பிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2015

பிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

பிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

பிளஸ் 2 பொருளாதார பாட விடைத்தாள் திருத்துவதற்குத் தடைவிதிக்கக் கோரி தமிழ்நாடு முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் எம்.சந்திரன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், பிளஸ் 2 பொருளாதார பாடத்தேர்வு கடந்த மார்ச் 27 ஆம் தேதி நடைபெற்றது. இதில் "ஏ' பிரிவில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் 18, 20 ஆம் கேள்விகள் தவறானதாகவும் விடையளிக்க முடியாததாகவும் உள்ளன. மேலும் "டி' பிரிவில் 78 ஆவது கேள்வி கடினமானதாக உள்ளது. 20 மதிப்பெண்கள் அளிக்கக்கூடிய இந்தக் கேள்வி, தலா 10 மதிப்பெண் அளிக்கக்கூடிய இரு கேள்விகளை ஒருங்கிணைத்து கேட்கப்பட்டுள்ளது. பாடப் புத்தகத்தில் உள்ள 10 பக்கங்களில் இருந்து விடையளிக்கக் கூடியதாக இந்தக் கேள்வி உள்ளது. குறிப்பிட்ட கேள்விக்கான விடை பொருளாதார பாடத்தில் தேவை, விநியோகம் என்ற பாடத்தில் உள்ளது. புத்தகக் குழு பரிந்துரைப்படி இந்தப் பாடத்தில் இருந்து புத்திக் கூர்மையை பரிசோதிக்கும் கேள்வி கேட்கப்பட வேண்டும். ஆனால் பயன்பாடு அடிப்படையில் கேள்வி இடம் பெற்றுள்ளது. இது தவறாகும். கடந்த 10 ஆண்டுகளாக இது போன்ற கடினமான கேள்வி கேட்கப்படவில்லை. எனவே வடிவமைப்பு விதிகளுக்கு மாறாக கேள்வி கேட்கப்பட்டு உள்ளதால் 18, 20, 78 ஆவது கேள்விகளுக்கு விடையளித்து இருந்தால் அவர்களுக்கு அதற்குரிய முழு மதிப்பெண்களை வழங்க உத்தரவிட வேண்டும். விடைகளில் தகுந்த மாற்றம் செய்யும் வரையில் விடைத்தாளை திருத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இம்மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஏ' பிரிவில் 18, 20 ஆவது கேள்விகளுக்கு விடையளித்துள்ள அனைவருக்கும் கருணை மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி