இட பற்றாக்குறையால் திணறும் தனியார் பள்ளிகள்: அங்கீகாரத்தை ரத்து செய்து இழுத்து மூட திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2015

இட பற்றாக்குறையால் திணறும் தனியார் பள்ளிகள்: அங்கீகாரத்தை ரத்து செய்து இழுத்து மூட திட்டம்


பள்ளிக்கல்வி விதிகளின்படி, இடமின்றி திணறும் தனியார் பள்ளி களின் பட்டியலை, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தயாரித்துள்ளது. இப்பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.தமிழகத்தில், 12 ஆயிரம் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.

இவற்றில்,4,000 பள்ளிகளில், உரிய இட வசதி இல்லாமல், மாணவர்கள் மூச்சுத் திணறும் வகையில், சிறிய வகுப்புகளில் அடைத்து வைக்கப்படுகின்றனர். கடந்த, 2004ல் கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்தில், 94 மாணவ, மாணவியர் உயிரிழந்தனர். பின், தனியார் பள்ளிகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை வகுக்க, மதுரை காமராஜர் பல்கலை மற்றும் அண்ணாமலைப் பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் சிட்டிபாபு கமிட்டிக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. இக்கமிட்டியின் அறிக்கை படி, தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு தனியார் பள்ளியும் குறிப்பிட்ட உள்கட்டமைப்புகளை கொண்டிருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
* மாநகரம் என்றால், 6 கிரவுண்ட்; மாவட்டத் தலைநகரங்களில், 8 கிரவுண்ட்; நகராட்சிகளில், 10 கிரவுண்ட்; பேரூராட்சிகளில், 1 ஏக்கர்; கிராமங்களில், 3 ஏக்கர் நிலப்பரப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
* வகுப்பறைகளில், ஒவ்வொரு மாணவருக்கும் குறைந்தபட்சம், 10 சதுர அடி இருக்கவேண்டும்.
* மேஜை, நாற்காலி மற்றும் எழுதும் மேஜை இருக்க வேண்டும்.
* குறைந்தபட்சம் பயனுள்ள, 1,500 புத்தகங்கள் கொண்ட நூலகம், விளையாட்டு மைதானம், தண்ணீருடன் கூடிய கழிப்பறை வசதி இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள, 12 ஆயிரம் பள்ளி களில், 4,000 பள்ளிகளுக்கு மேல், இடப் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்கு உரிய அங்கீகாரம் வழங்க முடியாத நிலை உள்ளது. ஆனாலும், மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளை இழுத்து மூடாமல் செயல்பட, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், புற்றீசல் போல தனியார் பள்ளிகள் அதிகரிப்பதால், அவற்றை முறைப்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக இடப் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு வசதி இல்லாத பள்ளிகளின் பட்டியலை, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தயாரித்து உள்ளது.

இதுகுறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரக அதிகாரிகள் கூறும் போது, 'இந்தப் பட்டியலில் உள்ள பள்ளிகளில், அதிகாரிகள், கோடை விடுமுறையில் நேரடி ஆய்வு நடத்தி, அறிக்கை தர உள்ளனர். 'பின், விதிகளை மீறி, உரிய இட வசதி, உள்கட்டமைப்பு இல்லாத பள்ளிகளின் உரிமம் மற்றும் தற்காலிக அங்கீகாரத்தை ரத்து செய்து, இழுத்து மூட முடிவெடுக்கப்பட்டு உள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி