தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கலை பாடப்பிரிவுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் 100 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது; 2010ம் ஆண்டு வரை தரம் உயர்த்தப்பட்ட 2,200 பள்ளிகளுக்கு ஐந்து அறிவியல் பாட ஆசிரியர்கள் பணியிடங்களே வழங்கப்பட்டன.
கலை பாட ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்படவில்லை.கடந்த 2011ம் ஆண்டு முதல், அறிவியல் மற்றும் கலை என இரு பாடப்பிரிவுக்கும் சேர்த்து, ஒன்பது பணியிடங்கள் வழங்கப்பட்டன. கலை பாடப்பிரிவு இல்லாத சில பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் பொறுப்பில், தற்காலிக ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலான பள்ளிகளில், கலை பாடப்பிரிவு ஆசிரியர்கள் இல்லை.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த ஊதியத்தை, பல ஸ்பான்சர்களை பிடித்து பெற்றுத்தருவதற்கு, ஒவ்வொரு மாதமும் தலைமையாசிரியர்கள் திணறி வருகின்றனர்.
தற்காலிக ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பான பிரச்னைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல், கலைப் பிரிவு பாடத்தை மூடிவிட வாய்மொழி உத்தரவு பிறப்பிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கோவை மாவட்டத்தில், ஆசிரியர்கள் பற்றாக்குறையாலும், தற்காலிக ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் கிடைக்காததாலும், பல பள்ளிகளில் கலை பாடப்பிரிவு மூடும் நிலையை எட்டியுள்ளது.சமீபகாலமாக, கல்லுாரிகளில் கலை பாடப்பிரிவில் மாணவர்கள் அதிக அளவில் சேர முன்வருகின்றனர். இதனால், பிளஸ் 1 வகுப்புகளில் கலைப் பிரிவுகளில் சேர, மாணவர்கள் அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர். அரசு பள்ளிகளை நம்பி வரும் மாணவர்கள், இறுதி வரை ஆசிரியர்கள் இல்லாமல் படிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
தமிழ்நாடு தலைமையாசிரியர்கள் சங்க மாநில ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,"பெரும்பாலான பள்ளிகளில் கலைப்பிரிவு ஆசிரியர்கள் இல்லை; சில பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர்கள் கழகம் சார்பில் குறைவான ஊதியத்தில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, எளிமையான பாடமாக இருப்பினும் மாணவர்கள் தோல்விஅடையும் சூழல் ஏற்படுகிறது. கலைப் பிரிவு இல்லாவிட்டால் விட்டால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்" என்றார்.
history ullitta kalaippada pirivukku mukkiyathuvam kodunkka.
ReplyDelete