மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் என்ன ஆனது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2015

மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் என்ன ஆனது?


மாநகராட்சி பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம், கடந்தாண்டு துவங்கப்பட்டது. இந்தாண்டு, திட்டத்தை செயல்படுத்த தவறிய, கல்வி அலுவலர் மற்றும் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தும்போது, சோர்வு மற்றும் பசியை போக்கும் வகையில், மாலை நேர சிற்றுண்டி திட்டம், கடந்தாண்டு துவங்கப்பட்டது.

இதற்காக, பட்ஜெட்டில், ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்தாண்டு, ஜன., மாதம் இந்த திட்டம் துவங்கப்பட்டது.சிற்றுண்டியாக சோயா சுண்டல் - 100 கிராம், கருப்பு கொண்டை கடலை சுண்டல் -100 கிராம், பாசிப்பயறு சுண்டல் -85 கிராம் (இதில், ஏதாவது ஒன்று); ராகி புட்டு -100 கிராம், மக்காச்சோளப்புட்டு - 100 கிராம், அரிசி புட்டு -100 கிராம் (இதில், ஏதாவது ஒன்று); சுக்கு டீ - 100 மி.லி., வல்லாரை சூப் -150 மி.லி.,, தூதுவளை சூப் - 150 மி.லி., (இதில், ஏதாவது ஒன்று) வழங்கப்பட்டது.சிற்றுண்டி பொருட்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு பிரித்து,மாலை 4:00 மணிக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதற்காக, ஒரு மாணவனுக்கு ஒருநாளுக்கு 25 ரூபாய் செலவிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு, பெற்றோர், மாணவர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.இந்த ஆண்டும், சிற்றுண்டி திட்டம் துவங்கப்படும் என, மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, ஜன., 2ல், பள்ளிகள் திறக்கப்பட்டதும், பொதுத்தேர்வு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் துவங்கி விட்டன. ஒன்றரை மாதங்களான நிலையிலும், மாலை நேர சிற்றுண்டி வழங்கவில்லை. திட்டம் கைவிடப்பட்டதா அல்லது சிற்றுண்டி வழங்கப்படுமா என்ற விபரமும் அறிவிக்கப்படவில்லை.பொதுத்தேர்வு மாணவர்களுக்காக, மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்ட சிறப்பு வினா - வங்கி புத்தக திட்டமும் கைவிடப்பட்ட நிலையில், சிற்றுண்டியும் வழங்கவில்லை. மாநகராட்சி பள்ளி மாணவர்களை, தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்த வேண்டும் என்பதற்காக, சூப்பர் -30 என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பழைய திட்டங்கள் கேள்விக்குறியாகியுள்ளன.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகராட்சி கமிஷனர், துணைகமிஷனர் ஆகியோர் சமீபத்தில் தான் பொறுப்பேற்றனர். ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றி, கல்வித்துறை அதிகாரிகள், கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் பார்வைக்கு கொண்டு செல்லவில்லை. கடைசி நேரத்தில், சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த, மூன்று நிறுவனங்களிடம் மதிப்பீடு பெற்று, பைல் வைக்கப்பட்டது.ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டம் என்பதால், மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட்டு, டெண்டர் பெற்று, சிற்றுண்டி தயாரிக்கும் நிறுவனத்தை தேர்வு செய்திருக்க வேண்டும்.

இந்த நடைமுறைகளை எதையும் கடைபிடிக்காமல், லெட்டர் பேடில், மதிப்பீடு பெற்று கொடுத்ததால், கடைசி நேரத்தில் சிற்றுண்டி திட்டம் கைவிடப்பட்டது. டிசம்பர் மாதத்தில்தான் பைல் வைக்கப்பட்டது.அதன்பின், டெண்டர் நடைமுறையை கடைபிடித்தால், மாணவர்களுக்கு உரிய காலத்தில் சிற்றுண்டி வழங்க முடியாது. மாநகராட்சியின் சிறப்பு திட்டத்தை தொடர்ந்து கடைபிடித்து, திட்டத்தை செயல்படுத்த தவறிய, கல்வி அலுவலர் மற்றும் அதிகாரிகள்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி