நேதாஜி மாயமான சர்ச்சை இன்று அலசப்படுவது ஏன்? (தலையங்கம்) - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2015

நேதாஜி மாயமான சர்ச்சை இன்று அலசப்படுவது ஏன்? (தலையங்கம்) - தினமலர்

ஐம்பதாண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட நேதாஜி மாயமான தகவல், இன்று சற்று வித்தியாசமாக, அவர் குடும்பத்தை புலனாய்வுத்துறை உளவு பார்த்த விஷயத்துடன் சேர்ந்து எதிரொலிக்கிறது.

காங்கிரஸ் தலைவராக, 1938ல் தேர்வு செய்யப்பட்ட நேதாஜி, மகாத்மா காந்தி மற்றும் பண்டித நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கட்சியில் இருந்து விலகினார். அவர் உருவாக்கிய கட்சிக்கு, 'பார்வர்டு பிளாக்' என்று பெயர். காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், அகிம்சை என்ற தத்துவத்தை விட, பிரிட்டிஷாரை விரட்ட போர்ப்படை தேவை என்ற நோக்கில், ஐ.என்.ஏ., அமைப்பை உருவாக்கியவர். இந்திய தேசிய ராணுவ அமைப்பின் தலைவராக அவர் நிகழ்த்திய செயல்கள், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் வீடு தோறும் பேசப்பட்டன. ஆனால், அவரது பரபரப்பு உத்திகள், பிரிட்டிஷாரின் எதிரியாக அவர் மாற நேரிட்டது. கோல்கட்டாவில் அவரது வீட்டில் இருந்து, 1940ம் ஆண்டு அவர் தப்பி, பின் அவர் இந்திய மக்களுக்கு ஆற்றிய வானொலி உரைகள், வீரம் செறிந்தவை. விமான விபத்தில், 1945ல் இறந்தார் என்ற கருத்து பலராலும் நம்பப்படவில்லை. அன்று அவரைத் தலைவராக ஏற்ற, தமிழக அரசியலில் சிறப்புப் பெற்ற முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி சீனத்தளபதி உருவில் இருக்கிறார் என்று உறுதியாக கூறியது உண்டு.

அவர், 1958ம் ஆண்டு ஜன.,8ம் தேதி சென்னையில், 'ஜனநாயக காங்கிரஸ்' கட்சி சார்பில், 'நேதாஜி இறந்தார் என்ற விஷயத்தை காங்கிரஸ் இடைத்தட்டு தலைவர்கள் பிரசாரம் செய்கின்றனர். பிரதமர் நேருவும், ஜனாதிபதி ராஜேந்திர பாபுவும் சமீபத்தில் ஜப்பான் சென்றபோது, அங்கு இருந்த நேதாஜியின் அஸ்தி என்று சொல்லப்படுவதில் ஒரு பகுதியை இந்தியாவுக்கு கொண்டு வர, அவர்களை எந்த சக்தி தடுத்தது?' என்று கேள்வி எழுப்பினார். நேதாஜியை கோல்கட்டாவில் இருந்து தப்ப உதவிய, அவரது நெருங்கிய உறவினர் சிசிர் போஸ் உட்பட, பலரையும் அன்றைய அரசு உளவு பார்த்திருக்கிறது. சிசிர் போஸ் மகன் சுகதோ போஸ் இத்தகவல்கள் அடங்கிய ரகசிய பைல்கள், இனி மக்கள் பார்வைக்கு வர வேண்டும் என்கிறார். பிரதமர் மோடி ஜெர்மனி சென்றபோது, அவரிடமும் இந்த விஷயம் பற்றி நேதாஜியின் உறவினர்கள் கூறி உள்ளனர். காந்தி, நேரு பின்பற்றிய அரசியல் நெறிகளுக்கு ஆகாதவர் நேதாஜி. மேற்கு வங்கத்தில் மட்டும் அல்ல; தமிழகத்திலும் சென்ற தலைமுறையினர் பலரும் ஜாதி வித்தியாசமின்றி, போஸ் என்ற பெயரை, மகன்களுக்கு சூட்டி மகிழ்ந்தது உண்டு. ரகசிய பைல்களை வெளிக்கொண்டு வந்தால், நேரு காலத்தில் பணியாற்றிய படேல், லால்பகதூர் சாஸ்திரி, கட்ஜூ போன்ற மாபெரும் உள்துறை அமைச்சர்களை அவமதிப்பதாக இருக்கும் என்பது அர்த்தமற்ற வாதம். நேதாஜி தொடர்பான அர்த்தமுள்ள ஆவணம் எது வெளிவந்தாலும், அது இந்திய சரித்திரத்திற்கு வலு சேர்க்கும். அப்படிப் பார்த்தால், சாஸ்திரி பேரன் ஒருவர் சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில், தன் தாத்தா, தாஷ்கண்ட் ஒப்பந்தத்திற்காக மேற்கொண்ட ரஷ்யப் பயணத்தில் மர்மமாக இறந்து, அவர் உடல் கொண்டு வரப்பட்டது என்றும், ஆனால் குடல் சுத்தம் செய்யப்பட்டிருந்ததாக இப்போது கூறுகிறார். இந்த சந்தேக கேள்விக்கு விடை கிடைப்பது சிரமம். அதே போல, இன்று மத்தியில் ஆளும் பா.ஜ.,வின் உருவாக்கத்திற்கு காரணமான, சியாமபிரசாத் முகர்ஜி, ஷேக் அப்துல்லா முதல்வராக இருந்த போது, தடையை மீறி காஷ்மீர் சென்றதால், சிறைபிடிக்கப்பட்டு, அங்கு மாண்டார். அவர் மறைவை விசாரிக்கக்கோரி, மார்க்சிஸ்ட் தலைவரான சோம்நாத் சாட்டர்ஜியின் தந்தையும் பிரபல வழக்கறிஞருமான என்.சி.சாட்டர்ஜி, பண்டித நேருவுக்கு எழுதிய கடிதம், இன்றும் ஆவணமாக உள்ளது. விசாரணை முடிவு என்ன ஆனது? இம்மாதிரி பழைய விஷயங்கள் பெரிதாக இப்போது அணி வகுக்கின்றன. இவைகளை பார்க்கும் போது, நம் வரலாற்றில் பிரிட்டிஷ் சிந்தனையும், சாயலும் மட்டுமே நீடிக்கிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி