சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி – பிவிஎஸ்என் மூர்த்தி மையம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2015

சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி – பிவிஎஸ்என் மூர்த்தி மையம்


சென்னை, மேற்கு மாம்பலம் பொது சுகாதார மையத்தைச் (பப்ளிக் ஹெல்த்சென்டர்) சார்ந்த பிவிஎஸ்என் மூர்த்தி (BVSN MURTHY) மையம் – மூளை மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் (SCHOOL FOR SPECIAL CHILDREN), சமீபத்தில் தனது 33-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.
‘சிறப்புக் குழந்தைகள்’ (வயது எவ்வளவு ஆனாலும் அவர்கள் என்றும் குழந்தைகளே!) என்று சொல்வதற்கு ஏற்ப, அவர்களைச் சிறப்பாக கவனித்துவரும் பிவிஎஸ்என் மையம், கடந்த 33 வருடங்களாக ஆற்றிவரும் பணி மிகவும் மகத்தானது.ஒவ்வொரு குழந்தையின் குறை, நிறைகளை (மூளை, மனம், உடல்ரீதியான குறைபாடுகள்) தேவையான மருத்துவ உதவியுடன் கண்டறிந்து, அதற்கான வாழ்க்கை முறைகளைக் கற்பிப்பதுடன், அவர்களின் அறிவுத் திறனுக்கேற்ப கல்வி மற்றும் கைத்தொழில் வாய்ப்புகளையும் பயிற்றுவிக்கும் ஓர் உன்னதமான சிறப்பு மையமாக அது செயல்பட்டு வருகிறது.இங்கு பணி புரியும் ஆசிரியைகள், இதற்கென தனியாக சிறப்புப் படிப்பும், பயிற்சியும் பெற்றவர்கள். குழந்தைகளின் மூளை வளர்ச்சி, மன வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் பிரித்து, அவர்களுக்குக் கல்வியும் கைத்தொழிலும் பயிற்றுவிக்கும் இவர்களின் பொறுமையும் விடாமுயற்சியும் மிகவும் போற்றுதலுக்குரியவை.

நம் பிறப்பு நம் கையில் இல்லை. அறிவியல் ஆயிரம் காரணங்கள் காட்டினாலும், இக்குழந்தைகள் செய்த பாவம் என்ன? பெற்றோர் எப்போதும் கேட்பது, ‘எங்களுக்குஏன் இப்படிப்பட்ட குழந்தை?’ மனத்தை இறுக்கும் இக் கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும்?‘இந்தக் குழந்தைகளுக்கு அதிக அன்பும், அளப்பரிய பாசமும், கருணையும், கவனிப்பும் தேவை. அவற்றை, உங்களைப் போன்ற, கனிவும், பொறுமையும், தியாக உணர்வும் நிறைந்தவர்களால்தான் கொடுக்க முடியும் என்று தேர்வு செய்திருக்கின்றான் இறைவன்’ என்பேன், ஓர் ஆறுதலுக்காக!ஆனால் அவர்கள் பார்வையில், ‘இறைவன் உண்மையிலேயே இருக்கிறானா?’ எனும் வினா தொக்கி நிற்பதை நான் காண்பேன். அதற்கும் என்னிடம் பதில் இல்லை!குழந்தை பிறக்கும் முன், பிரசவத்தின்போது அல்லது பிறந்த பிறகு, ஏதோ ஒரு விபத்து. தொப்புள்கொடி கழுத்தைச் சுற்றி இறுக்குதல், நுரையீரல்களில் நீர் சேர்தல், மூளைக்குப் போதிய ஆக்ஸிஜன் இல்லாமை, மரபணு சார்ந்த வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் (GENETIC METABOLIC DEFECTS)… இப்படி ஏதோ ஒன்று. அத்தகைய பிரச்னைகளால்தான் இப்படிப்பட்ட குழந்தைகள் உருவாகின்றனர்.

அவசரத்தில் முன்னதாகவே பிறந்த குழந்தை, பிறந்தவுடன் அழ மறந்த குழந்தை, நீலம் பாய்ந்த (CYANOTIC) குழந்தை, சிறிய தலையுடன் பிறந்த குழந்தை - இப்படிப் பல காரணங்கள்… பிறந்தது முதல் பெற்றோருக்குப் பாரமாய், கண்ணீராய், கவலையாய்…. ஏங்கும் பெற்றோருக்கு, ஏதோ ஒரு வகையில் உதவுகின்றன இத்தகைய பள்ளிகள்.அறிவியல் வளர்ச்சி, கருப்பையில் சிசு இருக்கும்போதே ஓரளவுக்கு இக்குறைபாடுகளைக் கண்டுபிடிக்க உதவுகிறது. மக்களிடையே இன்னும் அறியாமை நிலவுகிறது. இருக்கும் வசதிகளையும் வாய்ப்புகளையும் தவறவிட்டு, மூளை, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் தடுமாறும் பெற்றோர் இன்றும் உள்ளனர்.கர்ப்பம் தரித்த நாள் முதல், பிரசவம் வரை மருத்துவப் பரிசோதனை, அல்ட்ராசோனோகிராம் மூலம் சிசுவின் வளர்ச்சி மற்றும் குறைபாடுகள் குறித்த சோதனைகள், முறையான தேகப் பயிற்சிகள், சரியான சரிவிகித உணவு போன்றவை, இப்படிப்பட்ட குழந்தைகள் பிறப்பதைத் தவிர்க்க ஓரளவுக்கு உதவக்கூடும். மாறிவரும் கலாசாரத்தில், பெண்களும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த விஷயத்தில், கவனம் தேவை.தன் குழந்தைக்கு உள்ள குறைபாடு, அதனால் ஏற்படும் மன அழுத்தம், ஏதாவது செய்யமுடியுமா என்ற ஆதங்கம்… இவை பல பெற்றோரை, அதிலும் குறிப்பாக அம்மாக்களை, இத்தகைய குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சியை பெறத் தூண்டுகின்றன. இம்மாதிரி மையங்களில் இவர்கள் சேவை செய்ய வருவது மிகவும் சிறப்பானது. இக்குழந்தைகளின் பெற்றோர், ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பதோடுஅல்லாமல், நிறைகள், குறைகள், சிரமங்கள், புதிய முறைகளில் பயிற்சி என தம் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதையும் இந்த மையத்தில் காணலாம்.மூன்றாம் வகுப்பு முதல், பன்னிரண்டாம் வகுப்பு வரை இங்கு பாடங்கள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. டெல்லி பல்கலைக் கழகத்தின் சிறப்புப் பிரிவு இந்தத் தேர்வுகளை நடத்தி, சான்றிதழ் வழங்குகிறது! மேலும், ஸ்கிரீன் பிரிண்டிங், பேப்பர் கவர்கள், கப்புகள், மெழுகுவர்த்திகள், சாக்பீஸ், ஊதுவத்திகள், ஃபினாயில் போன்றவை செய்வது இங்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது.

சமையல் கலையும் ஒரு பகுதி நேரப் பாடமாக உள்ளது.ஆண்டு விழாவில், சிறப்புக் குழந்தைகளின் யோகாசனப் பயிற்சி, சுற்றுப்புற சுகாதாரம், நிலம், நீர், காற்று இவற்றை மாசு படுத்தாமை, திருப்புகழ் பாடலுக்கு மாறுவேடமிட்டு நடனம் எனப் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மிகச்சிறப்பாகப் பயிற்சி அளித்து, குழந்தைகளை மேடையேற்றிய ஆசிரியைகள், பெற்றோர்,சமூக ஆர்வலர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்! அவர்கள் என்றென்றும் மன மகிழ்ச்சியுடனும், சிறப்புடனும் வாழ வாழ்த்துவோம்! மனித நேயத்தின் ஒப்பற்ற உதாரணம், இங்கு பணிபுரியும் மனித தெய்வங்கள்தான்.இந்த மையம் மேலும் சிறப்பாகவும், திறமையாகவும் செயல்பட, நல்ல உள்ளம் கொண்ட அனைவரும் முன்வர வேண்டும். அவர்களுக்கு எல்லா வகையான உதவிகளையும் நல்கிட வேண்டும்!தொடர்புக்குசெயலாளர்,பப்ளிக் ஹெல்த் சென்டர்.

தொலைபேசி: 044-24850211

முகவரி

சிறப்புக் குழந்தைகளுக்கான பி.வி.எஸ்.என். மூர்த்தி மையம்(பப்ளிக் ஹெல்த் சென்டரின் ஒரு பிரிவு),
27,தம்பையா சாலை,
மேற்கு மாம்பலம்,
சென்னை - 600 033

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி