'ஓ.பி.எஸ்., நண்பேண்டா' என்ற டி.இ.ஓ., 'டம்மி' பதவிக்கு தூக்கி வீசப்பட்டார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2015

'ஓ.பி.எஸ்., நண்பேண்டா' என்ற டி.இ.ஓ., 'டம்மி' பதவிக்கு தூக்கி வீசப்பட்டார்


கோபிசெட்டிபாளையம்: 'முதல்வர், ஓ.பி.எஸ்., நண்பர்' என கூறிக்கொண்டு, அதிகார தோரணையுடன் வலம் வந்து, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, கோபி கல்வி மாவட்ட அலுவலர், சிவாஜியை, 'டம்மி' பதவிக்கு தூக்கி அடித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.

கடந்த 2013, ஜூலை 25ல், கோபி கல்வி மாவட்ட அலுவலராக சிவாஜி பொறுப்பேற்றார். இவர் வந்ததில் இருந்து, ஆசிரியர் பணி நிரவல், கவுன்சிலிங் என, எதுவுமே முறையாக நடக்கவில்லை.

தொடர் புகார்கள்:

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நடக்கும், இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாக்களை புறக்கணித்து, தனியார் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி ஆளுங்கட்சியினர், கல்வித் துறைக்கு புகார் அனுப்பினர். மேலும், 'தமிழக முதல்வர், ஓ.பன்னீர்செல்வமும், நானும், ஒரே ஊர்க்காரங்க; முதல்வர், என் நண்பர்' என கூறிக்கொண்டு, அதிகார தோரணையுடன் வலம் வந்தார். இதனால் அனைவரும், சிவாஜி பேச்சுக்கு கட்டுண்டு இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்; உயரதிகாரிகளும், நடவடிக்கை எடுக்க தயங்கினர். இது சம்பந்தமாக, பல அமைப்பினர் ஒருங்கிணைந்து, டி.இ.ஓ., சிவாஜியை கண்டித்து, கடந்த டிச., 4ம் தேதி, கோபியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து, வருவாய் கோட்ட அதிகாரிகள் மற்றும் உளவுப்பிரிவு போலீசார், அரசுக்கு அறிக்கை அனுப்பினர். சமீபத்தில், இளநிலை உதவியாளர் பணிக்கு பணம் கேட்டதாக, இயக்குனரகத்துக்கு, பாதிக்கப்பட்டவர்கள் புகார் அனுப்பினர். பள்ளிகளில் ஆய்வு செய்து, அறிக்கை அனுப்புவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அதிரடி மாற்றம்:

இப்படி, வரிசைகட்டி பல குற்றச்சாட்டுகள் எழுந்ததால், சிவாஜியை, 'டம்மி'யான, ஈரோடு மாவட்ட வயது வந்தோர் கல்வி அலுவலராக இடமாற்றம் செய்து, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார். வயது வந்தோர் கல்வி அலுவலர் பதவியை, கூடுதலாக கவனித்து வந்த கலைச்செல்வன், சின்னசேமூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியை, மீண்டும் தொடர்வார் என, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது. கோபி அருகே பி.கரட்டுப்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம், கோபி டி.இ.ஓ., (பொறுப்பு)வாக நியமித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். இதுபற்றி, ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அய்யண்ணன் கூறுகையில், "ஆமாம்; அப்படித்தான் கூறுகின்றனர். அதற்கான ஆர்டர் இன்னும், என் கைக்கு வரவில்லை,” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி