வார்த்தைகள் இல்லாத பட்ஜெட்டாக அமைந்திருப்பதால், நம்பிக்கை துளிர் விடுகிறது!

3 comments:

  1. கார்பரேட் கம்பெனிகள் பயன் பெறுகின்ற பட்ஜெட்.ஏழைகளுக்கும் ,நடுத்தர மக்களுக்கும் ஏமாற்றம்தரும்பட்ஜெட்.என்பதே உண்மை.

    ReplyDelete
  2. நள்ளிரவு முதல் பெட்ரோல்.3.50 டீசல் 3.05தும் உயர்த்தப்பட்டுள்ளது.அருமையான பட்ஜெட்.!......!!!!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி