கல்வி உரிமைச் சட்டம்; தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.97 கோடி தர வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2015

கல்வி உரிமைச் சட்டம்; தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.97 கோடி தர வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள ரூ.97 கோடி செலவை மத்திய அரசு திருப்பித் தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
இது குறித்து பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஏழைகள், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இந்த ஒதுக்கீட்டில், 2013-14-ஆம் கல்வியாண்டில் 49 ஆயிரத்து 864 குழந்தைகளும், 2014-15 ஆம் கல்வியாண்டில் 86 ஆயிரத்து 729 குழந்தைகளும் தனியார் பள்ளிகளின் அறிமுக வகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகள் இதற்கான செலவினமாக 2013-14-ஆம் ஆண்டில் ரூ.25.13 கோடியையும், 2014-15-ஆம் ஆண்டில் ரூ.71.91 கோடியையும் கேட்டு மாநில அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக, அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மாநில இயக்குநர், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு 2013-14-ஆம் ஆண்டுக்கான செலவு ஈட்டுத் தொகையாக ரூ.25.13 கோடியைக் கேட்டு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான பதில் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
இதற்கிடையில் 2014-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான கட்டணம் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். ஆனால், இந்த செலவினமானது 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மட்டுமே கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு எடுத்த இந்த தன்னிச்சையான முடிவின் காரணமாக, தமிழக அரசு 2013-14-ஆம் ஆண்டில் தனியார் பள்ளிகளில் நடைபெற்ற சேர்க்கைகளுக்காகக் கோரிய ரூ 25.13 கோடி வழங்கப்படவில்லை. மேலும், 2014-15-ஆம் ஆண்டுக்குரிய தொகையான ரூ.71.91
கோடி என்பது வெறும் ரூ.14 லட்சம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணம் மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு எடுத்துள்ள முடிவே இந்தக் கட்டண குறைப்புக்குக் காரணம். இந்த நடவடிக்கை கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்பில் இருந்துதான் மாணவர்களை சேர்த்து வருகின்றனர். 

இதன் காரணமாக நேரடியாக ஒன்றாம் வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பது கடினமான ஒன்று என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
இதன் காரணமாக நலிந்த பிரிவு மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இடம் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் இந்த சேர்க்கைக்கான முழு செலவுத் தொகையையும் மாநில அரசே ஏற்க வேண்டியுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்துள்ள நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவிட்டால் ஏற்கெனவே 2013-14, 2014-15 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள 1 லட்சத்து 36 ஆயிரத்து 593 குழந்தைகளின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும்.

இத்தகைய ஒரு சூழ்நிலையிலும், வரும் கல்வியாண்டிலும் (2015-16) தனியார் பள்ளிகளில் ஏழைகள், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு தொடந்து கடைப்பிடிக்கும்.
எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, கல்வி உரிமைச் சட்ட விதிகளை சரியாகக் கடைப்பிடிக்குமாறு மனித வள மேம்பாடு துறையை அறிவுறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு ஏற்பட்ட செலவு தொகையான ரூ. 97.04 கோடியை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என அறிவுறுத்த வேண்டும் என்று தனது கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி