'இணைய சமநிலை' கோரி இந்தியாவில் யுத்தம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 14, 2015

'இணைய சமநிலை' கோரி இந்தியாவில் யுத்தம்!

இந்தியாவில், 25 கோடி பேர், இணைய வசதியை பெற்றிருக்கும் நிலையில், 'இணைய சமநிலை' குறித்த காரசாரமான விவாதம், மறுபடியும் கிளம்பி இருக்கிறது.இது வரையிலும், இணைய சமநிலை கோரி, ஒரு லட்சம் இந்திய இணைய பயன்பாட்டாளர்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' அமைப்பிற்கு, இ - மெயில் அனுப்பியிருக்கின்றனர்.

எல்லோருக்கும் சுதந்திரமாக, சமமாக இணைய வசதி கிடைக்க செய்ய வேண்டும் என்பது தான், இணைய சமநிலை கொள்கையின் அடிப்படை.சட்டத்திற்கு புறம்பில்லாத தகவல் மற்றும் சேவைகளை இணையத்தில் பெறுவதில், இணைய சேவை வழங்குபவர்களும் அரசும், பாரபட்சம் காட்டக் கூடாது.

கூடுதல் கட்டணம்:

இந்தியாவில் இணைய சேவை வழங்கும் தனியார் நிறுவனங்கள், தங்கள் வலைப் பின்னலை பயன்படுத்தும் வாட்ஸ் ஆப், பிளிப்கார்ட், ஸ்கைப், யூ ட்யூப் போன்ற செயலி (ஆப்) நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணம் அல்லது கூடுதல் சலுகை கள் (உதாரணத்திற்கு, குறிப்பிட்ட இணையதளம் மட்டும் வேகமாக திரையில் தெரியும்படி காட்டுவது) தருவதன் மூலம் வருங்காலத்தில் வருமானம் பார்க்க முடியும். ஆனால், 'இணைய சமநிலை' இதை அனுமதிக்காது. இணைய சேவை நிறுவனமான ஏர்டெல், சமீபத்தில், 'ஏர்டெல் ஜீரோ மார்கெட்டிங் பிளாட்பார்ம்' என்ற சலுகை திட்டத்தை அறிவித்தது.இதில் சேரும் இணையதளங்கள், 'ஆப்' நிறுவனங்களை வாடிக்கையாளர்கள் அணுகும் போது, 'டேட்டா' கட்டணம் இல்லை என, அறிவித்தது. இதை ஆதரித்து, ப்ளிப்கார்ட்டின் இணை நிறுவனர் சச்சின் பன்சால் ட்வீட் செய்தார். உடனே, இணைய சமநிலைக்காக போராடும் செயற்பாட்டாளர்கள், 'ப்ளிப்கார்ட்டின் ஆண்ட்ராய்ட் ஆப்பை பயன்படுத்துபவர்கள் அதற்கு, ஒற்றை நட்சத்திர மதிப்பீடு தாருங்கள்' என, பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர்.'இப்படியே விட்டால் யார், எதை, எப்படி, எப்போது எவ்வளவு கட்டணத்தில் பார்க்கலாம் என்றோ, இப்போது சட்டப்பூர்வமாக, இலவசமாக கிடைக்கும் சில தளங்களின் சேவைகளை தடுக்கவோ, இணைய சேவை நிறுவனங்கள் துணிந்துவிடும்' என, இணைய சமநிலை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆதரவு:

ஏற்கனவே அமெரிக்கா, சிலி, நெதர்லாந்து, பிரேசில் ஆகிய நாடுகளின் அரசுகள், 'இணைய சமநிலை'க்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.ஆனால், இந்திய அரசு, இது விஷயத்தில் இப்போது வரையிலும் இழுத்தடித்து வருகிறது. இணைய சமநிலை பற்றி பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் வல்லுனர்கள் கருத்துக்களை அறிய, ஏப்ரல் 24 தேதி வரை, அது கெடு விதித்திருக்கிறது.இதற்காக, இணையத்தில் டிராய் வெளியிட்டிருக்கும் கருத்தறியும் முன்வரைவு அறிக்கை, 118 பக்கம் நீள்கிறது.இத்தனை பெரிய அறிக்கையை பொதுமக்கள், எப்படி படித்து கருத்தை தெரிவிக்க முடியும் என்ற நையாண்டியும், இணையத்தில் உலாவருகிறது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களின்இணையதள சேவை குறித்து, ஏ.கே.பார்கவா தலைமையிலான, ஆறு பேர் குழு ஆய்வு செய்கிறது. அடுத்த மாதம் இரண்டாம் வாரத்திற்குள், இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கை யின் அடிப்படையில், 'இணையதள நடுநிலைக் கொள்கை'யை அமல்படுத்த, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
ரவிசங்கர் பிரசாத்
மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி