மாநகராட்சி பள்ளிகள் ...வளர்ச்சிக்கு திட்டம் தேவை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2015

மாநகராட்சி பள்ளிகள் ...வளர்ச்சிக்கு திட்டம் தேவை

மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகள் தனியார் மயம் ஆகாது என, மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் ஓரளவு அதிகரித்திருக்கிறது. ஆனால், பிளஸ் 2 படிப்பிற்குப்பின் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் ஏற்பட்ட போட்டிகளை தவிர்க்க , பெற்றோர் பலரும் முன்கூட்டியே தங்கள் பணவசதிக்கு ஏற்ப, தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். இதனால் இப்பள்ளிகளில் சேர்க்கை, 20 சதவீதம் குறைந்திருக்கிறது.
மாணவர் எண்ணிக்கை குறைந்ததும், தனியாரிடம் மூன்றாண்டுகளுக்கு இப்பள்ளிகளை தரலாம் என்ற கருத்து உருவானது. ஆனால் அம்முயற்சி இப்போது கைவிடப்பட்டிருக்கிறது.

மிகவும் பின்தங்கிய, வசதியற்ற மாணவ, மாணவியருக்கு கல்விப் பயிற்சி தர தனியாரை ஊக்குவிப்பது தொடரும் என்று கூறப்பட்டிருக்கிறது.
சென்னை நகரில் உள்ள பல மெட்ரிக் பள்ளிகள் போதிய இடவசதியின்றி, ஆசிரியர்கள் நிரந்தரமில்லாத நிலை உள்ளது. வசதி படைத்த மெட்ரிக் நிர்வாகம் சி.பி.எஸ்.இ., படிப்புக்கு மாற்ற முயலுகின்றன. தவிரவும் சமச்சீர் கல்வி என்பது முன் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை தருகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படும் நகர்ப்புற பள்ளிகள் கட்டணம் அதிகமாக இருப்பதால், மாநகராட்சி பள்ளிகளுக்கு மாணவர் வருகை இருக்கிறது.

சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் இடவசதி உண்டு. ஆனால் ஒரு சில பள்ளிகள் தவிர மற்றவைகளில் இன்னமும் அடிப்படை
கட்டமைப்பு வசதி முழுமை பெறவில்லை.

சென்னை மட்டும் அல்ல, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களில் உள்ள இம்மாதிரி பள்ளிகளுக்கு புதிய அணுகுமுறை தேவை.

இதில் தனியாரை ஈடுபடுத்துவதற்கு ஒரு நடைமுறை தேவை.

கல்வி என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது. மத்திய அரசு நிதி தந்த போதும், தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்களில் மதிய உணவு மற்றும் மாணவர்களுக்கு சலுகை திட்டங்கள் உள்ளன. மேலும் அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற அமைப்பும் உள்ளது. இந்த அமைப்பு, 2009ம் ஆண்டு ஏற்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறப்பாக செயல்படுவதில்லை. 

அந்த சட்டப்படி மதிய உணவு சீராக இருக்கிறதா என்பதை இந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர், வாரத்திற்கு ஒரு நாள் நேரில் வந்து மதிய நேரத்தில் உணவை சுவைத்து முடிவு எடுக்க வேண்டும் என்கிறது. தமிழகத்தில் மதிய உணவு திட்டத்தின் குறைகள் குறைவு என்றாலும், கல்வி வழங்கும் முறை, பின்தங்கிய மாணவர்கள் கல்வியில் சிறக்க சிறப்பான திட்டம் குறித்த புதிய அணுகுமுறை தேவை. 

தனியார் துறையினர் நகர வளர்ச்சியில் ஈடுபட்டு, அதற்கென தங்கள் நிதியை செலவழிக்க ஊக்கம் காட்ட இது நல்லநேரம்.
தனியார் பள்ளிகளுடன் கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் போட்டியிட, மாநகராட்சி பள்ளிகள் முன்னுக்கு வர வேண்டும். அதற்கேற்ப திறமை வளர்க்கும் கல்வி பயிற்சிகள், ஆளுமைத்திறன் ஆகியவற்றிற்கான பயிற்சிகளை தர தனியார் துறை உதவியை நாடலாம். அம்முயற்சிகளுக்கு சில பள்ளிகளை முன்னுதாரணமாக தேர்வு செய்து அதை அமல்படுத்தலாம். பெரிய அளவில் உதவ முன்வரும் நிறுவனங்களுக்கு, ஆண்டு ஆரம்பத்தில், குறிப்பிட்ட மாணவர்களை சேர்க்க, ஒளிவு மறைவற்ற 'கோட்டா வசதி' தரலாம். 

அவற்றில் ஏற்படும் குறைகளை களையவும், இப்பள்ளிகளில் கல்வித் தரம் சிறக்க, அரசியலற்ற கல்வியாளர் குழுக்களை அமைத்து அவர்கள் தரும் முடிவுகளை இயன்ற அளவு பின்பற்றலாம். இம்முயற்சிகள் அனைத்தையும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்தால், இப்பள்ளிகள் தரம் தானாகவே உயரும். வரும் கல்வி ஆண்டுக்கு முன்னதாகவே இதுகுறித்த பரிசீலனை தேவை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி