சிட்டுக்கு... செல்லச் சிட்டுக்கு உங்கள் வீட்டில் ஓர் இடம் இருக்கா? இன்று உலக சிட்டு குருவி தினம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2015

சிட்டுக்கு... செல்லச் சிட்டுக்கு உங்கள் வீட்டில் ஓர் இடம் இருக்கா? இன்று உலக சிட்டு குருவி தினம்

இந்தியாவிலுள்ள, 1314 வகை பறவை இனங்களில், 34 பறவை இனங்கள் மட்டுமே, உலகம் முழுவதும் உள்ளன; இவற்றில், சிட்டுக்குருவியும் அடங்கும். அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க, அவற்றுக்கென ஒரு தினத்தை, சர்வதேச நாடுகள் அறிவித்துள்ளன.

பறவை இனங்களில், சிட்டுக்குருவி மட்டுமே தனிக்கூடு கட்டாமல், வீடுகளில் உள்ள துவாரங்களில் வாழுகின்றன. விவசாயம் செழித்து வளர்ந்த காலங்களில், கிராமப்புற வீடுகளில் தானியங்கள் சிதறி கிடக்கும். அவற்றை சிட்டுக்குருவிகள் உட்கொண்டன. இவை வயல்வெளிகளில் விவசாயிகளின் நண்பனாகவும் விளங்கின. மொபைல்போன் டவர் அலை வரிசை அதிர்வு காரணமாக, சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதை மறுக்கும் சிலர், 'ரேடியோ அலைவரிசை அதிர்வுகள், மிக அதிகமாக இருந்த போதிலும், குருவிகள் அதிகம் உயிர்வாழ்ந்தன' என்கின்றனர்.

'சிட்டுக்குருவி'களை பாதுகாக்க இயக்கம் நடத்தும் பாண்டியராஜன் கூறுகையில், ''சிட்டுக்குருவிக்கான வாழ்விடத்தை நாம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அவை வசிக்க செயற்கையாக நாம் பெட்டி வைக்கும்போது, வேறு பொருட்களை உள்ளே வைக்கக் கூடாது. செயற்கைக் கூடுகளை அவை ஏற்றுக்கொள்ளாது,'' என்றார்.

வன உயிரின இயற்கை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த சாதிக் கூறுகையில், ''சிட்டுக்குருவிக்கு வாழ்விடம் அளிப்பதில் சிக்கல் இருப்பினும், வீடுகளில் மா கோலம் இடுவதன் மூலமாக உணவு கொடுக்கலாம். விவசாயத்தில் மருந்துகளின் நச்சுத்தன்மையை கட்டுப்படுத்தினால், சிட்டுக்குருவிகள் பெருகும்,'' என்றார்.



வாழ்விட ஆராய்ச்சி:





உலக சிட்டுக் குருவிகள் தினமான இன்று, சிட்டுக் குருவிகளின் வாழ்விடங்கள் குறித்த ஆராய்ச்சியை துவக்க, ஊட்டி அரசு கலைக் கல்லூரி, வன விலங்கு உயிரியல் துறை திட்டமிட்டுள்ளது.

அந்த துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: கடந்த காலங்களில் வீடுகளில் ராகி, கோதுமை, சாமை போன்ற சிறு தானியங்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை வெயிலில் உலர்த்தி, காய வைப்பது வழக்கம். வீணாக சிந்தும் தானியங்களை உண்ண சிட்டுக் குருவிகள் வரும். ஓடுகளால் வேயப்பட்ட வீடு, கட்டட கூரைகளில் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. தற்போது சிறு தானிய உற்பத்தி, பயன்பாடு குறைந்து விட்டது. ஓட்டு வீடுகள், கான்கிரீட் வீடுகளாக மாறிவிட்டன; இதனால், சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்ட இடம் இல்லை. ஊட்டியில், 25 இடங்களிலுள்ள சிட்டுக் குருவிகளின் கூடுகளை கண்காணித்து வருகிறோம்; போதிய இட வசதி இல்லாமை, இனப்பெருக்கத்தின் போது நெருக்கடி போன்ற காரணங்களால், இதுவரை, ஒன்பது கூடுகள், கீழே விழுந்துள்ளன. எனவே, சிட்டுக்குருவிகளின் வாழ்விடங்கள் குறித்த, இரண்டு ஆண்டு கால ஆராய்ச்சியை, உலக சிட்டுக்குருவிகள் தினத்தில் துவக்க உள்ளோம். அதன்படி, கல்லூரி வளாகம், பள்ளி மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடம் என, மூன்று இடங்களை தேர்வு செய்து, 150 கூடுகளை வைத்து, கண்காணிக்க உள்ளோம். மண் பானை, மூங்கில் குழாய், அட்டைப் பெட்டி, 'பிளைவுட்' என, பல தரப்பட்ட பொருட்களில் கூண்டு தயாரித்துள்ளோம். இவ்வாறு, ராமகிருஷ்ணன் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி